
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மாதந்தோறும் அமாவாசை விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி சித்திரை மாதத்திற்கான அமாவாசை விழா நேற்று நடைபெற்றது. விழாவை முன்னிட்டு அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு கருவறையில் உள்ள அம்மனுக்கும், சிவபெருமானுக்கும் பால், தயிர், சந்தனம், மஞ்சள், விபூதி, குங்குமம், இளநீர், பஞ்சாமிர்தம், தேன், பன்னீர் உள்ளிட்ட பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தங்க கவச அலங்காரத்தில் அருள்பாலித்தனர். உற்சவ அம்மன் அண்ணாமலையார் சமேத உண்ணாமலையம்மன் அலங்காரத்தில் காட்சி அளித்தார்.
இரவு 9 மணிக்கு பூசாரிகள் ஊரின் முக்கியப் பிரமுகர்களை கோவிலுக்கு அழைத்து வந்தனர். பின்பு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இரவு 10.30 மணிக்கு பூசாரிகள் பம்பை, மேளதாளம் முழங்க அக்னி குளத்திற்கு சென்றனர். அங்கு பலவித பூக்களைக் கொண்டு பூங்கரகம் செய்து, ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து வந்தனர். பூங்கரகம் இன்று அதிகாலை கோவிலை வந்தடைந்தபின் அம்மனுக்கு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
அமாவாசை விழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, சேலம், கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.