நன்றி குங்குமம் டாக்டர்
பொதுவாக கோடைகாலம் என்றாலே பலரும் ஆர்வத்துடன் இருப்பார்கள். ஏனென்றால், குழந்தைகளுக்கு கோடையில் பள்ளி விடுமுறை கிடைப்பதால், சொந்த ஊர்களுக்கு செல்வது, சுற்றுலா செல்வது, பயிற்சி வகுப்புகளில் கலந்துகொள்வது என்ன இருப்பார்கள். அதேசமயம், கோடை வந்துவிட்டால், உடல் ரீதியான பல பிரச்னைகளும் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. அவற்றை எப்படி வீட்டில் இருந்தபடியே சரி செய்து கொள்ளலாம் என்று சொல்கிறார் யோகா இயற்கை மருத்துவர் தீபா.
கோடையில் ஏற்படும் பிரச்னைகள்
பொதுவாக கோடையில் ஸ்கின் ப்ர்ன், ஹீட் ஸ்ட்ரோக், கண் சோர்வு, கண் எரிச்சல், ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய் போன்றவை அதிகரிக்க வாய்ப்பு அதிகம் உள்ளது. இதற்குக்
காரணம், உடல் சூடு அதிகரிப்பது. அதுபோன்று உடல் சூடு அதிகரிக்கும்போது, உடலில் வேறு சில பிரச்னைகளும் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். உதாரணமாக, மலச்சிக்கல், மூலநோய், அஜீரண தொந்தரவுகள் அதிகரிக்கும்.
அதிலும் குறிப்பாக, வெயிலில் அதிகமாக வேலை செய்பவர்களுக்கு இன்னும் கூடுதலாக இந்த பிரச்னைகள் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம். மேலும், தலைவலி, அமைதியின்மை, சோர்வு, உடல் அரிப்பு போன்றவையும் கோடையில் அதிகமாக காணப்படும். மேலும், கர்ப்பிணிகள், முதியவர்கள், குழந்தைகள் போன்றோருக்கும் கோடைகாலத்தில் இதுபோன்ற பிரச்னைகள் இன்னும் அதிகமாக காணப்படும்.
அதுபோன்று கோடையில் சந்திக்கும் மற்றொரு பிரச்னை என்றால், நீர்ச்சத்து குறைபாடு. உடலில் நீர்ச்சத்து குறையும்போதும், அஜீரணக்கோளாறு, மலச்சிக்கல் போன்றவற்றோடு சேர்த்து ரத்தகொதிப்பும் அதிகரிக்கும். இதனால், நீர்சுருக்கு ஏற்படவும், மூச்சுத்திணறல் போன்றவையும் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். கோடையில் எதிர்கொள்ளும் மற்றொரு பிரச்னை சமைத்து வைக்கும் உணவுகள் விரைவில் கெட்டுப் போய்விடும். அது தெரியாமல் சாப்பிடும் குழந்தைகளுக்கு ஃபுட் பாய்சன், வயிற்றுப் போக்கு போன்றவை ஏற்படும் வாய்ப்புகளும் அதிகமாக இருக்கும்.
அதுபோன்று சிலர் தண்ணீர் சரியாக குடிக்க மாட்டார்கள். இதனால், அவர்களுக்கு சிறுநீர் தொற்று ஏற்படும் வாய்ப்புகளும் அதிகம். மேலும், தோல் பிரச்னைகளால் தோல் சிவந்து போதல் போன்றவையும் ஏற்பட வாய்ப்பு அதிகம். சரும பிரச்னைகள், முகப்பரு தொந்தரவு, அம்மை நோய்கள் போன்றவை வெயில் காலங்களில் அதிகளவு காணப்படும். அதுபோன்று கோடையில், சிறுநீரகக்கற்கள், பித்தப்பை கற்கள் பிரச்னையும் அதிகமாக காணப்படும்.
