பனாஜி: கோவாவில் கோவில் திருவிழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். கோவா மாநிலம் ஸ்ரீகாவோவில் நூற்றாண்டு பழமை வாய்ந்த லைராய் தேவி கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாவை முன்னிட்டு, 50,000த்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கோவிலில் திரண்டனர். அதிகாலையில் கட்டுக்கடங்காமல் பக்தர்கள் திரண்டதால், அந்த கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 50க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள கோவா முதல்வர் பிரமோத், வடக்கு கோவா மாவட்ட மருத்துவமனைக்குச் சென்று காயம் அடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். கூட்ட நெரிசலுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், லைராய் தேவி கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில், சிக்கி உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,”கோவாவில் கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர்கள் உயிரிழந்த நிகழ்வு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து கொள்கிறேன்.காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உள்ளூர் நிர்வாகம் உதவி செய்து வருகிறது,”என கூறியுள்ளார்.
The post கோவாவில் கோவில் திருவிழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பரிதாபமாக உயிரிழப்பு; 50 பேர் படுகாயம் : பிரதமர் மோடி இரங்கல்!! appeared first on Dinakaran.