சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இதில் அமைச்சர் சேகர்பாபு புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:-
* சென்னை பாரதி பெண்கள் கல்லூரி கூடுதல் வசதிகளோடு ரூ. 25 கோடியில் மேம்படுத்தப்படும்.
சென்னை பிரகாசம் சாலையில் 7.70 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள பாரதி பெண்கள் கல்லூரியில் புதிய ஆய்வகங்கள், கூடுதல் வகுப்பறைகள் அமைத்தல் மற்றும் வகுப்பறைகளைப் புதுப்பித்தல் உள்ளிட்ட மேம்பாட்டுப் பணிகள் ரூ. 25 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
* சென்னையில் 9 அரசுப் பள்ளிகள் ரூ. 25 கோடியில் மேம்படுத்தப்படும்.
சென்னையில் மங்களபுரம் நடுநிலைப் பள்ளி, திரு.வி.க நகர், ஏகாங்கிபுரம் நடுநிலைப் பள்ளி, திரு.வி.க நகர், லட்சுமிபுரம் மேல்நிலைப்பள்ளி, புழல், 4 காசி பாலசுப்ரமணிய செட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, செங்குன்றம், ஜெய் கோபால் கரோடியா அரசினர் மேல்நிலைப்பள்ளி, மாதவரம், திருவள்ளுவர் நகர் தொடக்கப்பள்ளி, ஆர்.கே. நகர், ஜி.கே.எம். காலனி அரசுப் பள்ளி, கொளத்தூர், ஜெய் கோபால் கரோடியா அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, விருகம்பாக்கம், அரசு மேல்நிலைப்பள்ளி, எம்.ஜி.ஆர். நகர், விருகம்பாக்கம் ஆகிய 9 அரசுப் பள்ளிகள் கூடுதல் வகுப்பறைகள், ஆய்வகங்கள், போதிய இருக்கை வசதிகள், கணினி வசதிகள் மற்றும் விளையாட்டு உபகரணங்களுடன் ரூ. 25 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.
* சென்னையில் 6 ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள் ரூ. 5 கோடியில் மேம்படுத்தப்படும்.
சென்னையில் உள்ள ஆதி திராவிடர் நல அரசு பெண்கள் பள்ளி, கன்னிகாபுரம், ஆதி திராவிடர் நல அரசு உயர்நிலைப்பள்ளி, புளியந்தோப்பு, ஆதி திராவிடர் நல அரசு தொடக்கப்பள்ளி, புளியந்தோப்பு, ஆதி திராவிடர் நல அரசு தொடக்கப்பள்ளி, வெங்கடேசபுரம், ஆதி திராவிடர் நல அரசு தொடக்கப்பள்ளி, செங்குன்றம், ஆதி திராவிடர் நல அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, செங்குன்றம் ஆகிய 6 ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள், போதிய இருக்கை வசதிகள், கணினி வசதிகள் மற்றும் விளையாட்டு உபகரணங்களுடன் ரூ. 5 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.
* சென்னையில் 15 முதல்வர் படைப்பகங்கள் ரூ. 40 கோடியில் அமைக்கப்படும்.
வடசென்னையில் உள்ள செரியன் நகர், அயனாவரம், சுப்புராயன் தெரு, பக்தவத்சலம் பூங்கா, சண்முகம் தெரு, வெங்கடேசபுரம், தண்டையார்பேட்டை நெடுஞ்சாலை, அம்பத்தூர், மங்களபுரம், கோடம்பாக்கம், வால் டாக்ஸ் சாலையில் உள்ள ராட்லர்ஸ் தெரு , மேஜர் பாசு தெரு, சிந்தனை சிற்பி சிங்கரவேலர், எருக்கஞ்சேரி ஆகிய 13 இடங்கள் மற்றும் பிற பகுதிகளில் 2 இடங்களிலும், அதிவேக இணையம், போட்டித்தேர்வுகளில் கலந்துகொள்ளும் மாணாக்கர்களுக்குத் தேவையான வசதிகள் கொண்ட கற்றல் மையங்கள் மற்றும் பகிர்ந்த பணியிட (Co-Working Space) வசதிகளைக் கொண்ட முதல்வர் படைப்பகங்கள், ரூ. 40 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
* பிராட்வே பிரகாசம் சாலையில் அதிநவீன பொது நூலகம் ரூ. 30 கோடியில் அமைக்கப்படும்.
சென்னை பிராட்வே பிரகாசம் சாலையில், 0.9 ஏக்கரில், மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், மின்னணு வளங்கள், கற்றல் இடங்கள், போட்டித் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு தேவையான வசதிகள் மற்றும் சமூகப் பகுதிகளுடன், ஒரு சிறப்புமிக்க அதிநவீன பொது நூலகம் ரூ. 30 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும். பன்னோக்கு விளையாட்டு மைதானம், பாடி, ஒருங்கிணைந்த விளையாட்டு மையம், ஷெனாய் நகர், பன்னோக்கு விளையாட்டு மையம், செரியன் நகர், அண்ணா நகர் சத்யசாய் நகரில் திறந்தவெளிப் பகுதி மேம்பாடு, நெமிலிச்சேரியில் ஒருங்கிணைந்த விளையாட்டு மையம்
* சென்னை மாநகரில் 5 அரங்குகள் மற்றும் மைதானங்கள் ரூ. 37 கோடியில் மேம்படுத்தப்படும்.
