‘‘கப்சிப்ன்னு இருந்தாலும் கோயில் கோயிலாக சுற்றி வர்றாராமே இலை கட்சியின் மாஜி அமைச்சர் தெரியுமா?..’’ என்றபடி வந்தார் பீட்டர் மாமா.‘‘டெக்ஸ்டைல் மாவட்டத்தை சேர்ந்த இலை கட்சியின் மாஜி அமைச்சர் கப்சிப்னு இருந்து வருகிறாராம்.. தனக்கு நெருக்கமானவர்களை மட்டும் அவ்வப்போது அழைத்து பேசுகிறாராம்.. அதுவும், ஒரு சில வார்த்தைகளோடு முடித்துக் கொள்கிறாராம்.. கடந்த காலங்களை போல், பேசுவது கிடையாதாம்.. இது இலை கட்சியின் நிர்வாகிகளுக்கு அப்செட்டை ஏற்படுத்தியுள்ளதாம்.. இருந்தாலும், இலை கட்சியின் மாஜி அமைச்சர் கோயில் கோயிலாக சுற்றி வருகிறாராம்.. ஏதோ முக்கிய நேர்த்திக் கடன் வைத்துள்ளாராம்.. அதை நிறைவேறும் வரைக்கும் கோயில் கோயிலாக அவர் சுற்றுவாராம்… தற்போது, டெக்ஸ்டைல் மாவட்டத்தை தலைமை கூட பெரிதாக கண்டுகொள்ளவதே இல்லையாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘இலைக்கட்சி தலைவருக்கு டப் கொடுக்கும் நிழலானவர்பற்றி சொல்லுங்க..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘இலைக்கட்சி தலைவரின் சொந்த ஊரான மாங்கனி மாவட்டத்துல புறநகரில் மட்டும் எட்டு தொகுதிகள் அடங்கியிருக்கு.. இதன் செயலாளராக இலைக்கட்சி தலைவரின் நிழலானவர் இருக்காரு.. இதில் நாலு தொகுதியில் இலைக்கட்சி தலைவரின் மைத்துனரின் கை ஓங்கியிருப்பதாக கட்சிக்காரங்க சொல்றாங்க.. இதனால இந்த பக்கம் நிழலானவரு தலைவச்சிக்கூட படுப்பதில்லையாம்.. ஆனால் இலைக்கட்சி தலைவரோ, நிழலானவர் 4 தொகுதியில் கூட்டத்தை முடித்துவிட்டார், மற்ற 4 தொகுதி நிர்வாகிகள் அவரிடம் கேட்டு கூட்டத்தை நடத்துங்கன்னு சொல்லியிருக்காரு.. ஆனால் நிழலானவரோ, இலைக்கட்சி தலைவரிடம் கேட்டு கூட்டத்தை நடத்துங்கன்னு அதிரடியா சொல்லிட்டாராம்.. இது இலைக்கட்சி தலைவரின் காதுக்கு போய் சேர்ந்திருக்கு.. இதனால் கோபத்தின் உச்சத்துக்கே போன அவர், அப்படியே தனக்கு தானே கட்டுப்படுத்திக்கிட்டாராம்.. பிறகு சொந்த ஊருக்கு நிர்வாகிகளை அழைத்துப் போய், கூட்டத்தை நடத்துவதற்கான தேதியை இலைக்கட்சி தலைவர் சொன்னாராம். நிழலானவருக்கு இலைக்கட்சி தலைவர் அடிபணிந்து போன விவகாரம் கட்சிக்காரர்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்காம்.. முப்பது ஆண்டுகள் ஆண்ட கட்சியின் பொதுச்செயலாளராக இருக்கேன்னு வீரம் பேசும் இலைக்கட்சி தலைவரு, ஒரு மா.செ.வுக்கு பணிந்து போவது என்பது சாதாரண விஷயம் இல்லைன்னு இலைக்ககட்சிக்காரங்க சொல்றாங்க.. அதே நேரத்தில் இலைக்கட்சி தலைவருக்கு உறுதுணையாக இருந்த குக்கர்காரர், சின்னமம்மி எல்லோரையும் ஓரம்கட்டிட்டாரு.. அதேபோல நிழலானவருக்கும் செக் வைப்பது உறுதின்னு தேனிக்காரரின் அடிப்பொடிகள் அடிச்சி சொல்றாங்க..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘நெடுஞ்சாலைத்துறையில மத்த அதிகாரிங்களை புலம்பவிடும் அதிகாரிபற்றி சொல்லுங்க பார்ப்போம்..’’ என்றார் பீட்டர் மாமா.