கொள்ளிடம் அருகே தண்ணீர் பந்தல் கிராமத்தில் பொது குளத்தில் ஆகாய தாமரையை அகற்ற வேண்டும்

1 week ago 4

*பொதுமக்கள் கோரிக்கை

கொள்ளிடம் : கொள்ளிடம் அருகே தண்ணீர் பந்தல் கிராமத்தில் பொது குளத்தில் உள்ள ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே தண்ணீர் பந்தல் கிராமத்தில் பொதுக்குளம் உள்ளது. காலம் காலமாக இந்த குளத்தில் அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் நீராடியும் கால்நடைகளுக்கு தண்ணீரை எடுத்து பயன்படுத்தியும் அங்கு நடைபெறும் விழாக்கள் மற்றும் வீடுகளில் உள்ள நிகழ்ச்சிகளுக்கு இந்த குளத்திலிருந்து தண்ணீரை எடுத்து பயன்படுத்தி வந்தனர். அப்பகுதியில் உள்ள கோயில்களில் அபிஷேகத்திற்காக இங்கிருந்து எடுத்துச் செல்லப்படும் தண்ணீர் யாகத்தில் வைத்து பூஜிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்தது.

முக்கிய கிராம விழா காலங்களில் 30 வருடங்களுக்கு முன்பு இந்த குளத்தை நீரை பயன்படுத்தி உணவு சமைத்தும் உண்டு வந்தனர். இந்தக் குளத்தைச் சுற்றிலும் 50 ஆண்டுகளுக்கு முன்பே படித்துறைகள் மற்றும் தடுப்புச் சுவர்கள் நவீன முறையில் கட்டப்பட்டு மிகவும் அழகாக காட்சியளித்தன. இக்குளத்தின் தண்ணீர் கிராம மக்களால் பெரிதும் பாதுகாக்கப்பட்டு வந்தது.

இகுளத்திற்கு பாசன வாய்க்காலில் இருந்து வரும் தண்ணீர் சென்று தேங்கும் வகையிலும் குளத்தில் தேங்கிய தண்ணீர் வெளியேறும் வகையிலும் வாய்க்கால்கள் இருந்து வந்தன. அந்த வாய்க்கால்கள் ஆக்கிரமிப்புக்குள்ளாகி விட்டதால் தண்ணீர் சென்று சேரவோ அல்லது வெளியேறவோ முடியாத நிலையில் இருந்து வருகிறது.

மழைக்காலத்தில் பெய்யும் மழை நீர் மட்டுமே இந்த குளத்தில் தேங்கும் நிலை இருந்து வருகிறது. இதனால் இக்குளத்தில் தேங்கி கிடக்கும் தண்ணீரால் துர்நாற்றம் வீசும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த குளத்தை தூர்வாரி பல வருடங்கள் ஆகிவிட்டன.

இதனை உரிய முறையில் பராமரிக்காமல் இருந்து வருகிறது. இந்தக் குளத்தை முழுவதுமாக போர்வை போர்த்தியது போன்று ஆகாய தாமரை செடிகள் வளர்ந்து மூடியுள்ளன. குளத்தின் தரைப்பகுதி சேரும் சகதியுமாக இருந்து வருவதால் தவறி விழுந்து விட்டால் அதில் சிக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.கால்நடைகள் கூட இறங்கி விட்டால் அதிலிருந்து மீண்டு வர முடியாத நிலையில் இருந்து வருகிறது.

எனவே காலம் காலமாக சிறப்பாக பராமரிக்கப்பட்டு வந்த இந்த பொதுக்குளம் பராமரிக்காமல் இருந்து வருவதால் ஊராட்சி சார்பில் இதனை பராமரிக்கும் வகையில் இதில் உள்ள ஆகாய தாமரை செடிகளை முழுவதுமாக அகற்றியும் குளத்தை தூர் வாரவும் சுத்தம் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி கிராம மக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

The post கொள்ளிடம் அருகே தண்ணீர் பந்தல் கிராமத்தில் பொது குளத்தில் ஆகாய தாமரையை அகற்ற வேண்டும் appeared first on Dinakaran.

Read Entire Article