
திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த ஸ்ரீவராகம் பகுதியை சேர்ந்தவர் 31 வயதான பெண். இவர் திருவனந்தபுரத்தில் உள்ள பிரபல சாப்ட்வேர் நிறுவனத்தில் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணம் முடிந்து கணவர் உள்ளார். அந்த பெண் தனது வயிற்று பகுதியில் இருந்த கொழுப்புகளை நீக்குவதற்காக திருவனந்தபுரம் கழக்கூட்டம் பகுதியில் உள்ள ஒரு தனியார் உடல் அழகு மறுசீரமைப்பு மருத்துவமனையில் சிகிச்சைபெற்றார்.
இதற்காக அந்த மருத்துவமனையில் அந்த பெண்ணுக்கு கடந்த பிப்ரவரி மாதம் 22-ந்தேதி அறுவை சிகிச்சை நடைபெற்றது. இதையடுத்து சிகிச்சை முடிந்து மறுநாள் அவர் வீடு திரும்பினார். வீட்டுக்கு வந்த சில நாட்களில் அவருக்கு வாந்தி, மயக்கம் என பல உடல்நலக்குறைபாடு ஏற்பட்டுள்ளது. மேலும் அவருக்கு ரத்த அழுத்தமும் குறைந்தது.
இதையடுத்து அந்த பெண்ணின் கணவர், அறுவை சிகிச்சை செய்த மருத்துவமனையை தொடர்பு கொண்டு விவரத்தை தெரிவித்தார். ஆனால் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் டாக்டர்கள் இல்லை. எனவே மறுநாள் வருமாறு மருத்துவமனை தரப்பில் கூறினர். ஆனால் அந்த பெண்ணின் உடல்நிலை மிகவும் மோசமானது. இதனால் அவரை கணவர் வேறொரு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்காக சேர்த்தார்.
அங்கு அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து அந்த பெண்ணின் உடலில் ரத்த ஓட்டம் சீராக இல்லாமல் போனது. இதனால் அவரது இடது காலில் 5 விரல்கள் மற்றும் வலது கையில் 4 விரல்களை துண்டிக்கும் நிலை ஏற்பட்டது. இல்லாவிட்டால் அவரது உயிருக்கு ஆபத்து என டாக்டர்கள் கூறினர். இதையடுத்து அவரது கையில் 4 விரல்களும், காலில் 5 விரல்களும் வெட்டி அகற்றப்பட்டன.
கொழுப்பு நீக்க அறுவை சிகிச்சை தவறாக செய்ததன் காரணமாகவே தனது மனைவி 9 விரல்களை இழந்து விட்டதாக அந்த பெண்ணின் கணவர் குற்றம் சாட்டினார். மேலும் இதுபற்றி அவர், அறுவை சிகிச்சை செய்த தனியார் உடல் அழகு மறுசீரமைப்பு மருத்துவமனை மீது போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் மருத்துவமனையின் உரிமையாளரான டாக்டர் பிபிலாஷ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த மருத்துவமனை உடனடியாக மூடப்பட்டது. இந்த சம்பவம் திருவனந்தபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.