கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் படுகர் இன மக்கள் வாழும் கிராமங்களில் ‘உப்பு ஹட்டுவ’ பண்டிகை கோலாகலம்

1 week ago 6

கோத்தகிரி : கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள படுகர் இன மக்கள் வாழும் கிராமங்களில் உப்பு ஹட்டுவ பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் படுகர் இன மக்கள் ‘உப்பு ஹட்டுவ’ பண்டிகையை முன்னிட்டு ஜக்கலோடை, கடை கம்பட்டி, திம்பட்டி மற்றும் படுகர் இன மக்கள் வசிக்கும் பல்வேறு கிராமங்களில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இதையொட்டி காலை அவரவர் வீட்டில் இருந்து கொண்டு வந்த உப்பு, பச்சை கடலை, புல் ஆகியவற்றை ஆற்றில் கரைத்து அங்கிருந்து எடுத்து வரும் தண்ணீரை தாங்கள் வளர்க்கும் வளர்ப்பு பசு மாடுகளுக்கு வழங்கி வழிபட்டனர்.

இதையடுத்து அனைவரும் இயற்கை தெய்வத்தை வழிபட்டு, காடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட இலை, நெறி செடிகளை, வீட்டுக்கு கொண்டு வந்து முற்றத்தில் கட்டி தொங்க விட்டனர்.
இதன் மூலம் நோய், நொடிகள் வராமல் இருக்கும் என்பது ஐதீகம்.

மேலும் உப்பு தண்ணீர் குடிப்பதால் பசு மாடுகள் காலை முதல் மாலை வரை மேய்ச்சலுக்கு எங்கு சென்றாலும் திரும்ப வீட்டுக்கு வந்து விடும் என்று நம்பிக்கை நிலவுகிறது. பின்னர் வீட்டில் பாயாசம் தயாரித்து தங்கள் ஊரில் உள்ள பொதுமக்களுக்கு வழங்கி மகிழ்ந்தனர்.

ஒவ்வொரு ஆண்டும் படுகர் இன மக்களின் சகோதரத்துவத்தை உணர்த்தும் வகையில் இந்த பண்டிகை கொண்டாடப்படுவதுடன், அதன் மூலம் வறட்சி நீங்கி மழை பொழிந்து ஆரோக்கியம் மேம்படும் என்று கூறப்படுகிறது.

The post கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் படுகர் இன மக்கள் வாழும் கிராமங்களில் ‘உப்பு ஹட்டுவ’ பண்டிகை கோலாகலம் appeared first on Dinakaran.

Read Entire Article