‘‘மாநில நெடுஞ்சாலை துறையை கண்காணிக்கிற கோவையின் முக்கிய அதிகாரி ரொம்ப உஷாரா இருக்கிறாராம்.. அவர் மீது எந்த புகாரும் யாரும் சொல்லக்கூடாதுனு கவனமா செயல்படறதா பேசிக்கிறாங்க.. யாராவது அவரை பார்க்க போனால் தெரிந்த நபராக இருந்தால் செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்து விட வேண்டும். தெரியாத நபராக இருந்தால் செல்போனை உதவியாளரிடம் தந்துவிட்டு சென்று பார்க்க வேண்டும்னு ரூல்ஸ் போட்டு இருக்கிறாராம்.. தன்னை பற்றி யாராவது செல்போன் பதிவு செய்து அதை சோசியல் மீடியாக்களில் வெளியிட்டு விடுவார்களோ என்று கருதியே இந்த ஏற்பாடு செய்திருக்கிறாராம்.. டெண்டர் தொடர்பாக யாராவது விசாரிக்க சென்றாலும் ஆபீசில் வைத்து எதுவும் பேசுவதில்லையாம்.. குறிப்பிட்ட சில ஒப்பந்ததாரர்களுடன் மட்டுமே இவர் நட்பு வைத்துள்ளாராம்.. அவர்களுக்கு மட்டும் டெண்டர் குறித்த தகவல்களை சொல்லி சப்போர்ட் செய்யறாராம்.. தேசிய நெடுஞ்சாலையில் கோவையில் அதிகார பதவியில் இருந்த இவர் கோவையை விட்டுத்தரக்கூடாது என்பதற்காக மாநில நெடுஞ்சாலைக்கு ஜம்ப் செய்து வந்துவிட்டாராம்.. கடைசி வரைக்கும் கோவையில்தான் இருக்கப்போகிறேன் என கீழ்மட்ட அதிகாரிகளை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிட்டதாக பேசிக்கிறாங்க.. ‘ரோடு சேப்டி மீட்டிங்கில்’ வர்ற புகார்களை எல்லாம் இவர் கண்டுகொள்வதில்லையாம்.. குழி மேடு, பள்ளம் என ஏகப்பட்ட புகார்களை ஜிபிஎஸ் போட்டோ வீடியோ ஆதாரங்களோட தந்தாலும் சரி செய்துக்கலாம்னு அலட்சியமாக விட்டு விடுறாராம்.. உச்ச அதிகாரி இப்படி இருந்தா மத்த அதிகாரிங்க எப்படி வேலை ெசய்வாங்கன்னு கோவை நெடுஞ்சாலைத்துறையினர் புலம்பிட்டு இருக்கிறாங்க…’’ என்றார்.
‘‘ஒரே மாவட்டத்தில் தனித்தனி அணியாக செயல்பட்டு வரும் மாஜிக்களிடையே சேலத்துக்காரரே கோஷ்டி பூசலை உருவாக்குகிறதா ஒரு தரப்பு புலம்புகிறதாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா. ‘‘தூங்கா நகரத்து மாவட்ட இலைக்கட்சியில் மாஜிக்கள் தனித்தனியாக 3 அணியாக செயல்பட்டு வர்றாங்க.. தனித்தனியாக இருந்தாலும், அவ்வப்போது ஒன்றாக இருப்பதைப் போல காட்டிக்கொள்வதையும் வழக்கமாக வச்சிருக்காங்க.. சமீபத்தில் தெர்மாகோல் புகழ் மாஜி தனது மாவட்டம் தரப்பில் மனித சங்கிலி ேபாராட்டம் நடத்தி இருக்கிறாரு.. இதற்கு அடுத்து உதயமானவர் தரப்பு உண்ணாவிரத போராட்டம் நடத்தியிருக்கு… தெர்மாகோல் தரப்பை விட தான் அதிக கூட்டத்தை கூட்டியதாக மார்தட்டிக் கொண்ட உதயமானவர் தரப்பு, தனது ஆதரவாளர்களை ஒன்றுதிரட்டி மறுநாள் சேலத்துக்காரரை சந்தித்து தங்களது வெற்றியை கொண்டாடியதாம்.. இதைக் கேள்விப்பட்ட தெர்மாகோல்காரர் தரப்பு, ‘இதையெல்லாமா வெற்றின்னு கொண்டாடுவாங்க… இவரை, சேலத்துக்காரர் வளர்த்து விட்டு, கோஷ்டிப்பூசலை உருவாக்குகிறாரா’ என புலம்பி வருகின்றனர்…’’ என்றார் விக்கியானந்தா.
The post கோயில் கோயிலாக சுற்றி வரும் மாஜி மந்திரியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.