நன்றி குங்குமம் டாக்டர்
உலகளவில் மிகவும் பரவலாக அருந்தப்படும் பானங்களில் மிக முக்கியமான ஒன்று தேநீர் ஆகும், அதன்சிறந்த பண்புகள் மற்றும் பல ஆரோக்கிய நன்மைகளுக்காகக் கொண்டாடப்படுகிறது. பெரும்பாலானவர்கள் ஒரு கோப்பை தேநீருடன் தங்களுடைய நாளை தொடங்குவது காலங்காலமாக பின்பற்றி வரும் வழக்கம். ஆனால், இன்றைய அவசர யுகத்தில், காலை எழுந்ததும் தேயிலைத்தூளை கொதிக்க வைத்து டிகாஷன் எடுத்து தேநீர் போட்டு அருந்துவதற்கு எல்லாம் பலருக்கும் நேரம் இருப்பதில்லை. எனவே, மிக சுலபமாகவும், விரைவாகவும் தேநீர் தயாரிக்க கண்டுபிடிக்கப்பட்டதே டீ பேக்குகள்.
இருப்பினும், டீ பேக்குகளின் பாதுகாப்பு குறித்த சந்தேகங்கள் சமீபகாலமாக எழுந்துள்ளது. இதன்காரணமாக பல ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டது. அந்தவகையில் சமீபத்திய ஆய்வுகளில் டீ பேக்குளை தொடர்ந்து பயன்படுத்துவது புற்றுநோய், மற்றும் வளர்சிதை மாற்றங்கள் (metabolism) போன்ற ஆபத்தான உடல்நலப் பிரச்னைகளுக்கு வழிவகுக்கும் என கண்டறியப்பட்டுள்ளது.
டீ பேக்குகள் பொதுவாக பிளாஸ்டிக், நைலான் அல்லது இரசாயன சிகிச்சை செய்யப்பட்ட காகிதம் போன்ற பொருட்களிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. பிளாஸ்டிக் டீ பேக்குகள் பாலிஎதிலீன் டெரெப்தாலேட் (PET) அல்லது உணவு தர நைலான் ஆகியவற்றிலிருந்து தயாரிக்கப்படுகிறது, அவை அதிக வெப்பநிலையில் வெளிப்படும்போது தேநீரில் மைக்ரோபிளாஸ்டிக்ஸ் மற்றும் நானோ பிளாஸ்டிக்ஸை வெளியிடலாம். டீ பேக்குகள் எளிதில் கிழியாமல் இருப்பதற்காக எப்பிகுளோரோஹைட்ரின் (Epichlorohydrin) என்ற வேதிப்பொருள் சேர்க்கப்படுகிறது.
இந்த வேதிப்பொருள் புற்றுநோயை உண்டாக்கும் காரணியாக உள்ளது என்று தேசிய தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிறுவனம்(NIOSH) தெரிவித்துள்ளது. இந்த டீ பேக்கை சுடுதண்ணீரில் போடும் பொழுது எப்பிகுளோரோஹைட்ரின் நீரில் கரைந்து வேதியியல் மாற்றமடைந்து MCPD என்கின்ற வேதிப்பொருளாக மாறுகிறது. இது புற்றுநோய் காரணியாக இருப்பதோடு மட்டுமல்லாமல் குழந்தையின்மை மற்றும் நோய் எதிர்ப்புசக்தி குறைவு போன்ற பிரச்னைகளுக்கு காரணமாகிறது.
