கொல்லம்பாளையம் ரயில்வே நுழைவுபாலத்தை கடக்க மேம்பாலம் அமைக்கப்படுமா..?

3 months ago 18

*பல ஆண்டு பிரச்னைக்கு தீர்வு காண பொதுமக்கள் எதிர்பார்ப்பு

ஈரோடு : ஈரோடு கொல்லம்பாளையம் ரயில்வே நுழைவு பாலத்தைக் கடக்க பல ஆண்டுகளாக நீடித்து வரும் பிரச்னைக்கு தீர்வு காணும் விதமாக மேம்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். ஈரோடு நகரில் இருந்து கரூர், வெள்ளகோவில் மற்றும் பழனி உள்ளிட்ட முக்கிய ஊர்களுக்கு செல்வதற்கு ஈரோடு ரயில் நிலையம், காளை மாட்டு சிலை பகுதி வந்தடைந்து, அங்கிருந்து கொல்லம்பாளையம் ரயில்வே நுழைவுபாலத்தை கடந்து அதன் பின்னரே கரூர், வெள்ளக்கோவில், பழனி உள்ளிட்ட ஊர்களுக்கு செல்ல முடியும்.

சுமார் 30 வருடங்களுக்கு முன்னர் அமைக்கப்பட்டிருந்த ஒற்றை நுழைவுப்பாலத்தின் வழியாகவே பழனி சாலையில் அமைந்துள்ள கொல்லம்பாளையம் நாடார் மேடு, சாஸ்திரி நகர் மற்றும் மூலப்பாளையம், செட்டிபாளையம் உள்ளிட்ட பகுதிகள் வழியாக பூந்துறை, அரச்சலூர் பகுதிகளுக்கு பொதுமக்கள் சென்றுவர முடியும்.அதேபோல, வெள்ளகோவில், முத்தூர், கரூர் பகுதிகளுக்கும் மற்றும் அதன் வழித்தடங்களில் உள்ள சோலார் அதை அடுத்துள்ள மொடக்குறிச்சி, எழுமாத்தூர், கரூர் ரோட்டில் உள்ள கணபதிபாளையம், கருமண்டம்பாளையம், ஊஞ்சலூர், கொடுமுடி போன்ற ஊர்களுக்கும் செல்ல முடியும். நாளுக்கு நாள் ஏற்பட்ட வளர்ச்சி மற்றும் வாகன பெருக்கம் காரணமாக ஈரோடு, கொல்லம்பாளையம் நுழைவுப்பாலத்தில் பேருந்துகள், லாரிகள் தவிர கனரக வாகனங்கள் செல்லவும் கடும் நெருக்கடி ஏற்பட்டது.

இதனால், கொல்லம்பாளையம் ரயில்வே நுழைவுப்பாலத்தை இருவழிப்பாதையாக மாற்ற முடிவு செய்யப்பட்டது. ஆனால் அப்போதே பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், அப்பகுதியில் மேம்பாலம் அமைப்பது மட்டுமே நீண்ட கால தீர்வாக அமையும் என கொல்லம்பாளையம் நாடார் மேடு பகுதி வாழ் மக்களும், பல்வேறு பொதுநல அமைப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இருப்பினும், ரயில்வே நிர்வாகத்தின் விதிமுறைகளின் படி, நுழைவுப்பாலத்தின் மேலாகவும், லெவல் கிராசிங் வழியாகவும் மேம்பாலங்கள் அமைக்க முடியாது என ரயில்வே நிர்வாகம் தெரிவித்ததையடுத்து, கொல்லம்பாளையம் ரயில்வே நுழைவுப்பாலத்தின் அருகில், பாலத்திற்கு கீழ் சற்று ஆழமாக பாதை அமைத்து கனரக வாக வாகனங்களும் சென்று வரும் வகையில் மற்றொரு நுழைவுபாதை அமைக்கப்பட்டது.

இதனால், கொல்லம்பாளையம் ரயில்வே நுழைவுபாலம் இரு வழிப்பாதையாக மாற்றப்பட்டது. புதிதாக அமைக்கப்பட்ட வழித்தடம் சற்று ஆழமாக அமைக்கப்பட்டதால் பாலத்தின் கீழ் எப்போதும் தண்ணீர் தேங்கி, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், அதனை சீரமைக்க, தொடர்ந்து, கடந்த ஆண்டு வரை கூட லட்சக்கணக்கில் பணம் செலவிடப்பட்டு வருகிறது. ஆனாலும், பிரச்னை தீரவில்லை. இந்நிலையில், ஈரோடு மாநகராட்சியாக அறிவிக்கப்பட்ட பின், அதன் எல்லைகள் விரிவடைந்து, பழனி, கரூர், வெள்ளகோவில் சாலைகளில் குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள் என அதிகரித்து அசுர வளர்ச்சி ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில் கொல்லம்பாளையம் நுழைவுபாலம் மட்டுமே அந்த பகுதிக்கு சென்று வருவதற்கான பாதையாக இருப்பதால் கொல்லம்பாளையம் நுழைவுபாலத்தில் போக்குவரத்து நெருக்கடி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் பாலத்தின் கீழ் தேங்கும் தண்ணீர், தீராத பிரச்னையாக இருந்து வருகிறது. இந்த, பிரச்னைக்கு தீர்வு காணும் விதமாக கொல்லம்பாளையம் நுழைவுபாலத்தை கடந்து, கரூர், பழனி, வெள்ளகோவில் சாலைகளுக்கு செல்வதற்கு மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனும் கோரிக்கையும் வலுத்து உள்ளது.

