அண்ணாநகர், ஏப்.18: வரத்து அதிகரிப்பால் கோயம்பேடு மார்க்கெட்டில் அனைத்து காய்கறிகளின் விலையும் குறைந்து காணப்பட்டது. கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தினசரி 650 வாகனங்களில் 6,500 டன் காய்கறிகள் வருவது வழக்கம். இந்நிலையில் வரத்து அதிகரிப்பால் நேற்று கோயம்பேடு மார்க்கெட்டுக்கு 700 வாகனங்களில் 7,000 டன் காய்கறிகள் வந்து குவிந்ததால் அனைத்து காய்கறிகளின் விலையும் குறைந்த விலையில் விற்கப்பட்டது. அதன்படி, ஒரு கிலோ வெங்காயம் ரூ.16க்கும், சின்ன வெங்காயம் ரூ.30க்கும், தக்காளி ரூ.15க்கும், உருளைகிழங்கு ரூ.18க்கும், கேரட் ரூ.30க்கும், பீன்ஸ் ரூ.60க்கும், பீட்ரூட் ரூ.20க்கும், சவ்சவ் ரூ.20க்கும், முள்ளங்கி ரூ.15க்கும், முட்டைகோஸ் ரூ.7க்கும், வெண்டைக்காய் ரூ.20க்கும், கத்திரிக்காய் ரூ.15க்கும், காராமணி ரூ.30க்கும், பாகற்காய் ரூ.25க்கும், புடலங்காய் ரூ.17க்கும், சுரக்காய் ரூ.10க்கும், சேனைக்கிழங்கு ரூ.50க்கும், முருங்கைக்காய் ரூ.40க்கும், சேமகிழங்கு ரூ.35க்கும், காலிபிளவர் ரூ.12க்கும், வெள்ளரிக்காய் ரூ.22க்கும், பச்சை மிளகாய் ரூ.18க்கும், பட்டாணி ரூ.70க்கும், இஞ்சி ரூ.45க்கும், அவரைக்காய் ரூ.20க்கும், பீர்க்கங்காய் ரூ.30க்கும், நூக்கள் ரூ.17க்கும், கோவைக்காய் ரூ.24க்கும், கொத்தவரங்காய் ரூ.26க்கும் விற்பனை செய்யப்பட்டது.
அதேபோல், வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் எலுமிச்சை பழம் வரத்து குறைந்தது. இதனால், ஒரு கிலோ எலுமிச்சை பழம் ரூ.120க்கும், புறநகர் பகுதிகளில் உள்ள கடைகளில் ஒரு கிலோ ரூ.150க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதுகுறித்து கோயம்பேடு மார்க்கெட் சிறு மொத்த வியாபாரிகளின் தலைவர் முத்துகுமார் கூறுகையில், ‘வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் வரத்து குறைந்து காய்கறிகளின் விலை உயரம் என எதிர்பார்த்தோம். ஆனால் வரத்து அதிகரிப்பால் அனைத்து காய்கறிகளின் விலை கடும் சரிந்து குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆந்திரா, கர்நாடகா தமிழ்நாடு ஆகிய பகுதியிலிருந்து கோயம்பேடு மார்க்கெட்டுக்கு எலுமிச்சை பழம் வருகிறது. தற்போது ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் விளைச்சல் இல்லாததால் வரத்து குறைந்து எலுமிச்சை பழம் விலை கிடுகிடுவென உயர்ந்து ஒரு கிலோ ரூ.120க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது,’ என்றார்.
The post கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் விலை சரிவு: எலுமிச்சை விலை உயர்வு appeared first on Dinakaran.