கொடைக்கானல் ஏரியின் கரை தூய்மைப்படுத்தும் பணி: நகர்மன்ற தலைவர் ஆய்வு

3 hours ago 2

கொடைக்கானல்: கொடைக்கானல் ஏரியின் கரை தூய்மைப்படுத்தும் பணியை நகர்மன்ற தலைவர் ஆய்வு செய்தார். கொடைக்கானல் நகரின் இதயம் போன்றது கொடைக்கானல் ஏரி பகுதியாகும். கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவரும் இடங்களில் முக்கியமானதும் இந்த ஏரிதான். ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்ட இந்த ஏரி கொடைக்கானல் நகராட்சி பின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த ஏரியின் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் ஏரியின் கரைப்பகுதிகள் தூய்மைப்படுத்தும் பணி நடந்து வருகிறது.

10 லட்சம் ரூபாய் செலவில் ஏரியின் கரைப்பகுதிகள் அனைத்தும் தூய்மைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்தப் பகுதியில் உள்ள புற்க்கள், புதர் செடிகள், களைச் செடிகள் உள்ளிட்டவைகள் பணியாளர்களைக் கொண்டு அகற்றப்பட்டு வருகிறது. கடந்த பல தினங்களாக இந்த பணி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் நேற்று இந்த பணியினை கொடைக்கானல் நகர்மன்ற தலைவர் செல்லத்துரை, நகராட்சி ஆணையாளர் சத்தியநாதன், துணைத் தலைவர் மாயக்கண்ணன், நகராட்சி சுகாதார ஆய்வாளர் மாரிமுத்து உள்ளிட்ட அலுவலர்கள் ஆய்வு செய்தனர். பணிகளை விரைந்து முடிக்க நகர்மன்ற தலைவர் அறிவுறுத்தினார்.

கொடைக்கானல் நகராட்சி ஆணையாளர் சத்யநாதன் கூறியதாவது. கொடைக்கானல் ஏரி தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்று வரும் நிலையில் ஏரியின் கரைப்பகுதியில் உள்ள புதர் செடிகள் உள்ளிட்டவைகள் அகற்றப்பட்டு வருகிறது. நாள்தோறும் 35க்கும் அதிகமான பணியாளர்கள் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இவர்களுக்கு சிறப்பு உபகரணங்கள், படகுகள் வழங்கப்பட்டு இந்த பணிகள் செய்யப்பட்டு வருகிறது. விரைவில் இந்த பணிகள் முடிவடையும். ஏரியும் அழகாக காட்சி தரும். ஏரிக்குள் தேவையற்ற பொருட்களை குறிப்பாக மது பாட்டில்கள் பிளாஸ்டிக் பொருட்களை சுற்றுலாப் பயணிகள் வீசினால் எளிதில் கண்டுபிடிக்க முடியும். அந்த பொருட்களை அகற்றவும் முடியும். தற்போது ஏரியின் கரைப்பகுதி சுத்தப்படுத்தப்பட்டு வருகிறது. 10 லட்சம் ரூபாய் செலவில் இப்பணிகள் நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

The post கொடைக்கானல் ஏரியின் கரை தூய்மைப்படுத்தும் பணி: நகர்மன்ற தலைவர் ஆய்வு appeared first on Dinakaran.

Read Entire Article