கோபி: கோபியில் நடந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எடப்பாடி பழனிச்சாமி பெயரை தவிர்த்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை அடுத்த அன்னூரில் கடந்த பிப்ரவரி மாதம் 9ம் தேதி அத்திகடவு-அவினாசி திட்ட விவசாயிகள் சார்பில் எடப்பாடி பழனிச்சாமிக்கு நடைபெற்ற பாராட்டு விழாவை கே.ஏ.செங்கோட்டையன் புறக்கணித்ததை தொடர்ந்து, எடப்பாடி பழனிச்சாமிக்கும், செங்கோட்டையனுக்கும் இடையே மோதல் வெளிப்படையானது. அதைத்தொடர்ந்து செங்கோட்டையன் கலந்துகொண்ட நிகழ்ச்சிகளில் எடப்பாடி போட்டோவிற்கு இணையாக செங்கோட்டையன் படமும் இடம் பிடித்தது.
அதேபோன்று எடப்பாடி பழனிச்சாமி குறித்தும், அவரது 4 ஆண்டு கால ஆட்சி குறித்தும் பேசுவதை தவிர்த்து வந்தார். அதைத்தொடர்ந்து நடைபெற்ற எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழாவில் பொதுச்செயலாளர் என்று மட்டும் பேசி வந்தார். இந்நிலையில் இன்று கோபியில் நடைபெற்ற தனியார் நிறுவன துவக்க விழாவில் கலந்துகொண்ட கே.ஏ.செங்கோட்டையன், பேசுகையில், ‘சிறந்த கல்வியை தரக்கூடிய ஆண்டாக, அனைவரும் மகிழ்ச்சியோடு வாழுகிற ஆண்டாக இந்த தமிழ்புத்தாண்டு ஆண்டு அமைந்திட வேண்டும். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியில் சிறந்த முறையில் எதிர்காலத்தை உருவாக்குவதற்கு நாம் அனைவரும் முனைப்பாக இருந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும்’ என்றார்.
நேற்று தனியார் கல்வி நிறுவன ஆண்டு விழாவில் அதிமுக-பாஜ கூட்டணி குறித்து எந்த கருத்தையும் கூறாமல் சென்ற செங்கோட்டையன், இன்று மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி குறித்து பேசுவதை தவிர்த்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
The post கோபியில் நடந்த விழாவில் எடப்பாடி பழனிச்சாமி பெயரை தவிர்த்த செங்கோட்டையன் appeared first on Dinakaran.