
கோலார் தங்கவயல்,
கோலார் தங்கவயல் டவுனில் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகம் உள்ளது. அதன் அருகே உரிகம் ரெயில் நிலையம் செல்லும் சாலையில் அம்பேத்கர் பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்கா நகரசபை சார்பில் அமைக்கப்பட்டுள்ளது. இதில், அம்பேத்கர் மற்றும் தங்கவயல் முன்னாள் எம்.எல்.ஏ. சி.எம்.ஆறுமுகம் சிலைகள் அமைந்துள்ளன. இந்த பூங்காவில் செடி, கொடிகள் வளர்ந்திருந்தது.
இதை அகற்றி சுத்தம் செய்து கொடுக்க வேண்டும் என்று கடந்த வாரம் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். மேலும் இதுதொடர்பான செய்தி 'தினத்தந்தி' நாளிதழில் வெளியானது. இதையடுத்து நகரசபை நிர்வாகம் பொக்லைன் எந்திரம் மூலம் அம்பேத்கர் பூங்காவில் உள்ள செடி, கொடிகளை அகற்றி சுத்தம் செய்தது.
இதற்கு பொதுமக்கள் நகரசபை நிர்வாகத்திற்கும், தினத்தந்தி நாளிதழுக்கும் பாராட்டும், நன்றியும் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:- அம்பேத்கர் பூங்காவுக்கு மாலை நேரங்களில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை நடைபயிற்சி செய்ய வருவார்கள். அவ்வாறு வருபவர்கள் நடைபயிற்சி முடிந்து சிறிது நேரம் பூங்காவில் அமர்ந்து ஓய்வு எடுத்துவிட்டு செல்வார்கள்.
இந்த நிலையில், கடந்த சில நாட்களாக அம்பேத்கர் பூங்கா சீரமைக்கப்படவில்லை. இதனால் பூங்காவில் செடி, கொடிகள் வளர்ந்து புதர்கள்போல் காட்சி அளித்தது. இதுகுறித்து நகரசபை நிர்வாகத்தில் புகார் அளித்தோம். மேலும், இதுகுறித்த செய்தி 'தினத்தந்தி' நாளிதழில் வெளியானது. இதன்மூலம் நகரசபை நிர்வாகிகளின் கவனத்துக்கு சென்றது.
இதையடுத்து அம்பேத்கர் பூங்காவில் புதர்கள் போல் வளர்ந்திருந்த செடி, கொடிகளை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றப்பட்டது. பின்னர் குப்பை கழிவுகள் தூய்மை பணியாளர்கள் மூலம் அகற்றினர். இதற்கு 'தினத்தந்தி' நாளிதழுக்கும், நகரசபைக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.