
திருச்சி,
டாஸ்மாக் அமலாக்கத்துறை சோதனை விவகாரம் தொடர்பாக தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகத்தின் மேல்முறையீட்டு மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மற்றும் நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் மாசிஹ் அடங்கிய அமர்வில் இன்று காலை விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், தனி நபர்கள் செய்த விதி மீறலுக்காக ஒட்டுமொத்தமாக ஒரு நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுப்பதா? என கேள்வி எழுப்பி அமலாக்கத்துறை வரம்பு மீறி நடக்கிறது என கண்டனம் தெரிவித்தனர். மேலும், அமலாக்கத்துறையானது அனைத்து எல்லையையும் தாண்டி செயல்பட்டு கூட்டாட்சி அமைப்பை சிதைத்துள்ளது என நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
டாஸ்மாக் முறைகேடு தொடர்பான விவகாரத்தில், அமலாக்கத்துறையினர் மேற்கொண்டு விசாரணை நடத்த தடை விதித்த நீதிபதிகள், தமிழ்நாடு அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகத்தின் மேல்முறையீட்டு மனுவுக்கு பதிலளிக்க அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டனர்.
இந்த நிலையில், டாஸ்மாக் விவகாரத்தில் கோர்ட்டு எங்களுக்கு நியாயம் வழங்கியுள்ளது என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். இது குறித்து திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் கூறியதாவது;-
"அமலாக்கத்துறையை வைத்துக் கொண்டு மத்திய அரசு அனைவரையும் மிரட்டுகிறது. தனி நபர் செய்யும் குற்றத்திற்கு ஒரு அரசு துறையை குற்றம் சாட்டுவதா? என கோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது. எங்களுக்கு கோர்ட்டுதான் புகலிடம். இன்று கோர்ட்டு எங்களுக்கு நியாயம் வழங்கியுள்ளது."
இவ்வாறு அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.