கோர்ட்டுக்கு வந்த கணவருக்கு கும்மாங்குத்துவிட்ட மனைவி

3 hours ago 2

திருவள்ளூர்: திருவாலங்காடு பகுதியை சேர்ந்தவர் சத்யா. இவருக்கும், ஆந்திர மாநிலம் காளஹஸ்தி பகுதியை சேர்ந்த உறவுக்காரரான முனீந்திராவுக்கும் கடந்த 10 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இந்நிலையில் முனீந்திரா, தொழில் செய்வதற்கு மனைவி சத்யா பெயரில் வங்கியில் 10 லட்ச ரூபாய் கடன் வாங்கியுள்ளார். மேலும் தன்னிடமிருந்த 40 சவரன் நகையை அடகுவைத்து கணவருக்கு ஆந்திராவில் கோழி பண்ணை வைத்து கொடுத்துள்ளார்.

இதனிடையே, முனீந்திராவுக்கும், வேறு பெண்ணுக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் சத்யாவுக்கு தெரியவந்துள்ளது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் முனீந்திரா, ஆந்திர மாநில நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்து சத்யாவை வீட்டைவிட்டு வெளியேற்றியுள்ளார். இந்நிலையில் திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஜீவனாம்சம் கேட்டு சத்யா வழக்கு தொடுத்துள்ளார்.

கடந்த ஒரு ஆண்டாக திருவள்ளூர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் நேற்று சத்யா, முன்னாள் கணவர் முனீந்திரா ஆகியோர் திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜராகி வாய்தாவை முடித்துவிட்டு சென்றனர். சென்னை-திருப்பதி நெடுஞ்சாலையில் ஆட்டோவில் வந்தபோது முனீந்திரா மற்றும் உறவுக்கார பெண்ணை வழி மடக்கி சத்யா சரமாரி தாக்கியுள்ளார்.

இதனால் பயந்து போன முனீந்திராவுடன் வந்த உறவுக்கார பெண், ஆட்டோவின் மறுபக்கத்தில் எகிறி குதித்து தப்பிக்க முயன்றபோது கீழே விழுந்ததில் காயமடைந்தார். சாலையில் வாகனங்களில் சென்றவர்கள் ஒரு நிமிடம் வேடிக்கை பார்த்ததால் சிறிது போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து சத்யாவுடன் வந்த வழக்கறிஞர்கள் தடுத்துநிறுத்தி, இருவரையும் காவல் நிலையம் அழைத்து சென்றனர். அங்கு போலீசார் இருவரிடமும் விசாரித்தனர்.

முனீந்திராவுக்கு தமிழ் தெரியாததால் உறவுக்கார பெண் தமிழ் பேச கூடியவர் என்பதால் நீதிமன்றத்திற்கு அழைத்து வந்ததும் வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக நினைத்து சத்யா இருவரையும் தாக்கியதும் தெரிய வந்ததுள்ளது. இதனிடையே நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் இரு தரப்பையும் போலீசார் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

The post கோர்ட்டுக்கு வந்த கணவருக்கு கும்மாங்குத்துவிட்ட மனைவி appeared first on Dinakaran.

Read Entire Article