தவிர்க்கும் வழிகள்
மேலே சொன்ன அத்தனை பிரச்னைகளையும் தவிர்ப்பதற்கு நாம் வீட்டில் இருந்தபடி சில எளிய வழிகளை கடைபிடித்தாலே அவற்றை தவிர்த்துக் கொள்ளலாம். அவற்றை தெரிந்து கொள்வோம்.தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும். குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு 3- 4 லிட்டர் வரை தண்ணீரை குடிக்க வேண்டும்.
தண்ணீர் குடிக்க முடியாதவர்கள், பழச்சாறுகளை எடுத்துக் கொள்ளலாம். தினசரி ஒரு இளநீர் குடிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளலாம். அல்லது நீர் மோர் குடிப்பதையும் வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். நீர் பழங்களான தர்பூசணி, கிர்ணிப்பழம், நுங்கு போன்றவற்றை அதிகமாக சாப்பிட வேண்டும். இதனால், நீர்சுருக்கு, சிறுநீர் தொற்று, சிறுநீரக கற்கள், பித்தப்பை கற்கள் போன்றவை ஏற்படாமல் தடுத்துக் கொள்ளலாம். சருமப் பிரச்னைகளை தவிர்க்க அவ்வப்போது தண்ணீர் குடிக்க வேண்டும். வெளியிடங்களுக்கு போகும்போது முடிந்தளவு குடையை எடுத்துச் செல்ல வேண்டும்.
அதுபோன்று கருப்பு நிற உடைகள் அணிவதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால், கருப்பு நிற உடை சூரிய வெப்பத்தை அதிகளவு உட்கிரகித்து வைத்துக் கொள்ளும் தன்மை உடையது.
கோடையில் விடுமுறை காலம் என்பதால், குழந்தைகள் பலரும் வெயிலில் அதிக நேரம் விளையாடிக் கொண்டிருப்பார்கள். இதை தவிர்க்க வேண்டும். மாலை 4 மணிக்கு மேல் குழந்தைகளை வெளியே விளையாட அனுமதிக்கலாம். அதுபோன்று, கோடைகாலங்களில் அதிகளவு உடலை வறுத்திக்கொள்ளும் உடற்பயிற்சிகள் செய்வதை தவிர்த்து மெல்லிய பயிற்சிகளை செய்வது நல்லது. உதாரணமாக, நடைப்பயிற்சியிலும், வேக நடையை தவிர்த்து மிதமான வேகத்திலேயே நடப்பது நல்லது. தெருவொர உணவுகள் அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
கற்றாழைச்சாறு குடிப்பது சிறந்த பலனைத் தரும். உதாரணமாக, காலையில் ஒரு டம்ளர் மோரில் ஒரு சிறு துண்டு இஞ்சி, ஒரு சிட்டிகை பெருங்காயம் சேர்த்து அதனுடன் நன்கு அலசி சுத்தம் செய்த கற்றாழையை சேர்த்து மிக்சியில் அடித்து குடிக்கலாம். அல்லது தேங்காய்ப்பாலில் சுத்தம் செய்த கற்றாழை துண்டுகளைப் போட்டு பனங்கற்கண்டு, ஏலக்காய் சேர்த்து அடித்துக் குடிக்கலாம். இதைத் தொடர்ந்து குடித்து வரும்போது, உடல் சூட்டை குறைத்து சரும பிரச்னைகள் அனைத்தையும் சரி செய்துவிடும்.
