பலபயிர் சாகுபடியில் செலவு குறைவு, வருமானம் அதிகம். இதையே இயற்கை முறையில் செய்தால் மண்ணுக்கு வளம், உடலுக்கும் நலம் என நம்மிடம் பேசத்துவங்கினார் உதயக்குமார். திருவண்ணாமலை மாவட்டம் ஒன்னுபுரம், வண்ணாங்குளம் பகுதியை சேர்ந்த இவர் தனது விருப்பத்திற்காக விவசாயத்தில் இறங்கி பலபயிர் சாகுபடியில் கலக்கி வருகிறார். நண்பர்களுடன் பயிர் பராமரிப்புப் பணியில் பிசியாக இருந்த அவரைச் சந்தித்தோம். “பள்ளியில் படிக்கும் காலத்தில் இருந்தே விவசாயம் செய்ய வேண்டும் என்பதில் பெருவிருப்பம். ஆனால் எங்களுக்கு சொந்தமாக நிலம் கிடையாது. என்னுடைய ஆசையை அப்பா அண்ணாமலையிடம் கூறினேன். கட்டிடப்பணியில் ஈடுபட்டு வரும் அவருக்கு தினசரி வருமானம்தான். ஆனால் எனக்காக தான் சேர்த்து வைத்திருந்த பணத்தைப் போட்டு 3 ஏக்கர் நிலத்தை வாங்கிக் கொடுத்தார். இந்த மூன்று ஏக்கர் நிலம் நல்ல கரிசல்மண் நிரம்பியது. அதனால் கிழங்கு வகைகள், வாழை, நெல், பூசணி போன்றவற்றை சாகுபடி செய்ய ஏதுவாக இருக்கிறது. 2010ல் இருந்து நான் இயற்கை விவசாயத்தில் ஈடுபடத் தொடங்கினேன். அக்கம் பக்கம் இருப்பவர்களிடமும், வேலைக்காக தோட்டத்திற்கு வருபவர்களிடமும் விவசாயம் பற்றி தெரிந்துகொண்டேன்.
கரும்பு, மஞ்சள், தங்கச்சம்பா, வெண்டை, பூசணி என்று பயிரிட்டு வந்தேன். தற்போது மூன்று ஏக்கர் நிலத்தில் ஒரு ஏக்கரில் கற்பூர வாழையும் பயிரிட்டு இருக்கிறேன். இதில் பல பயிர் சாகுபடி முறையில் வெண்டை, பிடி கருணை உள்ளிட்டவற்றை சாகுபடி செய்கிறேன். அதேபோல் இரண்டு ஏக்கரில் கடந்த முறை தங்கச்சம்பா பயிரிட்டிருந்தேன். தற்போது வாசனை சீரகச்சம்பா பயிரிட்டு இருக்கிறேன். ஒரு ஏக்கர் நிலத்தில் நடவு செய்ய 800 வாழைக்கன்றுகள் தேவைப்பட்டது. இந்தக் கன்றுகளை அமர்தி உயிரியல் பூங்காவில் இருந்து வாங்கி வந்து நடவு செய்தேன். ஒரு கற்பூர வாழைக்கன்றை ரூ.10 என்ற கணக்கில் வாங்கி, 2*2 என்ற கணக்கில் குழி எடுத்து நடவு செய்தேன். இதற்கு அடியுரமாக மாட்டின் எரு உரத்தை மட்டுமே போட்டேன். இதுபோக நிலத்தைச் சுற்றி இருந்த மக்கிய தழைகளை அள்ளி வந்து குழியில் போட்டு வாழைக்கன்றை நடவு செய்தேன். கடந்த 2023 ஆகஸ்ட் மாதம் வாழைக்கன்றுகளை நடவு செய்தேன். ஆடிகாற்றுக்கு பிறகு மழைக்காலம் தொடங்குவதால் இதுதான் வாழையை நடவு செய்வதற்கு ஏற்ற மாதம்.
