சென்னை,
சென்னை வளசரவாக்கம் திருப்பதி நகரில் வசித்து வருபவர் ரஷிதா. இவரது வீட்டில் சிறுவர்கள் உள்பட 5 பேர் கொத்தடிமைகளாக நடத்தப்பட்டு வருவதாகவும், அவர்களை ரஷிதா அடித்து சித்ரவதை செய்து வருவதாகவும் கிராம நிர்வாக அலுவலர் தங்கபாண்டியன் புகார் அளித்தார்.
இந்த புகாரிபேரில் ரஷிதாவின் வீட்டில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையின்போது, அங்கு 2 சிறுவர்கள் உள்பட 5 பேர் கொத்தடிமைகளாக இருந்து வந்தது தெரியவந்தது. இதில் பூந்தமல்லியைச் சேர்ந்த 13 வயது சிறுவன், 20 வயது பெண் ஆகியோர் ஒன்றரை லட்சம் முன்பணம் கொடுத்து வாங்கப்பட்டதும், அவர்கள் 6 ஆண்டுகளாக கொத்தடிமைகளாக வேலை செய்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதே போல் 3 லட்சம் ரூபாய் முன்பணம் கொடுத்து வாங்கப்பட்ட திருப்பதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி 3 ஆண்டுகளாகவும், 4 லட்சம் ரூபாய்க்கு வாங்கப்பட்ட 20 வயது பெண் 4 ஆண்டுகளாகவும் மற்றும் ஒரு 34 வயது பெண்ணும் இந்த வீட்டில் கொத்தடிமைகளாக வேலை செய்து வந்துள்ளனர்.
இவர்கள் 5 பேரும், பங்களா போல் இருக்கும் ரஷிதாவின் வீட்டில் ஒட்டுமொத்த பணிகளையும் செய்து வந்துள்ளனர். இவர்களை ரஷிதா அடித்து துன்புறுத்தியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர்கள் 5 பேரையும் சமூக நலத்துறை அதிகாரிகள் மீட்டுள்ள நிலையில், சென்னை சென்ட்ரல் ஆர்.டி.ஓ. சதீஷ்குமார், 5 பேரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தினார்.
இதையடுத்து, மீட்கப்பட்ட 5 பேரும் மயிலாப்பூர், கெல்லீஸ், தாம்பரம் அரசு காப்பகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து ரஷிதாவை கைது செய்த வளசரவாக்கம் போலீசார், அவர் மீது குழந்தை தொழிலாளர் ஒழிப்புச் சட்டம், குழந்தைகளை கொடுமைப்படுத்துதல், கொத்தடிமை ஒழிப்புச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.