கொடைக்கானல்: கொடைக்கானலில் கோடை சீசனுக்கு தயாராகும் வகையில் ரோஜா பூங்காவில் கவாத்து, உரமிடுதல் பணிகள் துவங்கின. கொடைக்கானல் ரோஜா பூங்கா அப்சர்வேட்டரி சாலையில் அமைந்துள்ளது. தோட்டக்கலை துறை பராமரிப்பில் உள்ள இந்த பூங்கா 10 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இங்கு 1,500 வகைகளை கொண்ட ரோஜா மலர்கள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இப்பூங்காவில் பூத்து குலுங்கும் பல வண்ண ரோஜா மலர்களை சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருவர். இந்நிலையில் வரும் ஏப்ரல், மே மாதம் கோடை சீசன் காலங்கள் கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகளை மேலும் கவரும் விதமாக ரோஜா பூங்கா தயாராகி வருகிறது. இதற்காக தற்போது இப்பூங்காவில் உள்ள பல ஆயிரக்கணக்கான ரோஜா செடிகளில் கவாத்து எடுக்கப்பட்டு உரம் இடும் பணி துவங்கியுள்ளது.
கவாத்து எடுக்கப்பட்ட ரோஜா செடிகள் சேதம் அடையாத வண்ணம் கார்பன் ஆக்சைட் குளோரைடு என்ற பூஞ்சான கொல்லி வெட்டப்பட்ட இடங்களில் தடவப்பட்டு வருகிறது. இதுகுறித்து தோட்டக்கலை துறை அலுவலர் பார்த்தசாரதி கூறியதாவது: ரோஜா பூங்காவில் ஏப்ரல் இரண்டாம் வாரத்தில் இருந்து கவாத்து செய்யப்பட்ட ரோஜா செடிகளில் இருந்து பூக்கள் பூக்க துவங்கும். மே மாதம் முழுமையாக பூத்து குலுங்கும். ரோஜா செடிகளில் கவாத்து எடுத்தல், உரமிடுதல் பணி இன்னும் 25 நாட்களில் முடிவு பெறும். இதற்காக கூடுதல் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு கூறினார்.
The post கொடைக்கானலில் கோடை சீசனுக்கு தயாராகும் ரோஜா பூங்கா: கவாத்து, உரமிடுதல் பணிகள் துவக்கம் appeared first on Dinakaran.