மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் கால்நடைகளை பராமரிக்கும் முறைகள் குறித்து கால்நடை பராமரிப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குளிர்காலம் நோய்களை கொண்டு வரும் என்றால், கோடை காலத்தில் வெயிலை சமாளிப்பது மனிதர்களுக்கு மட்டுமல்ல, கால்நடைகளுக்கும் மிகப்பெரிய சவால்தான். கோடை காலத்தில் அதிக அதிகளவு வெப்பம் தாக்குவதால் கால்நடை வளர்ப்பில் பல பிரச்னைகள் ஏற்படுகின்றன. குறிப்பாக எல்லா கால்நடைகளிலும் அதன் உற்பத்தி பாதிக்கப்படுகின்றது. ஆனால் சில தகுந்த மேலாண்மை முறைகளை கடைப்பிடித்தால் ஓரளவு சீரான உற்பத்தியை வருடம் முழுவதும் நாம் பெற முடியும். கால்நடைகளில் சிறந்த உற்பத்தி கிடைக்க வேண்டுமானால் அவற்றிற்கு இயற்கையிலேயே தேவைப்படும் அடிப்படை வசதிகளை அமைத்து தர வேண்டியது அவசியமாகும். கால்நடைகளின் உயரிய உற்பத்தி திறனை உள்ளடக்கிய மரபு பண்பு, சுற்றுச்சுழல் மற்றும் அவற்றிற்கு அளிக்கப்படும் பராமரிப்பு ஆகிய மூன்றும் ஒரு முக்கோணம் போன்று ஒன்றுக்கொன்று இணைந்து செயல்பட்டு அவற்றின் திறனை வெளிப்படுத்த வழிவகை செய்கின்றன. இவற்றில் ஏதேனும் ஒன்று பாதிக்கப்பட்டால் கூட உற்பத்திக் குறைவினை உண்டாக்கி விடுகின்றன.
* கோடையில் கால்நடைகளை பாதிக்கும் முக்கிய காரணிகள்
ஒவ்வொரு உயிரிகளுக்கும் அவற்றின் அனைத்து உடற்செயல்பாடுகளும் எந்தவிதமான பாதிப்புமில்லாமல் சரியாக இயங்குதல், அவற்றின் உற்பத்திக்கு மிக அவசியமாகும். இவற்றிற்கு அவற்றின் சுற்றுப்புற சுழ்நிலையில் நிலவும் வெப்பநிலை, காற்றின் ஈரப்பதம், அவற்றின் வேகம், காற்றோட்ட வசதி, வெளிச்சம் மற்றும் ஒலி போன்ற காரணிகள் முக்கிய பங்கு வகிக்கின்றது. மேலும் இவை சீராக இருக்கும்படி கால்நடைகளின் சுற்றுப்புற சுழலை கவனிக்க வேண்டியது அவசியமாகும்.
* கோடைகால பராமரிப்பு என்றால் என்ன?
கோடை காலத்தில் கால்நடைகளை எப்படி நாம் சீராக பராமரிப்பது என்பது தான், கோடைகால பராமரிப்பு ஆகும். கோடை காலத்தினால் ஏற்படும் பாதிப்பு நம் நாட்டின் கால்நடைகளை விட உயரிய அயல்நாட்டு இன கால்நடைகளிலும், கலப்பினங்களிலும் தான் அதிகம். நம் நாட்டு இன கால்நடைகள் இந்த சூழ்நிலைகளை தாங்க வல்ல உடலமைப்பு, காது மற்றும் நீண்ட முகம் போன்றவையாகும். இருப்பினும், உயரிய கால்நடைகள் முற்றிலும் குளிர்பிரதேசத்திற்கு ஏற்றவாறு உடலமைப்பு உடையதால் தான் கோடையின் தாக்குதல் அதிகமாக உள்ளது. மேலாண்மை முறைகள் அதிக வெப்பம், அதிக நேர சூரிய ஒளி, அதிகரித்த அல்லது தேவையை விடக்குறைந்த காற்றின் ஈரப்பதம் மற்றும் வேகம் ஆகியவற்றை கூடுமானவரை சிறந்த மேலாண்மை முறைகள் மூலம் கட்டுப்படுத்தலாம். கால்நடைகளின் கொட்டகையில் சில மாறுபாடுகள் செய்வதன் மூலமும் மற்றும் வளர்ப்பு முறைகளை மாறுதல் செய்வதன் மூலமும், மேய்ச்சல், தீவனமளித்தல் போன்ற செயல்களில் கால நேரத்தை மாற்றுவதன் மூலமும் கோடைகால காரணிகள் கால்நடைகளை தாக்குவதிலிருந்து கட்டுப்படுத்தலாம்.
* கொட்டகை மேலாண்மை
நம் நாட்டிற்கு ஏற்றார் போல் அமைய எப்போதுமே கொட்டகையின் நீளவாக்கு கிழக்கு மேற்க்காக அமைக்கப்பட வேண்டும். இல்லையேல் கொட்டகையினுள் அதிக வெப்பம் தாக்கி பாதிப்பை ஏற்படுத்தும். மழைநீர் தங்கா வண்ணம், நல்ல காற்றோட்ட வசதி ஏற்படுத்தும் வகையில் மேடான பகுதியில் கொட்டகை அமைக்க வேண்டும். கொட்டகையின் மொத்த அகலம் 25 டூ 30 அடிக்கு மேல் அமையக்கூடாது. இல்லையேல் கொட்டகையினுள் குறுக்கு காற்றோட்டம் தடைபடுவதோடு கொட்டகையினுள் காற்றில் மாசுக்கள், வெப்பம் மற்றும் ஈரப்பதம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. பக்க சுவர்கள் கம்பி வலை கொண்டு சுற்றிலும் பாதுகாப்பு அமைத்துக் கொள்ளலாம். இல்லையேல் காற்றோட்ட அளவு குறைந்து கொட்டகையினுள் சாதகமற்ற சுழல் உருவாகும்.
