சென்னை: “அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அவரது உறவினர்கள் வீட்டில் நடத்தப்பட்ட அமலாக்கத் துறை சோதனை என்பது, 2013-ல் நடைபெற்ற நிகழ்வுக்காக 2021-ம் ஆண்டு சிபிஐயினால் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட ஒரு வங்கி பரிவர்த்தனை சம்பந்தப்பட்டது மட்டுமேயன்றி, எந்த ஒரு ஊழல் வழக்கையும் சார்ந்தது அல்ல” என்று திமுக சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ விளக்கம் அளித்துள்ளார்.
அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அவரது உறவினர்கள் வீட்டில் நடத்தப்பட்ட அமலாக்கத் துறை சோதனை தொடர்பாக, திமுக சட்டத்துறை செயலாளரும், எம்.பியுமான என்.ஆர்.இளங்கோ செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “இன்றைய தினம் அமலாக்கத் துறையினுடைய அதிகாரி சோதனையின்போது அளித்த விவரங்களின்படி 2013-ம் ஆண்டு வங்கிகளில் பெறப்பட்ட கடன் தொகை சம்பந்தமாக சிபிஐ 2021-ல் ஒரு வழக்கு பதிந்து அதன் பிறகு ஒரு குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.