கோயம்பேடு மார்க்கெட்டில் மழையால் குவிந்தது; 3 நாளாக 800 டன் குப்பை அகற்றம்: அங்காடி நிர்வாகம் நடவடிக்கை

4 weeks ago 7


அண்ணாநகர்: கனமழை காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டில் சேர்ந்துள்ள 800 டன் குப்பையை 3 நாட்களாக அங்காடி நிர்வாகம் அகற்றியது. இதற்காக வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அங்காடி நிர்வாகத்துக்கு நன்றி தெரிவித்துள்ளனர். சென்னையில் கடந்த 2 நாட்கள் பெய்த கனமழையால் கோயம்பேடு மார்க்கெட் மழை வெள்ளத்தில் மூழ்கியது. அங்காடி நிர்வாக சார்பில் ராட்சத மோட்டார் மூலம் ஊழியர்களை நியமித்து மழைநீரை அகற்றும் பணி விறுவிறுப்பாக நடைபெற்றதால் மழைநீர் முற்றிலும் வடிந்தது. மழைநீர் முற்றிலும் வடிந்ததால் மார்க்கெட் முழுவதும் குப்பை குவிந்து வியாபாரிகள் வியாபாரம் செய்ய முடியாமல் அவதிப்பட்டு வந்தனர். இதுபோல் சென்னை மற்றும் புறநகர் சில்லறை வியாபாரிகள், பொதுமக்கள் பொருட்கள் வாங்க மிகவும் சிரமப்பட்டனர்.

இந்த நிலையில், மார்க்கெட் முழுவதும் குவிந்துள்ள குப்பையை அகற்றவேண்டும் என வியாபாரிகள், அங்காடி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தனர். வியாபாரிகளின் கோரிக்கை ஏற்று அங்காடி நிர்வாக முதன்மை அலுவலர் இந்துமதி மார்க்கெட் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர், மார்க்கெட் முழுவதும் தேங்கி கிடந்த குப்பையை அகற்றும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்படி கடந்த 15ம்தேதியில் இருந்து 3 நாட்களாக கோயம்பேடு மார்க்கெட்டில் குப்பை அகற்றும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதுவரை 800 டன் குப்பை அகற்றப்பட்டுள்ளது. இதற்காக வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அங்காடி நிர்வாகத்துக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அங்காடி நிர்வாகம் கூறுகையில், “கனமழை முன்னெச்சரிக்கையாக கோயம்பேடு மார்க்கெட்டில் மழை வெள்ளம் சுழாதவாறு ஆங்காங்கே ராட்சத மோட்டார்கள் மூலம் மழைநீர் அகற்றும் பணி விறுவிறுப்பாக நடைபெற்றது. இதனால் மார்க்கெட் தேங்கிய மழைநீர் உடனுக்குடன் அகற்றப்பட்டது. மழைநீர் வடிந்து குப்பை குவிந்ததால் அதை அகற்றும் பணியும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதுவரை 800 டன் குப்பை அகற்றப்பட்டுள்ளது. மழையால் மார்க்கெட்டில் பாதிப்பு இருந்தால் அங்காடி நிர்வாகத்தை வியாபாரிகள் அணுகலாம். வியாபாரிகளின் குறைகள் உடனுக்குடன் சரிசெய்து தரப்படும்” என தெரி விக்கப்பட்டுள்ளது.

The post கோயம்பேடு மார்க்கெட்டில் மழையால் குவிந்தது; 3 நாளாக 800 டன் குப்பை அகற்றம்: அங்காடி நிர்வாகம் நடவடிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article