கூரைகளை வெப்பம் கடந்து செல்லாதவாறு அமைக்க ஓலை, வைக்கோல் போன்றவற்றை கொண்டு அமைக்கலாம். அல்லது கல்நார், உலோகத்தகடுகள் கொண்டு அமைத்து அதன் மேல் வைக்கோல், தட்டை அல்லது தென்னகீற்று, பனை ஓலை கொண்டு வெளிப்புறத்தை மூடுவதன் மூலம் கொட்டகையினுள் வெப்பத்தை குறைக்கலாம். கூரையின் மேல் படர்கின்ற செடிகளான பசலிக்கொடி, கோவைக்கொடி மற்றும் படர்கின்ற அழகு செடிகளை கொண்டு படரவிட்டு வெப்பத்தை குறைக்கலாம். அதே சமயம் பாம்பு, பல்லி, எலி, பூச்சிகள் தொல்லை ஏற்பட வாய்ப்புள்ளது. ஒவ்வொரு கொட்டகையும் 30 அடி இடைவெளி விட்டு கட்ட வேண்டும். இல்லையேல் இது காற்றோட்டத்தை தடுக்கும். கோடைகாலங்களில் கொட்டகை சுற்றி நிழல் தரும் மரங்களை வளர்த்து வெப்பத்தை தடுக்கலாம். மதிய வேளையில் கொட்டகை மேல் தண்ணீர் தெளித்து வெப்பத்தை குறைக்கலாம்.
* தீவன மேலாண்மை
பொதுவாகவே கால்நடைகள் கோடையில் உண்ணும் தீவன அளவு குறைந்து விடுகின்றன. தண்ணீரின் தேவை அதிகரிக்கின்றது. மேய்சலுக்கு செல்லும் கால்நடைகள் நேரத்தை மாற்றிவிட வேண்டும். கோடை காலத்தில் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை வெயிலில் மேய்ச்சலுக்கு அனுப்பக்கூடாது. பசுந்தீவனம் கலப்பு தீவனம் கொடுக்கும் அளவை அதிகரித்து உயர், நார தீவனம் அளிக்கும் அளவை குறைக்க வேண்டும். பசுந்தீவனங்களை பகல் வேளையிலும், உலர் தீவனங்களை இரவு நேரங்களிலும் வழங்க வேண்டும். நார் தீவனங்களை சிறு துண்டுகளாக நறுக்கி கொடுப்பதன் மூலம் உடல் வெப்பம் தணியும். உலர் தீவனங்களான வைக்கோல், தட்டை ஆகியவற்றின் மீது உப்பு கலந்த தண்ணீர் அல்லது நாட்டு சக்கரை கலந்த தண்ணீர் தெளித்து பதப்படுத்தியபின் வழங்க வேண்டும். கோடை காலத்தில் தீவனம் உட்கொள்ளும் அளவு குறையும். எனவே நாள் ஒன்றுக்கு 15 லிட்டருக்கு மேல் கறவை மாடுகளுக்கு பருத்திக் கொட்டை, வறுக்கப்பட்ட சோயா, இதர எண்ணெய் வித்துக்களை 500 கிராம் முதல் 1 கிலோ வரை கூடுதலாக கொடுக்க வேண்டும்.
* பாதுகாப்பு நடைமுறைகளை கண்டிப்பாக கடைப்பிடிங்க- கால்நடை மருத்துவர்கள் அறிவுறுத்தல்
கால்நடை மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாவது: கோடை காலத்தில் கால்நடைகளை பாதுகாக்க தகுந்த பாதுகாப்பு நடைமுறைகளை கடைப்பிடித்து பாதுகாத்துக் கொள்ளலாம். அனல் காற்று வீசும் காலங்களில் கால்நடைகளை நிழல் தரும் கூரை அடியில் கட்ட வேண்டும், கால்நடைகளுக்கு போதுமான அளவு தண்ணீர் மற்றும் தீவனம் கொடுக்க வேண்டும். கால்நடை தீவனங்களை வெட்ட வெளியில் போட வேண்டாம், அடைக்கப்பட்ட இடத்தில் கால்நடைகளை கட்ட வேண்டாம். பறவைகளுக்கு போதுமான நிழற்கூரைகள் அமைத்துக் கொடுத்து போதுமான நீர் கொடுக்க வேண்டும். செல்லப் பிராணிகளை வெயில் காலங்களில் வாகனங்களில் தனியே விட்டுச் செல்லக் கூடாது. வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ள நண்பகல் நேரங்களில் மாடுகளுக்கு வெப்பத்தினால் அயர்ச்சி ஏற்படா வண்ணம், அதன் மேல் தண்ணீர் தெளிக்க வேண்டும். நீர் தெளிப்பான் கொண்டு கோழிகளின் மீது நீர் தெளிக்க வேண்டும். மேலும் கோழி கொட்டகைகளின் சன்னல்களில் ஈரத்துணி கொண்டு மூடுவதால் கோழிகளுக்கு ஏற்படும் வெப்ப அழுத்தத்தைக் குறைக்கலாம். கோடைகாலத்தில் இதுபோன்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு விவசாயிகள் தங்கள் கால்நடைகளை பாதுகாத்துக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்.
The post கோடை காலத்தில் கால்நடைகளை கவனமுடன் பராமரிக்க வேண்டும்: கால்நடை வளர்ப்போர் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் appeared first on Dinakaran.