கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கு: தீர்ப்பு ஏமாற்றமளிப்பதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அதிருப்தி

3 hours ago 1

கொல்கத்தா : கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி சஞ்சய் ராய்க்கு ஆயுள் தண்டனை விதித்து கொல்கத்தா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. கொல்கத்தாவில் உள்ள கர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிவந்த முதுநிலை பயிற்சி பெண் மருத்துவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 9 ஆம் தேதி இரவு பணியில் இருந்த போது மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார். மருத்துவ பரிசோதனையில் அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது உறுதியானது. அதை தொடர்ந்து 33 வயதான சஞ்சய் ராய் என்ற ஊர் காவல் படை இளைஞரை அடுத்த நாளே போலீஸ் காவல் செய்தது. இந்த கொலை சம்பவம் நாடு முழுவதும் கொதிப்பை ஏற்படுத்திய நிலையில் மருத்துவர்களும் தொடர் போராட்டங்களில் இறங்கினர்.

இந்த வழக்கை கையில் எடுத்த சிபிஐ கடந்த நவம்பர் மாதம் 4வது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. அன்று முதல் இந்த வழக்கில் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்த ஷில்தா கூடுதல் அமர்வு நீதிமன்றம் இந்த மாதம் 5 ஆம் தேதி சஞ்சய் ராயை குற்றவாளி என்று தீர்ப்பளித்தது. சஞ்சய் ராய்க்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று பெண் மருத்துவரின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் குற்றவாளி சஞ்சய் ராய்க்கு ஆயுள் தண்டனையும், ரூ.50,000 அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. சஞ்சய் ராய் தனது இறுதி நாள் வரை சிறையில் கழிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறி உள்ளது. சஞ்சய் ராய் மீதான குற்றசாட்டு சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ள நீதிமன்றம் இது அரிதிலும் அரிதான வழக்கு அல்ல என்றும் விளக்கம் அளித்துள்ளது.

கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் குடும்பத்தினருக்கு ரூ.17 லட்சம் ரூபாயை மாநில அரசு இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது. முக்கியமான வழக்குகளில் வெறும் 5 மாதங்களில் விசாரணை முடிந்து தண்டனை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த தீர்ப்பு ஏமாற்றம் அளிப்பதாக மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். கொல்கத்தா போலீசார் விசாரித்திருந்தால் மரண தண்டனை வாங்கி தந்திருப்பார்கள் என்றும் சிபிஐ சரியாக விசாரிக்காமல் விட்டதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த தீர்ப்பு குறித்து தேசிய மகளிர் ஆணையம் அதிருப்தி தெரிவித்துள்ளது. இதனிடையே கொல்கத்தாவாங்க நீதிமன்றம் அறிவித்த இழப்பீட்டு தொகையை வாங்க மறுத்துள்ள மருத்துவ மாணவியின் பெற்றோர் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய இருப்பதாக கூறி உள்ளனர்.

 

The post கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கு: தீர்ப்பு ஏமாற்றமளிப்பதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அதிருப்தி appeared first on Dinakaran.

Read Entire Article