‘‘மன்னர் மாவட்டத்தில் ஒரு எஸ்ஐயின் வில்லங்க செயல்பாடுகளால் காக்கிகள் வட்டாரம் அதிர்ச்சியில் இருக்காமே..’’ என்றபடி வந்தார் பீட்டர் மாமா.
‘‘மன்னர் மாவட்டத்தில் காவல்துறையின் தலைமையிடத்தில் விடுதலைப்புலிகள் பெயரை கொண்ட ஒரு எஸ்ஐ பணிபுரிகிறாராம்.. இவரது செயல்பாடுகள் சக காவல்துறையினரையே முகம் சுழிக்க வைக்கிறதாம்.. தனக்கு கப்பம் கட்டாதவர்களை மாவட்டம் விட்டு மாவட்டம் மாற்றும் வகையில் மேல் அதிகாரிகளிடம் உல்டா விட்டு மாற்றி விடுவாராம்.. மன்னர் மாவட்டத்தில் குறிப்பாக சமீபத்தில் நடந்த சமூக ஆர்வலர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளி ஒருவருடன் அந்த எஸ்ஐ தொடர்பில் இருந்திருக்கிறாரு.. அவர் கைது ஆகும் வரை அடிக்கடி போனில் தொடர்பில் இருந்தாராம்.. பிரச்னை பெரிதானவுடன் அந்த எஸ்ஐ தனக்கு அனைத்துக்கும் உதவியாக இருக்கும் நண்பரான முருகன் பெயர்கொண்ட எஸ்ஐயை அனுப்பி குற்றவாளி, போனை வாங்கி கால் டீட்டியலை, டெலீட் செய்ய வைத்து விட்டாராம்.. இந்த தகவல் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கு.. இது மட்டுமில்லாமல் ஒரு இரவில் இந்த தலைமையிடத்து எஸ்ஐ உதவியுடன் குற்றப்பதிவேடு கொண்ட ஒரு ரவுடி மணல் கடத்த லட்சங்களில் பணம் பெற்றுள்ளாராம்.. மணல் கடத்தல் விவகாரத்தில் அங்கு டூட்டியில் இருந்த எஸ்ஐ வீடியோ எடுத்ததை தெரிந்த தலைமையிடத்து எஸ்ஐ அந்த வீடியோவை டெலீட் செய்ய சொல்லி துன்புறுத்தி இருக்கிறாரு.. அப்புறம் விருப்பு ஓய்வு பெற்ற எஸ்ஐயை பலி வாங்க ஒரு குற்றவாளியை அழைத்து அந்த எஸ்ஐக்கு எதிராக மனு கொடுக்க வைத்தாராம்.. அந்த மனுக்கு எதிராக கோர்ட்டுக்கு சென்றால் பிரச்னை ஏற்படும் என்று உயர் அதிகாரிகள் சொன்னதால் அப்படியே விட்டுட்டாங்களாம்.. இப்படி தொடர்ந்து பல சர்ச்சைகளில் சிக்கிவரும் எஸ்ஐயின் செயல்பாடுகளால் காவல்துறையினரே அதிர்ச்சியில் இருக்காங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘பிடியை இறுக்கும் சிபிஐயால் கதிகலக்கத்தில் இருக்கிறதாமே புல்லட்சாமி அரசு..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘குட்டி பிரான்ஸ் என்றழைக்கப்படும் புதுச்சேரியில் பொதுப்பணித்துறை தலைமை அதிகாரி உள்ளிட்ட 3 பேர் லஞ்சப்பணம் வாங்கி கையும் களவுமாக சிபிஐ வசம் சிக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாம்.. இதன் தாக்கம் தற்போதைய சட்டசபை கூட்டத்திலும் எதிரொலித்ததாம்.. ஏற்கனவே கோயில் நில மோசடியில் இதேபோல் உயர் அதிகாரிகள் சிக்கி சிறைசென்ற நிலையில் அவர்களில் சிலர் மீண்டும் அரசு பதவியிலே அமர்ந்து விட்டதால், இவர்களும் விரைவில் வெளியே வந்துவிடுவர் என்ற பேச்சு அரசு அலுவலக வட்டாரத்தில் உலாவுகிறதாம்.. ஆனால் சிபிஐ நடவடிக்கையோ நேர்மாறாக இருக்கிறதாம்.. அதாவது காரைக்காலில் சிக்கிய உயர் அதிகாரியின் டைரியில் லஞ்சப் பணம் பட்டுவாடா பட்டியல் இருந்ததாம்.. இதில் சில அரசியல் புள்ளிகள், அதிகாரிகளின் பெயரும் இடம்பெற்றிருந்ததாம்.. எனவே, சிறையிலுள்ள 3 பேரிடமும் முழுமையான ஆவணங்களுடன் சிபிஐ அடுத்தகட்ட பிடியை இறுக்க உள்ளதாம்.. இதனால் புல்லட்சாமி அரசு வட்டாரம் கதிகலக்கத்தில் இருக்காம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘ஆண்டவனை தரிசிக்கலாம் என கூறிவிட்டு பொதுக்கூட்டத்திற்கு அழைத்து சென்றதால் மலராத கட்சி மீது மக்கள் கடும் அதிருப்தியில் இருக்காங்களாமே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘மலைக்கோட்டை மாவட்டத்தில் மலராத கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. இந்த பொதுக்கூட்டத்தில் மாநில