போரே இல்லை, போர் நிறுத்தம் என்பது தவறானது: காங்கிரஸ் எம்.பி. மணீஷ் திவாரி

17 hours ago 3

சண்டிகார்,

காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் சுற்றுலாவாசிகள் 26 பேர் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீது பயங்கரவாத இலக்குகளை குறிவைத்து, கடந்த 6-ந்தேதி இரவில் இந்திய ராணுவம் தாக்குதலை நடத்தியது. இதனால், போர் பதற்றம் அதிகரித்தது.

எனினும், 4 நாட்களாக நடந்து வந்த மோதலுக்கு இடையே இரு நாடுகளும் தாக்குதலை நிறுத்தி கொள்வது என முடிவு செய்தது. ஆனால், அதற்கான அறிவிப்பை இரு நாடுகளும் வெளியிடுவதற்கு முன் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் அவருடைய ட்ரூத் சோசியல் என்ற சமூக ஊடகத்தில் வெளியிட்டு உள்ள செய்தியில், இந்தியாவும், பாகிஸ்தானும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல் அளித்து விட்டன.

இரவு முழுவதும் மத்தியஸ்தம் முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டது. இதில், முழு அளவில் மற்றும் உடனடியாக போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட இரு நாடுகளும் ஒப்பு கொண்டு விட்டன என பதிவிட்டார்.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் எம்.பி. மணீஷ் திவாரி செய்தியாளர்களிடம் இன்று பேசும்போது, போர் நிறுத்தம் என்பது தவறான வார்த்தை. ஏனெனில் இது ஒரு போரே அல்ல. பயங்கரவாத ஊக்குவிப்பில் பாகிஸ்தான் ஈடுபட்டது. இந்தியா அதனை தண்டித்தது. இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத நடவடிக்கைகள் ஊக்குவிப்பை அவர்கள் தற்போது நிறுத்த வேண்டும் என கூறினார்.

காஷ்மீர் விவகாரத்தில், இந்தியா, பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்ய தயார் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இன்றும் தெரிவித்து உள்ளார்.

காஷ்மீரில் அமைதி ஏற்பட அமெரிக்கா உதவியது என்றும் காஷ்மீரில் தீர்வு ஏற்படுவதற்கான மத்தியஸ்தம் செய்ய தயார் என்றும் டிரம்ப் இன்று கூறினார். அப்போது அவர், இன்னும் நாங்கள் ஆலோசனை மேற்கொள்ளாவிட்டாலும், இந்த இரு சிறந்த நாடுகளுடன் நான் கூடுதலாக வர்த்தகம் செய்ய இருக்கிறேன்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்னர், காஷ்மீர் விவகாரத்தில் ஒரு தீர்வு ஏற்பட்டு, உங்கள் இருவரிடமும் ஒன்றாக பணியாற்ற இருக்கிறேன். இந்தியா மற்றும் பாகிஸ்தானின் தலைமை சிறந்த பணியாற்றியதற்காக கடவுள் ஆசி வழங்கட்டும் என்றும் கூறினார்.

இதனை கண்டிக்கும் வகையில் திவாரி கூறும்போது, காஷ்மீர் விவகாரம் ஒன்றும் ஆயிரம் ஆண்டு கால மோதல் இல்லை. அமெரிக்க நிர்வாகத்தில் உள்ள எவரேனும் சிலர், அவர்களுடைய ஜனாதிபதி டிரம்புக்கு கல்வியறிவு ஊட்ட வேண்டிய தேவை ஏற்பட்டு உள்ளது.

78 ஆண்டுகளுக்கு முன் 1947-ம் ஆண்டு அக்டோபர் 22-ல் சுதந்திர காஷ்மீர் மீது பாகிஸ்தான் படையெடுத்தது. அது பின்னர், அதே ஆண்டின் அக்டோபர் 26-ல் மகாராஜா ஹரி சிங்கால் முழு அளவில் இந்தியாவிடம் விட்டு கொடுக்கப்பட்டது.

அதில், பாகிஸ்தான் தற்போது சட்டவிரோத வகையில் ஆக்கிரமிப்பு செய்திருக்கும் பகுதிகளும் அடங்கும். இந்த எளிமையான உண்மையை புரிந்து கொள்வதில் என்ன கடினம்? என அவர் கேட்டுள்ளார்.

ஆனால் காஷ்மீர் விவகாரத்தில் 3-ம் நாட்டின் தலையீட்டை மீண்டும் நிராகரித்து உள்ள இந்தியா, இந்த பகுதி, இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்று தெளிவாக தெரிவித்து உள்ளது.

Read Entire Article