அண்ணாநகர்: கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் நேற்று ஒரு கிலோ வெங்காயம் 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. கர்நாடகா, மகராஷ்டிரா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்து தினசரி 60 வாகனங்களில் 1300 டன் பெரிய வெங்காயம் வந்தது. வரத்து குறைவு காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டுக்கு இன்று காலை 20 வாகனங்களில் 500 டன் வெங்காயம் வந்துள்ளது. இதன்காரணமாக வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து ஒரு கிலோ வெங்காயம் 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னை புறநகர் கடைகளில் ஒரு கிலோ வெங்காயம் 130 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மற்ற காய்கறிகள் விலை நிலவரம்;
ஒரு கிலோ தக்காளி, பாவற்காய் 35 ரூபாய். உருளை கிழங்கு, காராமணி, சுரக்காய், முருங்கைக்காய் மற்றும் காலி பிளவர் 40 ரூபாய். சின்ன வெங்காயம் 70, கேரட், கொத்தவரங்காய், பச்சை மிளகாய் 60, பீன்ஸ், சவ்சவ் சேனை கிழங்கு, நூக்கல் 50, கத்திரிக்காய் 25, இஞ்சி 180, பூண்டு 380, எலுமிச்சை 90.
கோயம்பேடு மார்க்கெட் சிறு, மொத்த வியாபாரிகள் சங்க தலைவர் எஸ்.எஸ்.முத்துகுமார் கூறும்போது, ‘’வரத்து குறைவால் மார்க்கெட்டில் நாசிக் வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ளது. இந்த விலை நீடிக்கும். கோயம்பேடு மார்க்கெட்டில் தமிழக அரசு கொள்முதல் செய்தால் வெங்காயத்தின் விலை குறைவதற்கு வாய்ப்புள்ளது’ என்றார்.
இதுபற்றிபொதுமக்கள் கூறுகையில், ‘’ 1 கிலோ பெரிய வெங்காயம் 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. புறநகர் பகுதியில் உள்ள கடைகளில் 120 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை விற்பனை செய்கின்றனர். இதனால் வெங்காயத்தை உரிக்காமலேயே கண்ணீர் வருகிறது. இவற்றை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.
The post கோயம்பேடு மார்க்கெட்டில் பெரிய வெங்காயம் கிலோ ரூ.100 appeared first on Dinakaran.