கொல்கத்தா அணிக்கு எதிராக பஞ்சாப் 201 ரன் குவிப்பு

9 hours ago 2

கொல்கத்தா: கொல்கத்தா அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் நேற்று, பஞ்சாப் அணி, 4 விக்கெட் இழப்புக்கு 201 ரன் குவித்தது. ஐபிஎல் 18வது தொடரின் 44வது லீக் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடந்தது. அதில், பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணியின் பிரியன்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங், துவக்கம் முதல் அதிரடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர். முதல் 6 ஓவர்களின் முடிவில் பஞ்சாப் 56 ரன்களை குவித்தது. 9வது ஓவர் முடிவில் பஞ்சாப் அணி, 74 ரன்கள் எடுத்திருந்த நிலையில், 10வது ஓவரில் பிரியன்ஷ் ஆர்யா மீண்டும் அடித்து ஆடத் துவங்கினார்.

27 பந்துகளில் அவர், 2 சிக்சர், 8 பவுண்டரிகளுடன் 50 ரன்களை எட்டினார். 10.3 ஓவரில், பஞ்சாப் அணி விக்கெட் இழப்பின்றி 100 ரன்களை கடந்தது. பின்னர், ஆண்ட்ரூ ரஸல் வீசிய 12வது ஓவரில், வைபவ் அரோராவிடம் கேட்ச் தந்து ஆர்யா அவுட்டானார். அவர், 35 பந்துகளில், 4 சிக்சர், 8 பவுண்டரிகளுடன் 69 ரன் குவித்திருந்தார். பின்னர், பிரப்சிம்ரனுடன், கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் இணை சேர்ந்தார். 13வது ஓவரில், பிரப்சிம்ரன் 50 ரன்களை கடந்தார். அதன் பின்னரும் அவரது அதிரடி தொடர்ந்ததால் ரன் ரேட் கணிசமாக உயரத் துவங்கியது.

இந்நிலையில், வைபவ் அரோரா வீசிய 15வது ஓவரில், பிரப்சிம்ரன் துாக்கியடித்த பந்தை, ரோமேன் பாவல் பாய்ந்து பிடித்து அவுட்டாக்கினார். அப்போது அணியின் ஸ்கோர், 160. பிரப்சிம்ரன், 49 பந்துகளை எதிர்கொண்டு, 6 சிக்சர், 6 பவுண்டரிகளுடன் 83 ரன்களை விளாசியிருந்தார். அதன் பின், ஷ்ரேயாசுடன், கிளென் மேக்ஸ்வெல் இணை சேர்ந்தார். ஆனால், 17வது ஓவரை வீசிய வருண் சக்ரவர்த்தி பந்தில், மேக்ஸ்வெல் (7 ரன்) கிளீன் போல்டாகி வெளியேறினார். பின்னர், மார்கோ யான்சென் களமிறங்கினார்.

சிறிது நேரத்தில் யான்செனும் (3 ரன்), அரோரா பந்தில் ஆட்டமிழந்தார். அதையடுத்து, ஜோஷ் இங்கிலீஸ் களமிறங்கினார். 20 ஓவர் முடிவில், பஞ்சாப் 4 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்களை குவித்தது. ஷ்ரேயாஸ் ஐயர் 25 ரன், இங்கிலீஸ் 11 ரன்னுடன் களத்தில் இருந்தனர். கொல்கத்தா தரப்பில், வைபவ் அரோரா 2, ரஸல், வருண் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். அதைத் தொடர்ந்து, 202 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியது.

The post கொல்கத்தா அணிக்கு எதிராக பஞ்சாப் 201 ரன் குவிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article