சென்னை: சென்னை, பழைய வண்ணாரப்பேட்டை, கோதண்ட ராமர் கோயிலில் நடைபெற்ற திருக்குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழாவில் அமைச்சர் சேகர்பாபு பங்கேற்று சிறப்பித்தார்.
பின்னர் நிருபர்களை சந்தித்து அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது : திராவிட மாடல் ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து இன்றுவரை 2,911 கோயில்களுக்கு குடமுக்கு நடைபெற்றுள்ளது. இன்றையதினம் மட்டும் திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம் கோயில், திருச்சி மாவட்டம் அன்பில், சுந்தரராஜ பெருமாள் கோயில் உள்ளிட்ட 31 கோயில்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. வரும் ஜூலை மாதத்திற்குள் 3,000 குடமுழுக்குகளை நிச்சயம் எட்டுவோம். இந்த ஆட்சியானது குடமுழுக்கில் ஒரு பொற்காலம் படைத்த ஆட்சி என்பதை நிரூபிக்கின்ற வகையில் ஏராளமான குடமுழுக்கு பணிகள் விரைந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
இந்த அரசு பொறுப்பேற்றபின் இதுவரை கோயில்களுக்கு சொந்தமான ரூ.7,665.61 கோடி மதிப்பிலான 7,546.33 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளன. மாநில வல்லுநர் குழுவால் 11,808 கோயில்களுக்கு திருப்பணி அனுமதி வழங்கப்பட்டிருக்கின்றன. ஒட்டுமொத்தமாக கடந்த நான்கு ஆண்டுகளில் ரூ. 5,917.11 கோடி மதிப்பிலான 25,150 பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வரலாற்றிலே இல்லாத அளவிற்கு இந்து சமய அறநிலைத்துறையின் திருக்கோயில்களுக்கு உபயதாரர்கள் ரூ. 1,323.77 கோடி மதிப்பிலான 10,414 பணிகளை செய்து தந்துள்ளனர். பழைய வண்ணாரப்பேட்டை, கோதண்டராமர் கோயிலுக்கு பணிகளை செய்து தந்த உபயதாரர் பாபு மனமார்ந்த நன்றி.
இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு 459 பெருமாள் கோயில்கள், 42 ஆஞ்சநேயர் கோயில்கள், 41 கிருஷ்ணர் கோயில்கள், 28 ராமர் கோயில்கள் என 570 வைணவ கோயில்களுக்கு இதுவரையில் குடமுழுக்கு நடந்திருக்கின்றது. ஒரு ராமர் கோயிலுக்கே கொண்டாட்டம் போடுகின்ற காலங்களில் 28 ராமர் கோயில்களுக்கு குடமுழுக்கினை நடத்தியுள்ளோம். இதுபோன்ற பணிகள் முழு வீச்சில் மேற்கொள்வதால் தான் இந்து சமய அறநிலையத்துறை வரலாற்றுச் சாதனைகளை பதிக்கின்ற ஒரு நல்ல சூழல் நிறைவேறி இருக்கின்றது, இந்தப் பணிகள் தொடரும்.
கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து பக்தர்களை காத்திடும் வகையில் இந்து சமய அறநிலையத்துறை கோயில்களில் எந்த வகையிலும் தீப்பிடிக்காத வகையில் பாதுகாப்பான தற்காலிக கீற்றுப் பந்தல்கள் அமைத்தல், கோயில் பிரகாரங்களின் நடைபாதைகளில் தேங்காய் நார் விரிப்புகள், வெப்பத்தை தடுக்கின்ற வெள்ளை நிற பெயிண்ட் அடித்தல், நடைபாதைகளில் வெப்பத்தை குறைத்திடும் வகையில் அவ்வபோது தண்ணீர் பீச்சி அடிப்பதற்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், பக்தர்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர், ஒரு சில இடங்களில் நீர்மோர், எலுமிச்சை பானகம் போன்றவை வழங்கிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மதுரை சித்திரை திருவிழாவிற்கான முன்னேற்பாடு பணிகளை மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி, வருவாய்துறை, காவல்துறை, சுகாதாரத்துறை, இந்து சமய அறநிலையத்துறை உள்ளிட்ட துறைகள் ஒருங்கிணைந்து சிறந்த முறையில் மேற்கொண்டு வருகின்றன. எந்த விதமான சிறு அசம்பாவிதமும் இல்லாமல் மீனாட்சி திருக்கல்யாணம், தேர் பவனி, அழகர் புறப்பாடு, அழகர் வைகை ஆற்றில் இறங்குவது போன்றவை சிறப்பாக நடைபெற வேண்டுமென முதலமைச்சர் வழிகாட்டி உள்ளார். அதன்படி அனைத்தும் சிறப்பாக நடைபெற மாவட்ட அமைச்சர்களோடு இணைந்து பணியாற்றி வருகிறோம். மீனாட்சி கல்யாண நிகழ்வில் துறையின் அமைச்சர் என்ற முறையில் பங்கேற்கவுள்ளேன். அனைத்திற்கும் எல்லாம் வல்ல இறைவனும் துணை நிற்பார். சட்டமன்றத்தில் நிகழ்வுகளை பார்த்திருப்பீர்கள். அதில் கோபப்பட்டு அதிகமாக கத்தியவர் எதிர்க்கட்சி தலைவர் தான். ஆனால் எங்கள் முதலமைச்சர் அனைத்தையும் உணர்ந்து ஐம்புலன்களை அடக்கி சர்வசாதாரணமாக இந்த சட்டமன்ற கூட்டத் தொடரை வெற்றிகரமாக நடத்தி முடித்து காட்டினார். ஜனநாயகத்தின் பாதுகாவலர் எங்கள் முதல்வர். சாதாரணமாக சட்டமன்ற இறுதி நாளில் முதலமைச்சர் கை கூப்பி வணங்கி விட்டு செல்வார்கள்.
