சென்னை,
சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கோவளம் ஹெலிகாப்டர் சுற்றுலா திட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டது வரவேற்கத்தக்கது என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-
"சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் கோவளத்தை மையமாக வைத்து நடத்தப்பட்டு வந்த தனியார் நிறுவனத்தின் ஹெலிகாப்டர் சுற்றுலா சேவைக்கு செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் தடை விதித்திருக்கிறார். சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது.
கோவளம் ஹெலிகாப்டர் சுற்றுலா திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கடந்த ஓராண்டுக்கும் மேலாக வலியுறுத்தி வருகிறேன். இது தொடர்பாக கடந்த ஜனவரி மாதம் 21-ஆம் நாள் வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை செயலாளருக்கும் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டருக்கு நான் கடிதம் எழுதினேன், அதைத் தொடர்ந்து சில மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஹெலிகாப்டர் சுற்றுலா சேவை கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மீண்டும் தொடங்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து ஹெலிகாப்டர் சுற்றுலாவால் சுற்றுச்சூழல், கிழக்குக் கடற்கரைச் சாலையின் பல்வேறு பகுதிகளுக்கு வலசை வரும் பறவைகள் ஆகியவற்றுக்கு ஏற்படும் பாதிப்புகள், சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்புக்கு ஏற்படும் அச்சுறுத்தல்கள் ஆகியவற்றை சுட்டிக்காட்டி ஹெலிகாப்டர் சுற்றுலா திட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த செப்டம்பர் 14-ஆம் தேதி அறிக்கை வெளியிட்டிருந்தேன்.
அதன் பயனாகவே சுற்றுலா பயணிகளுக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்பிருப்பதை காரணம் காட்டி ஹெலிகாப்டர் சுற்றுலாவை தடை செய்துள்ள செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர், அதன் கோவளம் அலுவலகத்திற்கு தடை விதித்திருக்கிறார். அந்த வகையில் இது பாட்டாளி மக்கள் கட்சிக்கு கிடைத்த வெற்றி ஆகும். ஆனால், இது போதுமானதல்ல. கிழக்குக் கடற்கடைச் சாலையில் ஹெலிகாப்டர் சுற்றுலா என்ற தத்துவத்திற்கே முடிவு கட்டினால் தான் சுற்றுச்சூழலையும், பறவைகளையும் பாதுகாக்க முடியும்.
இயற்கையின் கொடையாக, உலகப்புகழ் பெற்ற வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு இணையாக கோவளத்திற்கு அருகில் உள்ள பள்ளிக்கரணை சதுப்புநிலம், பெரும்பாக்கம் சதுப்புநிலம், சிறுதாவூர் ஏரி, நன்மங்கலம் காப்புக் காடு ஆகிய பகுதிகளும் அதிக எண்ணிக்கையில் பறவைகள் வலசை வரும் பகுதி ஆகும். இயற்கையாக நமக்கு கிடைத்த இந்த வரத்தை நாம் பாதுகாக்க வேண்டும்.
ஆனால், ஹெலிகாப்டர் சுற்றுலா திட்டம் இந்த வரத்தை சிதைத்துக் கொண்டிருக்கிறது. ஹெலிகாப்டர் சுற்றுலாவிற்கு இப்போது தடை விதிக்கப்பட்டிருந்தாலும் கூட, எதிர்காலத்தில் இதே நிறுவனத்திற்கோ அல்லது வேறு நிறுவனத்திற்கோ ஹெலிகாப்டர் சுற்றுலா நடத்த அனுமதி அளிக்கப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. அந்த வாய்ப்புகள் அகற்றப்பட வேண்டும்.
கோவளம் பகுதியில் ஹெலிகாப்டர் சேவை செயல்படுத்தப்படுவதால், கிழக்குக் கடற்கரை சாலையில் சுற்றுலா எந்த அளவுக்கு வளர்ச்சியடையுமோ, அதை விட அதிக சுற்றுலா வளர்ச்சியை, அப்பகுதியை பாதுகாக்கப்பட்ட பறவைகள் வாழிடமாக அறிவிப்பதன் மூலம் எட்ட முடியும்.
இதைக் கருத்தில் கொண்டு கோவளம் பகுதியில் செயல்படுத்தப்பட்டு வரும் ஹெலிகாப்டர் சுற்றுலா திட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியை தமிழக அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும். அத்துடன் கிழக்குக் கடற்கரை சாலையை பாதுகாக்கப்பட்ட பறவைகள் வாழிடமாக அறிவிக்க வேண்டும்."
இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.