கோடை வெப்பத்தை சமாளிக்க 20 நிமிடங்களுக்கு ஒருமுறை தண்ணீர் குடிப்பது நல்லது: பொதுமக்களுக்கு சுகாதாரத்துறை அறிவுரை

11 hours ago 3

வேலூர்: கோடை வெப்பத்தை சமாளிக்க பொதுமக்கள் ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கு ஒருமுறை தண்ணீர் குடிக்க வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுரை வழங்கியுள்ளது. ஒவ்வொரு வருடமும் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும். ஆனால், நடப்பாண்டு பிப்ரவரி மாத இறுதியில் இருந்தே வெயில் அதிகரித்து வருகிறது. இதனால் குழந்தைகள், கர்ப்பிணிகள், வயதானவர்கள், வெளியில் வேலை செய்பவர்கள், வாகன ஓட்டிகள் உள்பட பல்வேறு தரப்பினரும் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர். வெயில் காரணமாக அம்மை, நீரிழப்பு, ஹிட்ஸ்ட்ரோக் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது. இந்நிலையில், வெப்ப அலை பாதிப்பை தடுக்க, பொதுமக்களுக்கு வழிகாட்டுதல்களை சுகாதாரத்துறை வழங்கியுள்ளது.

இதுகுறித்து தமிழக பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு, இயல்பை விட 2 முதல் 3 டிகிரி வரை செல்சியஸ் வெப்பநிலை அதிகமாக இருக்கும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே, பொதுமக்கள் தாகம் இல்லாவிட்டாலும், நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். பயணத்தின்போது குடிநீரை எடுத்து செல்லுங்கள். வானொலி, தொலைக்காட்சி, செய்தித்தாள்கள் அல்லது இந்நிய வானிலை ஆய்வு மையத்தின் இணையதளம் மூலம் வானிலை அறிவிப்புகளை தொடர்ச்சியாக கண்காணிக்க வேண்டும். நன்கு காற்றோட்டம் மிகுந்த, குளிர்ந்த பகுதிகளில் வீட்டிற்குள் இருக்க வேண்டும். வெப்பத்தை தடுக்க பகலில் ஜன்னல்கள் மற்றும் திரைச்சீலைகளை மூடி வைக்கலாம்.

திரைச்சீலைகள், ஷட்டர்களை பயன்படுத்தி வீடுகளை குளிர்ச்சியாகவும், நல்ல காற்றோட்டம் இருப்பதை உறுதிப்படுத்தவும். அதிக வெப்பத்தின்போது கீழ் தளங்களில் தங்கலாம். உடலை குளிர்விக்க மின்விசிறிகள் மற்றும் ஈரத்துணிகளை பயன்படுத்தலாம். வெயில் அதிகமாக இருக்கும் சமயங்களில் சமைப்பதை தவிர்க்கவும். சமையல் அறை நன்கு காற்றோட்டமாக வைத்திருங்கள். வெளியில் வேலை செய்பவர்கள் மீது நேரடியாக சூரிய ஒளி படுவதை தவிர்க்க வேண்டும். வெயில் அதிமாக இருக்கும்போது உடலுக்கு அதிக வேலைப்பளுவை கொடுக்கக்கூடாது.

நிழலான அல்லது குளிர்ந்த பகுதிகளில் அடிக்கடி சென்று ஓய்வு எடுப்பது, நீரேற்றமாக இருக்க ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் ஒருமுறை தண்ணீர் குடிப்பது நல்லது. தலைச்சுற்றல், தலைவலி உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை பெற வேண்டும். குறிப்பாக மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்கவும். மதிய நேரத்தில் வெளிப்புற நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம். காலணிகள் இல்லாமல் நடப்பதை தவிர்க்க வேண்டும். வெளியில் செல்லும்போது தளர்வான, வெளிர்நிற பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். சூரிய ஒளி உடலில் நேரடியாக படாதவாறு குடை, ஹெல்மெட், தொப்பி, துண்டு அணிந்து செல்லலாம். மேலுமத் காலணிகளை அணிந்து செல்ல வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

பாதிப்புள்ளவர்களை கண்காணிக்கணும்

வெப்ப அலை காரணமாக நோய் பாதிப்பு ஏற்படும் சூழல் உள்ளது. கைக்குழந்தைகள், இளம் குழந்தைகள், கர்ப்பிணிகள், வெளியில் பணிபுரியும் வேலையாட்கள், மனநலம் பாதித்த நபர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். ஏற்கனவே நோய் பாதிப்பு உள்ளவர்கள், குறிப்பாக இருதய நோய் மற்றும் ரத்த அழுத்த பாதிப்பு உள்ளவர்கள் கவனமாக இருக்க வேண்டும். தனியாக வாழும் வயதான முதியவர்கள் அல்லது உடல்நிலை சரியில்லாதவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும். அதிக உடல் வெப்பநிலை, குழப்பம் அல்லது சுயநினைவின்மை போன்ற வெப்ப பக்க வாதத்தின் (ஹீட் ஸ்ட்ரோக்) அறிகுறிகள் இருந்தால், உடனடியாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு செல்ல வேண்டும்.

டீ, காபி தவிர்க்க வேண்டும். நீரிழப்புக்கு காரணமாக உள்ள மதுபானங்கள், டீ, காபி, குளிர்பானங்கள் மற்றும் சர்க்கரை பானங்கள் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். அதிகளவு புரதசத்து அல்லது பழைய உணவை உட்கொள்ள வேண்டாம். ஓஆர்எஸ் கரைசல், மோர், எலுமிச்சை உள்ளிட்ட பழச்சாறுகளை வீட்டில் தயாரித்து அதில் சிறிதளவு உப்பு சேர்த்து குடிக்கலாம். தர்பூசணி, முலாம்பழம், ஆரஞ்சு, திராட்சை, அன்னாசி, வெள்ளரி போன்ற நீர்ச்சத்து நிறைந்த பழங்கள், காய்கறிகள், கீரைகள் சாப்பிடலாம்.

The post கோடை வெப்பத்தை சமாளிக்க 20 நிமிடங்களுக்கு ஒருமுறை தண்ணீர் குடிப்பது நல்லது: பொதுமக்களுக்கு சுகாதாரத்துறை அறிவுரை appeared first on Dinakaran.

Read Entire Article