புதுடெல்லி: பதவிக்காலம் முடிய 6 மாதங்களுக்கு முன்பே சர்வதேச நாணய நிதியத்தின் இந்திய இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் திடீரென நீக்கப்பட்ட விவகாரத்தில், பாகிஸ்தானுக்கு நெருக்கடி கொடுக்க எடுத்த முடிவா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
சர்வதேச நாணய நிதியம் (ஐஎம்எப்) இயக்குநர் குழுவில், இந்தியாவின் பிரதிநிதியாக கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் பணியாற்றி வருகிறார். இவரது பதவிக்காலம் இன்னும் 6 மாதங்கள் உள்ளன. ஆனால் திடீரென அவரது பதவிக்காலத்தை ஒன்றிய அரசு முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. கிருஷ்ணமூர்த்தியின் சுப்ரமணியனின் மூன்றாண்டு பதவிக்காலம் முடிவடைவதற்கு இன்னும் ஆறு மாதங்கள் உள்ள நிலையில், கடந்த ஏப்ரல் 30ம் தேதியுடன் அவரை ஐஎம்எப் இயக்குநர் குழுவில் இருந்து விடுவித்துக் கொண்டது. இந்த உத்தரவு கடந்த ஏப். 30ம் தேதி உடனடியாக அமலுக்கு வந்துள்ளதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இதன் பின்னணி குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. பஹல்காம் தீவிரவாத தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தானுக்கு நேரடி தொடர்பு இருப்பதால், அந்நாட்டை உலகளவில் தனிமைப்படுத்தவும், புவிசார் மற்றும் பொருளாதார ரீதியாக நெருக்கடி கொடுக்கவும் ஒன்றிய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தி வைப்பு, விசா ரத்து, தூதரக உறவுகள் குறைப்பு, வரத்தகம் ரத்து, கடித போக்குவரத்து ரத்து, அட்டாரி – வாகா எல்லை மூடல் போன்ற பல நடவடிக்கைகளை பாகிஸ்தானுக்கு எதிராக எடுத்துள்ளது. அதேநேரம் சர்வதேச அளவில் பாகிஸ்தானுக்கு நிதி ஆதாரங்கள் கிடைப்பதை தடுக்கும் வகையிலும் பாகிஸ்தானுக்கு எதிராக ஒன்றிய அரசு அழுத்தங்களை கொடுத்து வருகிறது. உலக வங்கி, ஆசியன் வங்கி, சர்வதேச நாணய நிதியம் மூலம் பாகிஸ்தானுக்கு கிடைக்கும் உதவிகளை தடுக்கவும் முயற்சித்து வருகிறது. வரும் 9ம் தேதி பாகிஸ்தானுக்கு 1.3 பில்லியன் டாலர் காலநிலை புனரமைப்பு கடனை வழங்குவது குறித்து சர்வதேச நாணய நிதியம் முக்கிய ஆலோசனை கூட்டத்தை கூட்டுகிறது.
அப்போது இந்தியாவின் தரப்பில், பாகிஸ்தானுக்கு நிதி உதவி வழங்குவதை எதிர்க்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இக்கட்டான இந்த நேரத்தில், கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியனை ஐஎம்எப் இயக்குநர் குழுவில் இருந்து ஒன்றிய அரசு நீக்கி உள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ காரணமும் குறிப்பிடவில்லை. ஆனால் சர்வதேச நாணய நிதியத்தின் தரவுத்தொகுப்புகளின் நம்பகத்தன்மை குறித்து அவர் கேள்வி எழுப்பியது மற்றும் அவரது புத்தகத்தில் சில சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டிருந்ததால், தற்போது அவர் முன்கூட்டியே விடுவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இவர் கடந்த 2018 முதல் 2021 வரை இந்தியாவின் தலைமை பொருளாதார ஆலோசகராக பணியாற்றியவர். கடந்த 2022 நவம்பரில் சர்வதேச நாணய நிதியத்தின் இயக்குநர் குழுவின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார்.
இவர் இந்தியா, வங்கதேசம், இலங்கை, பூட்டான் ஆகிய நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தினார். தற்போது, சர்வதேச நாணய நிதியத்தின் இணையதளத்தில் இந்த பதவி காலியாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதேநேரம் சர்வதேச நாணய நிதியத்தின் அடுத்த பிரதிநிதியை ஒன்றிய அரசு இன்னும் நியமிக்கவில்லை. ஆனால் ஒன்றிய அரசின் நிதி செயலாளர் அஜய் சேத் முன்னணி தேர்வராக உள்ளார். இந்தியாவின் இந்த திடீர் முடிவு, சர்வதேச அரங்கில் இந்தியாவின் நிலைப்பாட்டை பலப்படுத்துவதற்கான நகர்வாகவும், பாகிஸ்தானுக்கு எதிரான நிதி நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிப்பதாகவும் பார்க்கப்படுகிறது.
ஐ.எம்.எப் பணி என்ன?
சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக வாரியமானது, ஐ.எம்.எப்-யின் அன்றாட அலுவல்களை நடத்தி வருகிறது. இதில் உறுப்பு நாடுகள் அல்லது நாடுகளின் குழுக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 24 நிர்வாக இயக்குநர்கள் மற்றும் அதன் தலைவராக இருக்கும் நிர்வாக இயக்குநர் ஆகியோர் உள்ளனர். வாரியம் வழக்கமாக வாரத்திற்கு பல முறை கூடுகிறது. ஒவ்வொரு உறுப்பு நாட்டின் பொருளாதாரக் கொள்கைகளின் தேசிய, பிராந்திய மற்றும் உலகளாவிய விளைவுகளை விவாதிப்பதற்கும், உறுப்பு நாடுகளுக்கு தற்காலிக செலுத்துதல் சமநிலை சிக்கல்களைத் தீர்க்க உதவுவதற்காக ஐ.எம்.எப் நிதியுதவியை அங்கீகரிப்பதற்கும், அத்துடன் ஐ.எம்.எஃப்-ன் திறன் மேம்பாட்டு முயற்சிகளை மேற்பார்வையிடுவதற்கும் அனைத்து ஐ.எம்.எஃப் உறுப்பு நாடுகளும் அதன் நிர்வாக வாரியத்தில் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகின்றன.
The post பதவி காலம் முடிவதற்கு 6 மாதங்களுக்கு முன்பே சர்வதேச நாணய நிதியத்தின் இந்திய இயக்குநர் திடீர் நீக்கம்: பாகிஸ்தானுக்கு நெருக்கடி கொடுக்க ஒன்றிய அரசு எடுத்த முடிவா? appeared first on Dinakaran.