சிவகங்கை: “நாட்டில் கடந்த 3 தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற முடியவில்லை. மக்களவைத் தேர்தலிலும் ஆட்சியை பிடிக்க முடியவில்லை. பாஜக கையாளும் உத்திகளுக்கு ஈடாக இண்டியா கூட்டணி செயல்படவில்லை. தமிழகத்தை தவிர மற்ற மாநிலங்களில் இண்டியா கூட்டணியில் உள்ள கட்சிகளிடம் ஒருமித்த கருத்து வரவில்லை. இதை மையப்படுத்தி தான் ப.சிதம்பரம் பேசியுள்ளார்,” என்று சிவகங்கை எம்.பி கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது. கார்த்தி சிதம்பரம் எம்.பி தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களிடம் கார்த்தி சிதம்பரம் கூறியது: “மகளிர் உரிமைத் தொகையை பாகுபாடின்றி அனைவருக்கும் வழங்க வேண்டும். மற்ற திட்டங்களை விட நேரடியாக பணம் கொடுப்பது மிகச் சிறந்தது. இதன்மூலம் உள்ளூர் பொருளாதாரம் வளரும்.