கொல்கத்தா மருத்துவ மாணவி பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கில் மேற்கு வங்க அரசு மேல்முறையீடு:தூக்கு தண்டனை வழங்க கோரிக்கை!!

4 hours ago 1

கொல்கத்தா: கொல்கத்தா மருத்துவ மாணவி பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கில் மேற்கு வங்க அரசு மேல்முறையீடு செய்துள்ளது. மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 31வயது மதிக்கத்தக்க பெண் பயிற்சி மருத்துவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 9ம் தேதி பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக ஆக. 10ம் தேதி தன்னார்வலர் சஞ்சய் ராய் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பாக மருத்துவர்கள் தொடர் போராட்டத்தையும் நடத்தியதையடுத்து இந்த வழக்கின் விசாரணை சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

மேலும் இந்த வழக்கு தொடர்பாக 120க்கும் மேற்பட்ட சாட்சிகளிடமிருந்து வாக்கு மூலங்களைப் பதிவு செய்து சுமார் 66 நாள் ரகசிய விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து மேற்கண்ட பெண் பயிற்சி மருத்துவர் கொலை வழக்கை விரிவாக விசாரித்து தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்த கொல்கத்தா சியல்டா சிபிஐ சிறப்பு நீதிமன்றம், கைது செய்யப்பட்ட சஞ்சய் ராய் குற்றவாளி என்று கடந்த சனிக்கிழமை தீர்ப்பு வழங்கி இருந்தது. இதையடுத்து மேற்கண்ட வழக்கில் கொல்கத்தா சியல்டா சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி அனீர்பான் தாஸ் நேற்று பிற்பகல் 2.45 மணிக்கு சஞ்சய் ராய்க்கான தண்டனை விவரங்களை வழங்கினார்,

அதில், ‘‘பெண் பயிற்சி மருத்துவர் கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டுள்ளார். இதுபோன்ற சம்பவங்கள் என்பது மிகவும் அரிதிலும் அரிதானது கிடையாது. எனவே குற்றவாளி சஞ்சய் ராய்க்கு சாகும் வரையில் ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிடுகிறது. மேலும் அவருக்கு ரூ.50ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினருக்கு ரூ.17 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்’’ என்று உத்தரவிட்டார். இந்த நிலையில், கொல்கத்தா மருத்துவ மாணவி பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கில் மேற்கு வங்க அரசு மேல்முறையீடு செய்துள்ளது. குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்த கீழ் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என்று மேற்கு வங்க அரசு மனுவில் கோரிக்கை விடுத்துள்ளது.

The post கொல்கத்தா மருத்துவ மாணவி பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கில் மேற்கு வங்க அரசு மேல்முறையீடு:தூக்கு தண்டனை வழங்க கோரிக்கை!! appeared first on Dinakaran.

Read Entire Article