இது குறித்து, கடந்த காலங்களில் கொல்லம்பாளையம் ரயில்வே நுழைவுபாலம் விரிவாக்கம் மற்றும் மேம்பால கோரிக்கை ஆகியவற்றில் முக்கிய பங்காற்றியவரும், காசிபாளையம் பேரூராட்சி முன்னாள் தலைவருமான துரை ராஜ் கூறியதாவது:

கொல்லம்பாளையம் ரயில்வே நுழைவுபாலத்தின் பிரச்னைக்கு தீர்வு காண அப்போது அதிமுக எம்எல்ஏவாக இருந்த மாணிக்கம் மற்றும் அதிமுக அமைச்சர் கண்ணப்பன் ஆகியோர் மூலமாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில் தற்போது உள்ள நுழைவுப்பாலத்தின் இருவழிப்பாதை அமைக்கப்பட்டது. ஆனால், அப்போது இந்த நுழைவுப்பாதை ஒரு மாற்று தீர்வாக அமையாது என்றும், தொடர்ச்சியான இன்னல்களை சந்திக்க வேண்டி வரும் என்றும் தெரிவித்தோம்.

ஆனால், ரயில்வே நிர்வாகத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு அவ்வாறு தான் மாற்று ஏற்பாடு செய்யப்படும் முடியும் எனும் சூழல் நிலவியதால், இரண்டாவதாகவும் நுழைவு வழித்தடமே அமைக்கப்பட்டது. ஆனால், தொடர்ந்து அதில் நிலவு வரும் பிரச்னைகளை கருத்தில் கொண்டு முன்னாள் எம்பி கணேச மூர்த்தி மூலமாக கடந்த சில ஆண்டுகளாக தொடர்ச்சியாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

அதன் அடிப்படையில் கொல்லம்பாளையம் நுழைவுப்பாலம் பகுதியை தவிர்த்து, அந்த ரயில்வே தண்டவாளப்பகுதிகளை கடக்க காளை மாட்டு சிலை பகுதியில் இருந்து நேராக முழுவதும் ரயில்வேக்கு சொந்தமாக உள்ள இடங்கள் வழியாகவே, ரயில் நிலையத்துக்கு சற்று கிழக்குப்புறம் தள்ளி, ரயில் தண்டவாளத்தை கடந்து, ரயில் நிலையத்துக்கு பின்புறம் உள்ள ரயில்வே காலனி மைதானம் வழியாக, சாஸ்திரி நகர் பிரிவு பகுதியில் சாலையில் இணையுமாறு ரயில்வே மேம்பாலம் அமைக்க ஒரு திட்டம் முன் வைக்கப்பட்டது. அமைச்சர் சு.முத்துசாமியும் அது குறித்து பரிசீலித்து வந்தார். இது குறித்து, தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், கணேசமூர்த்தி எம்.பி.யின் மறைவுக்கு பின்னர் அத்திட்டம் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், தற்போது நகரின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு போக்குவரத்து நெருக்கடிகளுக்கு தீர்வு காணும் விதமாக கொல்லம்பாளையம் நுழைவுப்பால பிரச்னைக்கு தீர்வு காண விரைவில் அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதேபோல, சென்னிமலை ரோட்டில் உள்ள ரங்கம்பாளையம் நுழைவுப்பாலம், பழைய கரூர் ரோட்டில் உள்ள வெண்டிபாளையம் நுழைவுப்பாலம் மற்றும் வெண்டிபாளையம், மோளக்கவுண்டன்பாளையம் லெவல் கிராசிங் பகுதிகளிலும் ரயில்வே தண்டவாளத்தை பொதுமக்கள் கடந்து செல்ல, தொலைநோக்குப் பார்வையுடன் மேம்பாலங்கள் அமைத்திட அரசு நடவடிக்கை எடுத்திட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

The post கொல்லம்பாளையம் ரயில்வே நுழைவுபாலத்தை கடக்க மேம்பாலம் அமைக்கப்படுமா..? appeared first on Dinakaran.

Read Entire Article