
காஷ்மீர்,
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இந்தியா தயாராகி வருகிறது. இந்த தாக்குதலுக்கு பின்னால் பாகிஸ்தான் இருப்பதாக இந்தியா குற்றம்சாட்டியுள்ளது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையில் போர் பதற்றம் நிலவி வருகிறது. நாளை நாடு தழுவிய போர் ஒத்திகை நடத்தப்படுகிறது.
இந்த நிலையில் மக்களவை எம்.பி.யும், ஏ.ஐ.எம்.ஐ.எம். தலைவருமான அசாதுதீன் ஓவைசி, பஹல்காம் தாக்குதலுக்கு இந்தியாவின் பதிலடி பயனுள்ளதாக இருக்க வேண்டும் எனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது;
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் காட்டுமிராண்டித்தனமான மற்றும் ஒரு கோழைத்தனமான தாக்குதல். பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் 26 பேரைக் கொன்றதை நாம் பார்த்திருக்கிறோம். பெண்கள் மற்றும் குழந்தைகள் தனித்து விடப்பட்டு, ஆண்களை மட்டும் குறிவைத்து அவர்களின் மதம் என்ன? என்று கேட்டு தாக்குதல் நடத்தப்பட்டது மனிதாபிமானமற்றது. காஷ்மீரில் இருந்து சுற்றுலாப் பயணிகள் அதிக எண்ணிக்கையில் வெளியேறி விட்டனர்.
பஹல்காம் தாக்குதலுக்கு எதிரான இந்தியாவின் பதிலடி பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அனைத்துக் கட்சி கூட்டத்திலும் நாங்கள் அதையே கூறியுள்ளோம். பஹல்காம் தாக்குதல் தொடர்பாக விசாரணைக்கு அழைத்துச் சென்ற வாலிபர் உயிரிழந்தது தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும்."
இவ்வாறு ஓவைசி தெரிவித்துள்ளார்.