சென்னை மாநகரில் உள்ளூர் இளைஞர் திறன்களை வளர்ப்பதற்கும், சமூகத் தொடர்பு மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய மையத்தை உருவாக்குவதற்கும் ஐந்து அரங்குகள் மற்றும் மைதானங்கள் ரூ. 37 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.
* வடசென்னையில் 4 இடங்களில் பேருந்து நிறுத்தங்கள் ரூ. 8 கோடியில் அமைக்கப்படும்.
வடசென்னையில் பெரம்பூர், இராயபுரம், கொளத்தூர், மற்றும் துறைமுகம் ஆகிய பகுதிகளில் குளிர்சாதன வசதி மற்றும் கழிப்பறை வசதிகளுடன் கூடிய பேருந்து நிறுத்தங்கள் ரூ. 8 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
* சென்னையில் 7 பன்னோக்கு மையங்கள் ரூ. 45 கோடியில் அமைக்கப்படும்.
சென்னையில், சத்தியமூர்த்தி சாலை, சேத்துப்பட்டு, சத்யமூர்த்தி சின்ன சேக்காடு தேவராஜ் நகர், மணலி, ஷேக் மேஸ்திரி தெரு, இராயபுரம், கக்கன்ஜி நகர், வியாசர்பாடி, நாகிரெட்டி தோட்டம், கிண்டி, நொளம்பூர் தாலுகா அலுவலக சாலை, மதுரவாயல், பெருங்குடி ஆகிய இடங்களில் குளிர்சாதன அரங்கம், உணவுக்கூடம் மற்றும் வாகன நிறுத்துமிடம் ஆகிய வசதிகளுடன் ஏழு பன்னோக்கு மையங்கள் ரூ. 45 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
* சென்னையில் 6 அமுதம் அங்காடிகள் ரூ.22 கோடியில் அமைக்கப்படும்.
சென்னையில் பெரியார் நகர், சைதாப்பேட்டை தாடண்டர் நகர், பல்லாவரம், சித்தாலப்பாக்கம், இராயபுரம் மற்றும் வில்லிவாக்கம் சிட்கோ நகர் ஆகிய ஆறு இடங்களில் அமுதம் அங்காடிகள், ரூ. 22 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
* சென்னை வண்டலூர் கீரப்பாக்கத்தில் ரூ. 11 கோடியில் உணவுப் பொருள் கிடங்கு அமைக்கப்படும். சென்னை, வண்டலூர், கீரப்பாக்கத்தில், 5 ஏக்கர் பரப்பளவில், உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், உணவுப் பொருள் கிடங்கு ரூ. 11 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
* ராயபுரம், சஞ்சீவிராயன் பேட்டை அரசு மகப்பேறு மருத்துவமனையில் கூடுதல் கட்டடம் ரூ. 6 கோடியில் அமைக்கப்படும். சென்னை, ராயபுரம், சஞ்சீவிராயன் பேட்டை அரசு மகப்பேறு மருத்துவமனையில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் விதமாக, கூடுதல் கட்டடம் ரூ. 6 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
* ராயபுரம், பனைமரத் தொட்டி அரசு மகப்பேறு மருத்துவமனையில் கூடுதல் கட்டடம் ரூ. 4 கோடியில் அமைக்கப்படும். சென்னை, இராயபுரம், பனைமரத் தொட்டி அரசு மகப்பேறு மருத்துவமனையில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் விதமாக, கூடுதல் கட்டடம் ரூ. 4 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
* கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகம் ரூ. 10 கோடியில் மேம்படுத்தப்படும். கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகத்தில் திடக்கழிவு பதப்படுத்தும் நிலையம் மற்றும் கட்டணமில்லா கழிவறைகள் ரூ. 10 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.
* காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஒன்றியத்தில் உட்கட்டமைப்பு வசதிகள் ரூ. 21 கோடியில் மேம்படுத்தப்படும். காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஒன்றியத்தில் அய்யப்பந்தாங்கல், பரணிபுத்தூர், மௌலிவாக்கம், கெருகம்பாக்கம், கோவூர், கொளப்பாக்கம், தண்டலம் ஆகிய பகுதிகளில் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் ரூ. 21 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.
* சென்னை குரோம்பேட்டையில் ரூ. 10 கோடியில் நடை மேம்பாலம் அமைக்கப்படும்.
சென்னை குரோம்பேட்டையில் எஸ்.டி.என்.பி. வைஷ்ணவ் கல்லூரி சந்திப்பில், மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் எளிதாக சாலையைக் கடக்கும் வகையில் ஜி.எஸ்.டி சாலையின் குறுக்கே ரூ. 10 கோடி மதிப்பீட்டில் நகரும் படிக்கட்டுகளுடன் கூடிய புதிய நடை மேம்பாலம் அமைக்கப்படும். என்று கூறினார்.
The post கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகம் ரூ. 10 கோடியில் மேம்படுத்தப்படும்: அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு appeared first on Dinakaran.