ஆனால் எங்கள் முதல்வர் இன்னார், இனியவர் என்று பாராமல் அனைத்து எதிர்கட்சித் தலைவர்களுக்கும் அவர்களுடைய இருக்கைக்குச் சென்று கை குலுக்கி நான் எந்த சூழலையையும் சமாளிப்பேன் என்பதை வெளிக்காட்டினார். முதல்வர் வாழ்க்கையில் பயம் என்பது என்னவென்று தெரியாது. அவர் உறுதியாக நிற்பார், உறவுக்கு கை கொடுப்பார், உரிமைக்கு ஓங்கி குரல் கொடுப்பார், ஒன்றியத்திற்கு எந்த வகையிலும் அடிபணிந்து செல்லாத ஆற்றல் வாய்ந்த இரும்பு மனிதர் எங்கள் முதல்வர். ஆனால் ஒரே நாளில் அமித்ஷா வந்து இங்கே உட்கார்ந்து அவருடைய ஆளுமையை எடப்பாடிக்கு எவை எல்லாம் காட்டி பணிய வைக்க முடியுமோ அதையெல்லாம் காட்டி பணிய வைத்து ஒரே நாளில் கூட்டணியை உறுதி செய்து விட்டு சென்றார். ஆகவே எடப்பாடிக்குதான் பயம் வயிற்றிலும் தெரிகிறது கண்ணிலும் தெரிகிறது. முதலமைச்சர் கண்ணை பார்த்தால் 1,000 வாட்ஸ் மின்சாரம், அவர் கண்ணில் இருந்து புறப்படுகின்றது. இதில் எதிரிகள் 2026ல் பொசுங்குவார்கள்.
தமிழிசையை பொறுத்தவரை பிரதமர் மோடியின் வழியிலே செயல்பட்டு தன்னைத்தானே புகழ்ந்து கொள்கின்றவர். முதல்வருக்கு எடுக்கப்பட்ட பாராட்டு விழா என்பது அரசோ அல்லது தி.மு.க.வோ எடுத்த பாராட்டு விழா அல்ல, அனைத்து பல்கலைக்கழகங்களாலும் எடுக்கப்பட்டதாகும். முதல்வர் பாராட்டை விரும்பாதவர். பேசுகின்றபோது பாராட்டை நான் எங்கும் புறக்கணிப்பவன், பல்கலைக்கழக துணைவேந்தர்கள் கேட்டுக் கொண்டதால் இசைந்தேன் என்று குறிப்பிட்டார். ஒன்றியத்திற்கு தேவைப்படுகின்ற ஒரு வழிகாட்டுதலை தன்னுடைய சட்டப் போராட்டத்தால் உறுதியான நடவடிக்கைகளால் ஆளுகின்ற அரசை தவிர்த்து எதிர்க்கட்சி ஆட்சி செய்கின்ற மாநிலங்களில் இன்னல்களை விளைவிக்கும் ஆளுநர்களுக்கு ஒரு குட்டை வாங்கி கொடுத்தவர். ஒன்றியத்திற்கே வழிகாட்டியவர் எங்கள் முதல்வர் என்பதால் தான் பாராட்டு விழா நடத்தப்பட்டது.
காலம் முழுவதும் தூக்கி வைத்து முதல்வரை கொண்டாடுகின்ற, போற்றுகின்ற வகையில் பாராட்டுகள் அமைய வேண்டும். இது ஒரு நாளோடு நின்று விடக்கூடாது. தமிழிசை சௌந்தர்ராஜனுக்கு வயிற்று எரிச்சல். அக்னி வெயில் ஆரம்பித்திருக்கிறது. இன்னும் அதிக வெப்பத்தோடு வார்த்தைகளை கக்குவார். நாங்கள் குளிர்ந்த காற்றை தேடி நடந்து கொண்டிருக்கின்றோம். மக்களை குளிர்ச்சியாக அழைத்துச் செல்வோம். இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஸ்ரீதர், மாநகராட்சி மண்டல குழுத் தலைவர் ஸ்ரீராமுலு, உதவி ஆணையர் சிவக்குமார், கோயில் செயல் அலுவலர்கள் முரளீதரன், நித்யானந்தம், சந்திரமோகன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
The post கோடை வெயிலில் பக்தர்களை காக்க கோயில்களில் தற்காலிக பந்தல், தேங்காய் நார் விரிப்பு: அமைச்சர் சேகர்பாபு தகவல் appeared first on Dinakaran.