குளுகுளுவென வரவேற்கும் இளவரசி: சுற்றுலா பயணிகள் குதூகல விசிட்

2 days ago 6

கொடைக்கானல்: தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வரும் நிலையில், கொடைக்கானலில் குளுகுளு காலநிலையுடன் சீசன் களைகட்டுவதால் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் குவிந்து வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பிரபல சுற்றுலா தலமான கொடைக்கானல் மலைகளின் இளவரசி என அழைக்கப்படுகிறது. வானுயர்ந்த மலை முகடுகள், இயற்கையழகு, வியூ பாய்ண்ட்கள், சுற்றிப்பார்க்க ஏராளமான இடங்கள், குளுகுளு கால நிலையும் காணப்படுவதால் எப்போது கோடை சீசன் இங்கு களைகட்டும். இந்த ஆண்டும் கோடை விடுமுறை தொடங்கியதில் இருந்தே கோடை சீசனை அனுபவிப்பதற்கும், இதமான சூழலை ரசிப்பதற்கும் சுற்றுலா பயணிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

வார விடுமுறை தினமான இன்று சுற்றுலா பயணிகளின் வருகை வழக்கத்தைக் காட்டிலும் அதிக அளவில் உள்ளது. தற்போது கொடைக்கானலுக்கு வார நாட்களில் 4000 சுற்றுலா வாகனங்களும், வார இறுதி நாட்களில் 6000 வாகனங்களும் இ-பாஸ் முறையில் அனுமதிக்கப்படுகின்றன. இந்த நிலையில் இன்று சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் வருகை அதிக அளவில் உள்ளது. கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் ஓரிரு வாரங்களில் பூங்கா முழுவதும் கோடிக்கணக்கான பூக்கள் பூத்து குலுங்கவுள்ளன. தற்போது மேரி கோல்ட், பேன்சி , பெட்டூனியா, ஸ்டார் ஃப்ளக்ஸ், ரோஜா மலர்கள் என லட்சக்கணக்கான மலர்கள் பூத்துக்குலுங்கும் அழகை சுற்றுலா பயணிகள் ஆர்வமாக சுற்றி வந்து ரசிக்கின்றனர்.

மேலும் நட்சத்திர ஏரி, தூண் பாறை, மோயர் பாய்ண்ட், குணா குகை, பேரிஜம் ஏரி, பைன் காடுகள், கோக்கர்ஸ் வாக் என முக்கியமான சுற்றுலா இடங்கள் அனைத்திலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது. அவர்கள் உற்சாகமாக போட்டோக்கள், செல்பி எடுத்து பொழுதைக் கழித்து வருகின்றனர்.

The post குளுகுளுவென வரவேற்கும் இளவரசி: சுற்றுலா பயணிகள் குதூகல விசிட் appeared first on Dinakaran.

Read Entire Article