கோவில் வளாகத்தில் தீட்சிதர்கள் கிரிக்கெட் விளையாடியதில் எந்த தவறும் இல்லை - எச்.ராஜா

2 hours ago 2

சிதம்பரம்,

சிதம்பரம் நடராஜர் கோவில் ஆயிரங்கால் மண்டபம் அருகே உள்ள ஒரு திடலில் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் சுமார் 15-க்கும் மேற்பட்டோர் நேற்று முன்தினம் அங்கு கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். இதைப் பார்த்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முகாம் செயலாளரான இளையராஜா அங்கு கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த தீட்சிதர்களை தனது செல்போனில் வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது.

இதனை பார்த்த தீட்சிதர்கள் இளையராஜாவிடம் ஏன் வீடியோ எடுக்கிறாய்?. அந்த வீடியோவை உடனே அழிக்க வேண்டும் என்று கூறியதாக சொல்லப்படுகிறது. இதில் காயமடைந்த இளையராஜா சிதம்பரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் அவர் தன்னை தாக்கிய தீட்சிதர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சிதம்பரம் நகர போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதையடுத்து வி.சி.க. பிரமுகரை தாக்கியதாக 5 தீட்சிதர்கள் மீது நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குள் கிரிக்கெட் விளையாடிய தீட்சிதர்களுக்கு பாஜக ஒருங்கிணைப்பாளர் எச்.ராஜா ஆதரவு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், "உடற்பயிற்சி எல்லோருக்கும் வேண்டும். சிதம்பரம் கோவில் வளாகத்தில் தீட்சிதர்கள் கிரிக்கெட் விளையாடியதில் எந்த தவறும் இல்லை. கோவில் கருவறையில் கிரிக்கெட் விளையாடினால்தான் தவறு" என்று எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

Read Entire Article