*கேமரா பதிவுகளை திருடிச் சென்றதால் குற்றவாளிகளை பிடிப்பதில் சிக்கல்?
புளியங்குடி : புளியங்குடியில் நள்ளிரவில் மர்மநபர்கள், டாஸ்மாக் கடையை உடைத்து உள்ளே இருந்த மதுபாட்டில்களை அள்ளிச் சென்ற துணிகர கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.
தென்காசி மாவட்டம் புளியங்குடி நவாச் சாலையில் ஊருக்கு வெளியே வயல்வெளி பகுதியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இங்கு சூபர்வைசர்களாக செல்வம் ஜெயராமன், பெருமாள் ஆகியோர் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று வழக்கம்போல் வியாபாரம் முடிந்து ஊழியர்கள் கடையை பூட்டிச் சென்றனர். நள்ளிரவில் மர்மநபர்கள், இரும்பு கம்பியால் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் அவர்கள், கடையில் இருந்த விலை உயர்ந்த மதுபானங்களை அள்ளிச் சென்றனர்.
மேலும் அங்கு பணம் ஏதும் சிக்கவில்லை. இந்த கடையில் தினமும் சராசரியாக ரூ.2 லட்சம் அளவில் மதுபானங்கள் விற்பனையாவது வழக்கம். விற்பனை பணத்தை பாதுகாப்பு கருதி ஊழியர்கள் எடுத்துச் சென்று மறுநாள் வங்கியில் செலுத்துவார்கள். அதனால் கடையில் நேற்று முன்தினம் விற்பனையான பணம், கொள்ளை போகாமல் தப்பியது.
கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்கள், போலீசார் தங்களை அடையாளம் காண முடியாமல் இருப்பதற்காக கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை சேதப்படுத்தியதுடன் டிவிஆர் பதிவுகளையும் தூக்கிச் சென்றுவிட்டனர்.நேற்று அதிகாலையில் போலீசார் ரோந்து பணியில் சென்றபோது டாஸ்மாக் கடையில் கொள்ளை நடந்திருப்பதை கண்டு, இதுகுறித்து கடை ஊழியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்து கடையில் சரிபார்த்தபோது மதுபாட்டில்களை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
சம்பவத்தை தொடர்ந்து புளியங்குடி டிஎஸ்பி மீனாட்சிநாதன், இன்ஸ்பெக்டர் ஷியாம்சுந்தர் மற்றும் போலீசார் வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். தென்காசியில் இருந்து கைரேகை நிபுணர் வரவழைக்கப்பட்டு கொள்ளையர்களின் ரேகைகள் பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக புளியங்குடி போலீசார் வழக்குப்பதிந்து கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
மேலும் அப்பகுதியில் உள்ள பல்வேறு சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு சிங்கிலிபட்டி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை பூட்டை உடைத்து மதுபானங்களை திருடப்பட்ட சம்பவமும், தற்போது புளியங்குடியில் நடைபெற்ற சம்பவமும் ஒன்றாக உள்ளது என்பதால் இது ஒரே கும்பலாக இருக்கும் என்று போலீசார் சந்தேகப்படுகின்றனர். டாஸ்மாக் கடையை உடைத்து நடந்த இந்த கொள்ளை சம்பவம் புளியங்குடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
The post புளியங்குடியில் நள்ளிரவில் மர்மநபர்கள் கைவரிசை டாஸ்மாக் கடையை உடைத்து துணிகர கொள்ளை appeared first on Dinakaran.