இது மூலநோயை தடுக்கும் சிறந்த மருந்தாகும். விளக்கெண்ணெய் மற்றும் நல்லெண்ணெய் இரண்டும் சேர்த்து ஒரு பத்து மில்லிகிராம் எடுத்து கலந்து தொப்புளைச் சுற்றி தடவிவிட்டு, அதன் மீது ஒரு காட்டன் டவல் எடுத்து நனைத்து பிழிந்துவிட்டு இருபது நிமிடம் போட்டு வைத்தால் உடல் சூட்டை உடனடியாக குறைத்துவிடும். அஜீரண தொந்தரவு, ரத்தக்கொதிப்பு, சர்க்கரை அதிகம் ஆகாமல், பார்த்துக் கொள்ளும். உணவு செறியாமை தொந்தரவை சரி செய்யும். மேலும், மாதவிடாய் சுழற்சியை சரி செய்யவும் இது உதவும்.
சிலருக்கு சருமம் வறண்டு போதல், சருமஎரிச்சல், கறுத்துப்போதல் போன்ற பிரச்னைகள் இருக்கும். சிலருக்கு அதிக வியர்வை சுரப்பினால், உடலில் உப்பு பூத்து, மணல் போன்று நர நரவென்று இருக்கும். அவர்கள் ஒருநாளில் 2 – 3 வேளை குளிர்ந்த நீரில் குளிப்பது நல்லது. பெரும்பாலும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை காட்டன் உடைகளாக அணிந்துகொள்வது நல்லது. அதிலும் குறிப்பாக, வெயிலில் வெளியே செல்ல நேரும்போது காட்டன் உடைகள் சிறந்தது.
அதுபோன்று வெயிலில் வெளியே போய்விட்டு வீடு திரும்பியதும் ஒரு பக்கெட் குளிர்ந்தநீர் எடுத்து அதில் ரோஸ்மேரி ஆயில் 2-3 சொட்டுகள் விட்டு அதில் கால்களை சிறிது நேரம் வைத்திருந்தால், வெயிலால் உடலில் ஏற்பட்ட சூடு நன்கு குறைந்து ஃப்ரீயாக இருக்கும். அதிக மசாலாக்கள் சேர்த்த உணவுகள், காரமான உணவுகள், எண்ணெய்யில் அதிகம் பொரித்த உணவுகள் போன்றவற்றை முடிந்தளவு தவிர்த்துவிட வேண்டும். மேலும், அதிகளவு நீர் காய்கறிகள், கீரை வகைகள் போன்றவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும். அதுபோன்று, சிறுதானிய உணவுகளும் அதிகமாக எடுத்துக் கொள்ளலாம். உதாரணமாக, கம்பங்கூழ், கேப்பக்கூழ், களி போன்றவற்றை சேர்த்துக் கொள்ளலாம்.
நீர் வகைகளில், பதநீர், நன்னாரி சர்பத், பழச்சாறுகள், பழங்களை மசித்து வீட்டிலேயே தயாரித்த ஐஸ்க்ரீம் போன்றவற்றை குழந்தைகளுக்கு கொடுக்கலாம். இதற்கு வாழைப்பழத்தை எடுத்து துண்டுகளாக்கி இரவு முழுவதும் ஃப்ரீசரில் வைத்துவிட்டு, காலை எழுந்து அதை எடுத்து அதனுடன் காய்ந்த திராட்சை, முந்திரி, பேரீச்சம் பழம், நாட்டுச்சர்க்கரை போன்றவற்றை சேர்த்து மிக்ஸியில் அடித்து, சிறிது நேரம் ஃப்ரீசரில் வைத்து எடுத்தால் ஐஸ்க்ரீம் ஆகிவிடும். அதனை குழந்தைகளுக்கு கொடுக்கலாம். மிகவும் சத்தானதாக இருக்கும். இதேபோன்று பட்டர் ஃப்ரூட்டிலும் நட்ஸ் எல்லாம் சேர்த்து செய்து கொடுக்கலாம். மேலே சொன்ன இந்த வழிமுறைகளை நாம் பின்பற்றி வந்தால், கோடையை நல்லவிதமாக கொண்டாடலாம்.
தொகுப்பு: ஸ்ரீ
The post கோடைகால நோய்கள் தடுக்கும் எளிய வழிகள்! appeared first on Dinakaran.