கொளத்தூர் சாய்வுதளத்திலிருந்து கொளத்தூர் நிலையம் வரை சுரங்கம் தோண்டும் பணியை தொடங்கியது குறிஞ்சி!

1 day ago 3

சென்னை: சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம் 2 வழித்தடம் 5-இல் கொளத்தூர் சாய்வுதளத்திலிருந்து கொளத்தூர் நிலையம் வரை சுரங்கம் தோண்டும் இயந்திரம் குறிஞ்சி சுரங்கம் அமைக்கும் பணியை தொடங்கியது. சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், ஜூன் 2015 ஆம் ஆண்டு முதல் மெட்ரோ இரயில் சேவையை சென்னையில் துவங்கியது. சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் கட்டம் I மற்றும் கட்டம் I நீட்டிப்புக்கு பிறகு வழித்தடம் 1 மற்றும் 2-ல் அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம் II-ல் 118.9 கி.மீ நீளத்திற்கு மேலும் 3 வழித்தடங்களை கட்டிமுடிக்க திட்டமிடப்பட்டு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

கட்டம் II-க்கு தமிழ்நாடு அரசு, ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் (JICA), ஆசிய வளர்ச்சி வங்கி, ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டுவங்கி மற்று புதிய வளர்ச்சி வங்கி ஆகியவை நிதியுதவி அளிக்கின்றன. சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம் 2 வழித்தடம் 5 மாதவரம் பால் பண்னையில் தொடங்கி கோயம்பேடு, போரூர், ஆலந்தூர் வழியாக சோழிங்கநல்லூர் வரை 47 கி.மீ நீளத்தில் 5 சுரங்கப்பாதை மெட்ரோ இரயில் நிலையங்களும் 39 உயர்மட்ட மெட்ரோ இரயில் நிலையங்களும் அமைக்கப்படவுள்ளது. சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம் 2-ல் வழித்தடம் 5-ல் பயன்படுத்தப்படும் சுரங்கம் தோண்டும் இயந்திரங்களுக்கு குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என நிலங்களின் பெயர்கள் பெயரிடப்பட்டுள்ளது.

வழித்தடம் 5-ல் சுரங்கப்பாதை கட்டுமான பணிகளில், முதல் சுரங்கம் தோண்டும் இயந்திரம் குறிஞ்சி கொளத்தூர் சாய்வுதளத்திலிருந்து கொளத்தூர் நிலையம் வரை (Upline) 246 மீ நீளத்திற்கு சுரங்கம்அமைக்கும் பணியை இன்று 19.02.2025 தொடங்கியுள்ளது. சுரங்கம் தோண்டும் இயந்திரம் குறிஞ்சி ஜூன்2025-இல் சுரங்கம் தோண்டும் பணியை முடித்து வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பின்னர் இந்தசுரங்கம் தோண்டும் இயந்திரம் குறிஞ்சி ஸ்ரீனிவாச நகர் நோக்கி 1.06 கி.மீ நீளத்திற்கு சுரங்கம் அமைக்கும் பணிக்கு பயன்படுத்தப்படும்.

இரண்டாவது சுரங்கம் தோண்டும் இயந்திரம் முல்லை, மார்ச் 2025 இறுதிக்குள் சென்னை வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் வில்லிவாக்கம் இரயில் நிலையத்திலிருந்து வில்லிவாக்கம் பேருந்து முனையம் நோக்கி 603 மீட்டர் நீளத்திற்கு சுரங்கப்பாதை அமைக்கும் பணியை தொடங்கும். மீதமுள்ள இரண்டு சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் தள நிலைமைகளின் அடிப்படையில் சுரங்கம் அமைக்கும் பணியினை தொடங்கும். வழித்தடம் 5-இல் கொளத்தூர் முதல் நாதமுனி வரையிலான ஐந்து சுரங்கப்பாதை நிலையங்கள் உட்பட 3.9 கி.மீ நீளத்திற்கு இரட்டை சுரங்கப்பாதையுடன் 7.8 கி.மீ. நீளத்திற்கு சுரங்கப்பாதை அமைக்கும் பணி, சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் ஒப்பந்ததாரர் Tata Projects நிறுவனம் மூலம் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றது.

தமிழ்நாடு அரசின் சிறப்பு முயற்சிகள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மருத்துவர். கே.கோபால், இ.ஆ.ப., சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநர் திரு. தி.அர்ச்சுனன், தலைமை பொது மேலாளர் (திட்டம் திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு) திரு. டி.லிவிங்ஸ்டோன் எலியாசர், பொது ஆலோசகர் குழுத் தலைவர் டோனி புர்ச்செல், Tata Projects நிறுவனத்தின் பொறியாளர் திரு.உஸ்மான் ஷெரீஃப் ஆகியோர் சுரங்கம் தோண்டும் பணியினை பார்வையிட்டனர். சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.

 

The post கொளத்தூர் சாய்வுதளத்திலிருந்து கொளத்தூர் நிலையம் வரை சுரங்கம் தோண்டும் பணியை தொடங்கியது குறிஞ்சி! appeared first on Dinakaran.

Read Entire Article