கோவளம் கடற்கரையில் தொடர் மீன் திருட்டில் ஈடுபட்ட வாலிபர், இளம்பெண் சிக்கினர்: அதிகாலையில் பைக்கில் வந்து கைவரிசை

3 months ago 19

சென்னை: கோவளம் கடற்கரையில் மீனவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்களை தொடர்ச்சியாக திருடி வந்த தாம்பரம் மீன் வியாபாரிகள் 2 பேரை, போலீசார் கைது செய்தனர். கிழக்கு கடற்கரை சாலை, கோவளம் பகுதியில் உள்ள மீனவர்கள் தினசரி படகுகளில் கடலுக்கு சென்று மீன்களை பிடித்து, நள்ளிரவில் கரைக்கு திரும்பி வருவது வழக்கம். அப்போது, கடற்கரையில் படகுகளை நிறுத்திவிட்டு, தெர்மாகோல் பெட்டிகளில் மீன்களை வைத்துவிட்டு, தங்கள் வீடுகளுக்கு சென்று விடுவர். மீண்டும், காலையில் வந்து இந்த மீன்களை எடுத்து வியாபாரம் செய்வது வழக்கம். இந்நிலையில், கடந்த சில நாட்களாக இவ்வாறு வைக்கப்படும் பெரிய அளவிலான மீன்கள் திருடு போனது. இதையடுத்து யாருக்கும் தெரியாமல் கடற்கரை பகுதிகளில் மீனவர்கள் கேமராக்களை பொருத்தினர். பின்னர், இந்த கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில் மர்ம நபர்கள் பைக்குகளில் வந்து மீன்களை திருடி செல்வது தெரியவந்தது.

இதைதொடர்ந்து, மீன் திருடர்களை பிடிக்க படகுகளில் தூங்குவதுபோல் பதுங்கி இருந்தனர். அதன்படி, கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 10க்கும் மேற்பட்ட மீனவர்கள் படகுகளில் பதுங்கி இருந்தனர். அப்போது, நேற்று அதிகாலை 4 மணியளவில் ஒரு பெண்ணும், ஆணும் பைக்கில் வந்து தெர்மாகோல் பெட்டியில் வைத்திருந்த மீன்களை திருடி, தங்களின் பெட்டிகளில் வைத்து அடுக்கினர். அப்போது, பதுங்கியிருந்த மீனவர்கள், 2 பேரையும் மடக்கி பிடித்தனர். பின்னர், அவர்களிடம் விசாரித்தபோது 2 பேரும் தாம்பரம் மீன் மார்க்கெட்டில் மீன் விற்பனை செய்து வரும் ஜூலி (27), நிவேதன் (19) என்பது தெரியவந்தது. இதனையடுத்து, 2 பேரையும் கேளம்பாக்கம் போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், மீன் திருட்டில் ஈடுபட்ட 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

The post கோவளம் கடற்கரையில் தொடர் மீன் திருட்டில் ஈடுபட்ட வாலிபர், இளம்பெண் சிக்கினர்: அதிகாலையில் பைக்கில் வந்து கைவரிசை appeared first on Dinakaran.

Read Entire Article