
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் அருகே வாலாந்தரவை தெற்கு காட்டூர் பகுதியை சேர்ந்தவர் கேசவன் (வயது 56). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவர் கடந்த 10-ந்தேதி அப்பகுதியில் உள்ள கோவிலில் நடந்த பங்குனி உத்திர திருவிழாவில் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினார்.
அப்போது எதிர்பாராதவிதமாக பூக்குழியில் தவறி விழுந்தார். இதில் பலத்த தீக்காயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்தநிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த கேசவன், இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மனைவி விக்னேஸ்வரி கொடுத்த புகாரின்பேரில் ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.