மண்வளத்தைக் காக்கும் சம்பா மோசனம்!

4 hours ago 1

சமீபத்தில் பெய்த மழையால் தமிழகம் கடுமையாக பாதிப்பைச் சந்தித்தது. குடியிருப்புகள், வயல் பகுதிகள், வனப்பகுதிகள் என தமிழ்நிலம் யாவிலும் தண்ணீர் சூழ்ந்து நின்றது. மக்களின் இயல்புநிலை வெகுவாகப் பாதித்தது. இதில் உழவர் பெருமக்கள் அடைந்த இன்னல் மிகவும் துயரமானது. பல இடங்களில் நெற்பயிர்களை வெள்ளம் சூழ்ந்தது. இந்த சமயங்களில் எப்போதும் மழை பெய்து நெற்பயிர்கள் நீரில் மூழ்குவது வாடிக்கையாக இருந்து வருகிறது. ஆனால் பழங்காலத்தில் நம் முன்னோர்கள் எவ்வளவு மழை வந்தாலும், மழைநீர் மட்டத்தைத் தாண்டி வளர்ந்து விளைச்சல் கொடுக்கும் பாரம்பரிய நெல் ரகங்களை நட்டு விளைச்சல் எடுத்தார்கள். பிற்காலத்தில் அந்த ரகங்களைக் கைவிட்டு குறுகிய உயரம் கொண்ட பயிர்களை விளைவித்ததால் இழப்பைச் சந்திக்க வேண்டி இருக்கிறது. இதை உணர்ந்த விவசாயிகள் பலர் தற்போது நமது பாரம்பரிய நெல் ரகங்களைத் தேடித்தேடி பயிரிட்டுவருகிறார்கள்.

இத்தகைய இயற்கைச் சீற்றங்களைத் தாங்கி வளரும் பாரம்பரிய நெல் ரகங்களில் ஒன்றுதான் சம்பா மோசனம். இந்த ரகத்தைப் பயிரிடுவதன் மூலம் மண்வளம் பாதித்த நிலத்தைக் கூட ஆரோக்கியமாக மீட்டு எடுக்கலாம். பள்ளமான பகுதிகளில் பயிரிட ஏற்ற ரகமான சம்பா மோசனம் நூற்று அறுபது நாட்களில் அறுவடைக்குத் தயாராகிவிடும். சேற்றுப் பாங்கான நிலப்பகுதிகளில் இது நன்றாக வளரும். அதிகமாகத் தண்ணீர் தேங்கும் பகுதிகளில் நீர் தேங்குவதற்கு முன்பே இதன் விதைகளைத் தெளித்துவிட்டால் எந்தவித பராமரிப்பும் செய்யாமலேயே மடமடவென்று வேர் பிடித்து முளைத்து எழுந்து விளைச்சல் கொடுக்கும். மழைத்தண்ணீர் தேங்கும் நிலத்திலும், குறைவான நீர் வளம் கொண்ட நிலத்திலும் முளைத்து வரும் இயல்பு கொண்டது.

தமிழகம் முழுவதும் வறட்சியான ஏரிகள், குளங்கள் மற்றும் கண்மாய் களின் கரையோரங்களில் இந்நெல்லைப் பயிரிடலாம். மழை பெய்து தண்ணீரின் அளவு உயரும்போது நீருக்குள்ளேயே கதிர் வளர்ந்து முற்றி மகசூலுக்குத் தயாராகும் இயல்புடையது. வெயில், மழை என எல்லா தட்ப வெப்பச் சூழலையும் தாங்கிக்கொண்டு வளரும் தமிழ் நிலத்தின் இயல்புக்கேற்ற பயிர் இது. சம்பா மோசனம் நெல் 7 அடி உயரம் வரை வளரக்கூடியது. மழைக் காலங்களில், வெள்ளம் எவ்வளவு உயரத்திற்கு வந்தாலும், இந்த நெற்பயிரை மூழ்கடிக்காது. நீருக்கு மேல் வளர்ந்து நல்ல விளைச்சல் தரும்.எந்தவிதமான உரமும் இன்றி இயற்கையாவே வளர்வதால் சம்பா மோசனத்தில் எண்ணற்ற புரதச்சத்துகள், தாதுஉப்புகள் நிறைந்துள்ளன. மேலும் ஆறு, ஏரி, குளம் போன்ற வண்டல் தன்மை மிக்க மண்பரப்புகளில் வளர்வதால், அவற்றில் உள்ள இயற்கையான கனிமவளங்கள் யாவும் இதில் நிறைந்திருக்கும். அயானிக் அளவிலான நுண்ணூட்டச் சத்துக்கள் அதிகம் உள்ளதால் கடினமான உடல் உழைப்பில் ஈடுபடும் தொழிலாளிகளும் சாப்பிடலாம்.

