அண்ணாநகர்: கோயம்பேடு மார்க்கெட்டை சுற்றி சுமார் 600க்கும் மேற்பட்ட சாலையோர கடைகள் மற்றும் தள்ளுவண்டி ஆக்கிரமிப்பு கடைகள் அதிகரித்துள்ளன. இதனால் வியாபாரிகள் மட்டுமின்றி, விவசாயிகள் மற்றும் பொதுமக்களும் மிகவும் பாதிப்படைகின்றனர். எனவே, ஆக்கிரமிப்பு கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை கோயம்பேட்டில் காய்கறி, பழம் மற்றும் பூக்கள், உணவு தானிய கடைகள் என மார்க்கெட்டுகள் செயல்பட்டு வருகின்றன.
இங்கு காய்கறிகள், பழம் மற்றும் உணவு தானியங்கள் வாங்குவதற்காக வியாபாரிகள், சில்லரை கடைக்காரர்கள் மற்றும் பொதுமக்கள் என தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். அதேபோல், கோயம்பேடு மார்க்கெட்டுக்கு அதிகாலையில் காய்கறி, பழம், பூக்கள் போன்ற பொருட்களை ஏற்றி வரும் விவசாயிகளின் வாகனங்கள் மார்க்கெட் உள்ளே வர முடியாமல் போக்குவரத்து நெருசலில் சிக்கிக்கொண்டு அவதிப்பட்டு வருகின்றன. இது ஒருபக்கம் உள்ள நிலையில், சாலையோர தள்ளுவண்டி கடைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்த கடைகளில் விற்கக்கூடிய சிக்கன், மட்டன் பிரியாணி, ப்ரைட் ரைஸ் மற்றும் வடை, போண்டா, சமோசா, பஜ்ஜி உள்ளிட்ட அனைத்துமே திறந்தவெளியில் வைத்து விற்பனை செய்வதால் அதை சாப்பிடும் மக்களுக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகிறது. குறிப்பாக, வறுத்த மீன், கறி, சிக்கன் ஆகிவை திறந்தவெளியில் வைத்து விற்பனை செய்யப்பட்டு வருவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. கோயம்பேடு காய்கறி, பூ, பழம் ஆகிய மார்க்கெட்டுகளில் வேலை செய்யும் தொழிலாளர்கள் பெரும்பாலானவர்கள் சாலையோர தள்ளுவண்டி கடைகளில் சாப்பிடுகின்றனர். சுகாதாரமற்ற முறையில் உள்ள உணவுகளை சாப்பிடுவதால் பல்வேறு நோய்களுக்கு ஆட்படுகின்றனர்.
The post கோயம்பேடு மார்க்கெட்டை சுற்றி 600க்கும் மேற்பட்ட சாலையோர, தள்ளுவண்டி கடைகளால் தினமும் கடும் போக்குவரத்து பாதிப்பு: பொதுமக்கள் திண்டாட்டம்: சுகாதாரமற்ற முறையில் உணவுகள் விற்பனை appeared first on Dinakaran.