ஓசூர்: ஓசூர் அஞ்செட்டி அடுத்த ராசிமணல் வழியாக செல்லும் காவிரி ஆறு நீர்வரத்து இன்றி ஓடை போல மாறி உள்ளது. இதனால் கோடையில் வன உயிரினங்கள் தண்ணீரின்றி தவிக்கும் நிலை உருவாகியுள்ளது. எனவே, கோடையில்வன விலங்குகளின் தண்ணீர் தேவைக்காக கர்நாடக அரசு காவிரி ஆற்றில் குறைந்தளவு தண்ணீர் திறந்து விட வேண்டும் என வன உயிரின ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
கர்நாடக மாநிலம் குடகு மலையில் உற்பத்தியாகும் காவிரி ஆறு அங்குள்ள பல்வேறு மாவட்டங்களைக் கடந்து ஓசூர் அஞ்செட்டி வனச்சரகத்தில் ராசிமணல் வழியாக தமிழகத்திற்குள் நுழைந்து பிலிகுண்டு வழியாக மேட்டூர் அணைக்கு செல்கிறது. கர்நாடகா மற்றும் தமிழகத்திற்கு இடையே அடர்ந்த வனப்பகுதியின் நடுவே செல்லும் காவிரி ஆற்றின் நீர் யானைகள், சிறுத்தை, காட்டெருமை, மான் உள்ளிட்ட வனவிலங்குகளுக்கு கிடைப்பதால், பெரும்பாலான வன விலங்குகள் வனத்தைவிட்டு வெளியேறாமல், காவிரி கரையோர பகுதியில் தங்கி விடுகிறது. அதே போல் ராசிமணல் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட முதலைகளும் உள்ளன.