அதுபோலவே, சம்பா மோசனத்தை வறட்சியான நிலங்களிலும் பயிரிடலாம். பொதுவாக சம்பா பட்டமான ஆகஸ்டு மற்றும் செப்டம்பர் மாதங்களில் சாகுபடி செய்ய ஏற்ற நெல் ரகம் இது. ஒற்றை நாற்று முறையிலும் இதனை நடவு செய்யலாம். பாத்தி அமைத்து நடும் முன்பு அமிர்தக் கரைசலில் விதை நேர்த்தி செய்ய வேண்டியது அவசியம். பிறகு, பாத்தியில் நட்டு பதினைந்து நாட்களில் நாற்றாக வளர்த்து எடுக்க வேண்டும். பாத்தி அமைக்கும்போதே நடவு செய்வதற்கான வயலையும் தேர்வு செய்து தழையுரம் இட்டு நன்கு மடக்கி உழ வேண்டும். கிட்டத்தட்ட நான்கு முறை நன்றாக உழவு ஓட்ட வேண்டும். ஓரிரு நாள் கழித்து மறுஉழவு ஓட்டி ஒற்றை நாற்று முறையில் இடைவெளி விட்டு நாற்றுகளை நடவு செய்ய வேண்டும்.

பயிர் நடவு செய்த பதினைந்தாவது நாள் ஜீவாமிர்தக் கரைசல், பஞ்சகவ்யா ஆகியவற்றை பூச்சிக்கட்டுப்பாட்டுக்காகவும் பயிர் உரமாகவும் தரலாம். பூச்சிப் பெருக்கம் அதிகமாக இருந்தால் மீன் அமிலம் தெளிக்கலாம். முறையாக களை நீக்கி, காய்ச்சலும் பாய்ச்சலுமாக நீர்பாய்ச்சி, பயிர் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். பூச்சிகள் தாக்காமல் இருக்க பயிர்களுக்கு வேம்பிலைச் சாறைத் தெளிக்கலாம். இவ்வாறு பாதுகாத்து வர 120வது நாளில் நாற்றில் இருந்து பால்கதிர்கள் முளைத்து வரத்தொடங்கும். இதில் இருந்து 25 நாட்களுக்கு மட்டும் தண்ணீர் விட்டாலே போதும். கடைசி 15 நாட்கள் தண்ணீர் விடாமல் நூற்று அறுபதாவது நாளில் அறுவடை செய்யலாம்.

சம்பா மோசனம் நெல் சாகுபடியில் இயற்கை உரம் தெளித்து, சரியான பராமரிப்பை மேற்கொண்டால் ஒரு ஏக்கருக்கு 40 மூட்டைகள் மகசூல் அள்ளலாம்.

வயலில் மழைநீர் சூழ்ந்து பயிர்கள் மூழ்க நேர்ந்தால் நீருக்குள்ளேயே கதிர் வளர்ந்து மகசூல் கொடுக்கும் அற்புத ரகம் இது.

The post மண்வளத்தைக் காக்கும் சம்பா மோசனம்! appeared first on Dinakaran.

Read Entire Article