தலைவர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றதால் அதிக அளவில் கூட்டத்தை காட்ட வேண்டும் என தலைமையிடத்தில் இருந்து கடலோர மாவட்ட நிர்வாகிகளுக்கு ரகசிய உத்தரவு வந்ததாம்.. வெறுமனே அழைத்தால் வர மாட்டார்கள் என்று நினைத்த நிர்வாகிகள், மலைக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆண்டவனை தரிசிக்க மலராத கட்சி சார்பில் இலவசமாக ஏற்பாடு செய்யப்பட்டதாம்.. இதனால் உங்களுக்கு எந்த செலவும் இல்லாமல் சாப்பாடு கூட போட்டு இரவு வீட்டில் வந்து பத்திரமாக விட்டு விடுகிறோம் என ஆசைவார்த்தை கூறி பொதுமக்களை வேன்களில் காலையில் அழைத்து சென்றார்களாம்.. கடலோர மாவட்டத்தில் இருந்து புறப்பட்டு சென்ற வேன்கள், பொதுக்கூட்டம் நடந்த இடத்திற்கு சென்றதாம்.. ஆண்டவனை தரிசிக்க கூட்டி வந்துட்டு இப்ப என்னடான்னா கட்சி பொதுக்கூட்டத்துக்கு கூட்டி வந்துருக்கீங்களே என்று வேனில் வந்தவர்கள் அவர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்களாம்.. அதற்கு அழைத்து சென்ற நிர்வாகிகள், கூட்டம் முடிஞ்சதும் ஆண்டவனை தரிசிக்க செல்லலாம் என சமாதானம் செய்து கூட்டத்தில் அமர வைச்சிருக்காங்க.. கூட்டம் சவ்வு சவ்வா இழுத்துக்கிட்டு இருந்ததுனால எப்படா கூட்டம் முடியும் என்று அழைத்து வரப்பட்டவர்கள் நெளிந்து ெகாண்டு இருந்தாங்களாம்.. கூட்டம் முடிஞ்சதும் கோயிலுக்கு போகலாமா என பொதுமக்கள் கேட்க, இருட்டிருச்சு இப்ப எப்படி அங்க போறதுன்னு என அனைவரையும் ஏற்றிக்கொண்டு கடலோர மாவட்டத்துக்கு வேன் புறப்பட்டிருக்கு.. திரும்பி வரும் வழியில் ஒரு பாலத்தின் மீது வேன் போக, அங்க தெரியுது பாருங்க.. அதான் மலைக்கோட்டை எல்லாம், தரிசிச்சுக்குங்க என்று கூறியிருக்காங்க.. மலைக்கோட்டை ஆண்டவன இப்படியாடா தரிசிக்க வைப்பீங்க என்று நிர்வாகிகள் மீது கடுமையான அதிருப்தியில் சென்றார்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘புகார் மீது உரிய விசாரணையும் இல்ல, பணியில கவனமும் இல்லாததால் 2 காக்கிளை தூக்கி அடிச்சதுதான் ஹாட் டாபிக்காக பேசப்படுதாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘வெயிலூர் மாவட்டத்துல 2 எழுத்து இனிஷியல் கொண்ட குப்பம் தாலுகாவுல பணத்துல தொடங்குற காக்கிகள் நிலையத்துல தான் பஞ்சாயத்து நடந்திருக்குது.. அந்த காக்கிகள் லிமிட்ல இருக்குற ஒரு ஏரியாவுல ஒரு மத பிரச்னை சம்பந்தமாக கடந்த சில நாட்களுக்கு முன்னாடி ஒரு பெட்டிஷன் வந்திருக்காம், அந்த புகாரை முறையாக விசாரணை செய்யாம விட்டுட்டாராம்.. இதனால சம்பந்தப்பட்ட 2 ஸ்டார் காக்கியையும், அந்த லிமிட்டையே கவனிக்க வேண்டிய தனிப்பிரிவு காக்கியும், கவனக்குறைவாக செயல்பட்டதாக மாவட்ட காக்கிக்கு புகார்கள் போயிருக்குது.. அதோடு, உள்ளூர் வாசிகள் கிட்ட இருந்தும், இந்த மனு மீது விசாரணை சரியாக நடைபெறாததால, அந்த ஏரியாவில் சட்டம்-ஒழுங்கு பிரச்னை வர வாய்ப்பு உள்ளதாக புகார்கள் செஞ்சிருக்காங்க.. புகாரை விசாரிக்காத புகார்னால, 2 காக்கிகளையும் ஆயுதப்படைக்கு தூக்கி அடிச்சிருக்காங்க.. இதுதான் இப்போ வெயிலூர் போலீஸ் வட்டாரத்துல ஹாட்டாக போய்கிட்டிருக்குதாம்.. ஏற்கனவே இந்த ரெண்டுபேரும் அலிகேஷன்ல தான் அந்த காக்கிகள் நிலையத்துக்கு மாற்றப்பட்டாங்களாம்.. இப்ப திரும்பவும் இப்படியான்னு காக்கிகள் வட்டாரத்துல பரபரப்பாக பேசிக்கிறாங்க..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.
The post கோயிலுக்கு கூட்டிப் போறதா சொல்லி கூட்டத்துக்கு ஆட்களை இழுக்கும் மலராத கட்சி பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.