
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நேரடியாக சென்று நலத்திட்ட பணிகளை களஆய்வு செய்து வருகிறார். மேலும் முடிவுற்ற வளர்ச்சிப் பணிகளை துவக்கி வைத்தும், புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் வருகிறார்
இந்நிலையில், 2 நாட்கள் கள ஆய்வு பயணமாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நீலகிரி மாவட்டத்திற்கு சென்றுள்ளார். கோவையில் இருந்து சாலை மார்க்கமாக நீலகிரி மாவட்டத்திற்கு சென்றுள்ளார்.
நீலகிரி மாவட்டத்தின் கோத்தகிரியில் பொதுமக்களை சந்தித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை மனுக்களை பெற்றார். பள்ளி மாணவிகள் வழங்கிய ரோஜா மலர்களை பெற்று கொண்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து கூறினார். மேலும், மக்கள் கூட்டத்தின்நடுவே சாலையில் 1 கிலோ மீட்டர் நடந்து சென்று வரவேற்பு நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் பங்கேற்றார்.
கோத்தகிரியில் நிகழ்ச்சிகளை நிறைவு செய்தபின் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஊட்டி செல்கிறார். அங்கு தமிழக அரசின் விருந்தினர் மாளிகையில் இரவு தங்குகிறார்.
அதன்பின்னர், நாளை காலை நடைபெறும் நிகழ்ச்சியில் ஊட்டி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். ஊட்டி அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் நடைபெறும் விழாவில் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசுகிறார்.