கொல்கத்தா: கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சஞ்சய் ராய் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கார் மருத்துவமனை வளாகத்தில் கடந்த ஆகஸ்ட் 9 அன்று பெண் பயிற்சி மருத்துவர் கொல்லப்பட்டு சடலமாகக் கிடந்தார். விசாரணையில் அவர் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்டது தெரியவந்தது. இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கொல்லப்பட்ட பெண்ணிற்கு நீதி கிடைக்க மருத்துவர்கள், பொதுமக்கள் என பலரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் மருத்துவமனையில் வேலை பார்த்து வந்த சஞ்சய் ராய் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு கொலை நடந்த அடுத்த நாளே கைது செய்யப்பட்டார். ஆர்ஜி கார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் மற்றும் காவல்துறை அதிகாரி அபிஜித் மோண்டல் ஆகியோர் சாட்சிகளை அழிக்கவும், மாற்றியமைக்கவும் செய்ததாகக் கூறி சிபிஐ அவர்களைக் கைது செய்திருந்தது. ஆனால், அவர்கள் மீது 90 நள்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சிபிஐ தவறியதால் அவர்களுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
இதனிடையே, இந்த வழக்கில் 50க்கும் மேற்பட்டோரிடம் சிபிஐ விசாரணை நடத்தியது. பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கு சீல்டா மாவட்ட கோர்ட்டில் நடைபெற்று வந்தது. அனைத்து வாதங்களும் கடந்த 9ம் தேதி நடைபெற்றது. அதன்பின்னர், தீர்ப்பிற்காக வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் சீல்டா மாவட்ட கோர்ட்டு இன்று தீர்ப்பளித்தது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சஞ்சய் ராய் குற்றவாளி என்று கோர்ட்டு தீர்ப்பளித்தது. குற்றவாளி சஞ்சய் ராய்க்கான தண்டனை விவரம் நாளை மறுதினம் (20ம் தேதி) அறிவிக்கப்படும் என்று கோர்ட்டு தெரிவித்துள்ளது.
The post கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கு.. சஞ்சய் ராய் குற்றவாளி; திங்களன்று தண்டனை விவரம் அறிவிக்கப்படும் என நீதிமன்றம் தீர்ப்பு!! appeared first on Dinakaran.