ஒரு டீ பேக் தோராயமாக 11.6 பில்லியன் மைக்ரோபிளாஸ்டிக் துகள்களையும் 3.1 பில்லியன் நானோ பிளாஸ்டிக் துகள்களையும் தேநீரில் வெளியிடும் என்று ஒரு குறிப்பிடத்தக்க ஆய்வு கண்டறிந்துள்ளது. டீ பேக்குகளில் இருந்து மைக்ரோபிளாஸ்டிக் துகள்கள் உடலுக்குள் நுழைந்தவுடன், சிறுநீரகங்கள், (kidney) ரத்த நாளங்கள் (Blood Vessels) மற்றும் நிணநீர் அமைப்புகள் (Lymph Nodes) போன்றவற்றில் தங்கி செல்களின் செயல்பாடுகளை சீர்குலைத்தல், உயிரணுக்களில் பிறழ்வுகளை ஏற்படுத்துதல், அழற்சி மற்றும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை அதிகரித்து நாள்பட்ட நோய்களை மோசமாக்குவதோடு, பெருங்குடல் புற்றுநோய், மார்பக புற்றுநோய், நீரிழிவுநோய், உடல்பருமன், இதயநோய்கள், கல்லீரல், தைராய்டு பிரச்னைகள், குழந்தையின்மை, பெண் குழந்தைகள் சீக்கிரமாக பருவமடைதல் மற்றும் குழந்தைகளின் நடத்தை மாற்றங்கள் போன்ற பிரச்னைகளை ஏற்படுத்துகிறது. ஈஸ்ட்ரோஜென் போன்ற ஹார்மோன்களின் சீரான செயல்பாடுகளுக்கு தடையாக இருப்பதால் தைராய்டு செயலிழப்பு அல்லது பாலிசிஸ்டிக் ஓவேரியன் சிண்ட்ரோம் (பிசிஓஎஸ்) போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது. இன்சுலின் உணர்திறன் குறைபாடு காரணமாக நீரிழிவு நோய் அபாயம் அதிகரிக்கிறது.
பிளாஸ்டிக் மட்டுமல்ல; காகித டீ பேக்குகளும் ஆபத்துக்களை ஏற்படுத்துகின்றன. அவை பெரும்பாலும் குளோரின் மற்றும் டையாக்ஸின்களை உள்ளடக்கிய இரசாயனத்தால் தயாரிக்கப்படுகின்றன. எனவே சூடுபடுத்தும் போது, இந்த இரசாயனங்கள் தேநீரில் கலந்து, சுவாச பிரச்சனைகள் மற்றும் உறுப்பு சேதம் போன்ற கடுமையான உடல்
நலப் பிரச்னைகளை உண்டாக்கும்.
இதனால் தேநீர் அருந்துவதை முற்றிலுமாக கைவிட வேண்டுமா என்றால், இல்லை. பாதுகாப்பான நடைமுறைகளைக் கடைப்பிடிப்பதன் மூலம், நம் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க முடியும்: பிளாஸ்டிக் அல்லது நைலானுக்குப் பதிலாக பாதுகாப்பான பொருட்களால் செய்யப்பட்ட மக்கும் அல்லது ஆர்கானிக் டீ பேக்குகளைத் தேர்வு செய்யவும்.
* டீ பேக்குகள் முற்றிலும் தவிர்த்துவிட்டு, தேயிலை இலைகள் அல்லது தேயிலைத்தூளை பயன்படுத்தி தேநீர் தயாரிக்கவும்.
* மசாலா மற்றும் மூலிகைகள் போன்ற இயற்கையான பொருட்களால் செய்யப்பட்ட மூலிகை தேநீர்களை அருந்தவும்.
ப்ளீச் செய்யப்படாத மஸ்லின் துணியைப் பயன்படுத்தி உங்கள் சொந்தடீ பேக்குகளை உருவாக்கவும்.
டீ பேக்குகள் விரைவான மற்றும் எளிதான உபயோகமாக தோன்றினாலும், அவை கொண்டு செல்லும் மறைந்திருக்கும் அபாயங்களைப் பற்றி எச்சரிக்கையாக இருப்பது முக்கியம். நமது ஆரோக்கியம் நமது பழக்கவழக்கங்களுடன் இணைக்கப்பட்டுள்ளதால், நமது அன்றாட வழக்கத்தில் சிறிய மாற்றங்களைச் செய்வது குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். ‘‘சிறிய செயல்கள் பெரிய மாற்றங்களுக்கு வழிவகுக்கும்.” தேநீர் தயாரிப்பதற்கு இயற்கையான மற்றும் பாதுகாப்பான முறைகளைத் தேர்ந்தெடுப்பதன் மூலம், நமது ஆரோக்கியத்தைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல், நிலையான எதிர்காலத்தையும் உறுதிசெய்யலாம்.
தொகுப்பு: ஸ்ரீதேவி குமரேசன்
The post டீ பேக் நன்மையா? தீமையா? appeared first on Dinakaran.