வாழைக்கன்றுகளை நடவு செய்த 10லிருந்து 15வது நாளில் வேர்விடத் தொடங்கிவிடும். 20 நாட்களில் இலைகள் வரத்தொடங்கிவிடும். இந்தப்பகுதி எப்போதும் ஈரப்பதமாகவே இருக்கும். அதனால் வாரத்திற்கு ஒருமுறை தண்ணீர் பாய்ச்சினால் போதுமானது. அதனுடன் மழை பெய்தால் அதற்கு கிடைக்க வேண்டிய நைட்ரஜன் சத்து நேரடியாக கிடைக்கும். இதனால் வாழை நல்ல திடகாத்திரமாக வளருவதுடன், வாழைக்குலையும் பெரியதாக இருக்கும். சாகுபடி செய்த ஒன்றரை மாதத்தில் ஒரு வாழைக்கு ஒரு பெட்டி சாண உரம் போடவேண்டும். நடவு செய்ததில் இருந்து மாதம் ஒருமுறை என்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து தோப்பில் களை எடுப்போம். இந்தக் களையை மீண்டும் வாழைமரத்தின் அடிப்பகுதியில் மண்ணோடு சேர்த்து அணைத்து விடுவோம். இது வாழைமரத்திற்கு உரமாகிவிடும். 5வது மாதத்தில் இருந்து வாழையில் இருந்து குலை தள்ளத் தொடங்கும். இதிலிருந்து 15வது நாளில் வாழைப்பிஞ்சுகள் வரத்தொடங்கும். இதில் இருந்து 15வது நாளில் தார் அறுவடை செய்வோம்.
திருவிழா, வீட்டு விசேஷங்களுக்கு ஒரு ஆண்டுக்கு 50 ஜோடி வாழை மரங்களை விற்பனை செய்வேன். ஒரு ஜோடி மரத்தை ரூ.1000 என விற்கிறேன். இதில் ரூ.50 ஆயிரம் வருமானமாக கிடைக்கிறது. மேலும் வாழை இலைகளையும் விற்பனை செய்கிறேன். ஒரு வருடத்திற்கு சராசரியாக 90 கட்டு வாழை இலையை விற்பனை செய்வேன். ஒரு கட்டு கற்பூர வாழை இலை ரூ.1000 என்ற கணக்கில் வியாபாரிகள் தேடி வந்து வாங்கிச் செல்கிறார்கள். இதன்மூலம் ஆண்டுக்கு ரூ.90 ஆயிரம் கிடைக்கிறது. எனது நண்பர்களான ரங்கன், நீலகண்டன் ஆகியோரோடு பராமரிப்புப் பணிகளைப் பார்த்துக்கொள்வதால் கற்பூர வாழையில் அதிக செலவு இல்லை. பூக்கள் கட்டுவதற்கு வாழை நார், உணவகங்களுக்கு வாழைப்பூ என விற்பனை செய்வதிலும் ஒரு குறிப்பிட்ட வருமானம் வருகிறது.
கடந்த முறை பிடி கிழங்கை அறுவடை செய்ததில் 300 கிலோ மகசூல் கிடைத்தது. இதில் ஒரு கிலோ கிழங்கை அருகில் இருக்கும் திருவண்ணாமலை வியாபாரிகளுக்கு ரூ.50 என்ற கணக்கில் விற்பனை செய்தேன். இதன்மூலம் ரூ.15 ஆயிரம் லாபம் கிடைத்தது. இதுபோக பூசணி, சிறகு அவரை, தம்மட்டை அவரையும் சாகுபடி செய்திருக்கிறேன். இரண்டு ஏக்கர் நிலத்தில் வாசனை சீரக சம்பா நெல் சாகுபடி செய்திருக்கிறேன். கடந்த முறை தங்கச்சம்பா சாகுபடி செய்ததில் 1 டன் நெல் கிடைத்தது. தற்போது வாசனை சம்பாவிலும் கதிர் வந்திருக்கிறது. அடுத்த வாரத்தில் வாசனை சம்பாவை அறுவடை செய்ய திட்டமிட்டுள்ளேன். இதிலும் தங்கச்சம்பாவில் கிடைத்த மகசூல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன்’’ என்று நம்பிக்கையுடன் பேசுகிறார்.
தொடர்புக்கு:
உதயகுமார்: 97862 14519
கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 900 வாழைத்தார்கள் மகசூலாக கிடைத்திருக்கிறது. இந்தத் தார்களை திருவண்ணாமலை, வேலூர் பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகளுக்கு ரூ.300க்கு விற்பனை செய்கிறேன். வாழைத்தார் விற்பனையில் மட்டும் ஆண்டுக்கு ரூ.2.70 லட்சம் வருவாய் கிடைக்கிறது.
The post இயற்கை முறையில் பலபயிர் சாகுபடி! appeared first on Dinakaran.