
புவனேஸ்வர்,
ஒடிசாவில் புவனேஸ்வர் மாநகராட்சியின் கூடுதல் ஆணையாளராக இருப்பவர் ரத்னாகர் சாஹூ. அவர் வேலையில் இருந்தபோது, நேற்று காலை சில மர்ம நபர்கள் அடித்து, கடுமையாக தாக்கி அலுவலகத்தில் இருந்து வெளியே இழுத்து போட்டனர். இதுபற்றிய வீடியோ வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியது.
பா.ஜ.க. பிரமுகரின் முன்னிலையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அந்த பிரமுகருக்கு கட்சி எம்.எல்.ஏ.வுடன் தொடர்பு உள்ளது. அந்த அரசு அதிகாரி, பட்டப்பகலில் மக்களின் குறைகளை கேட்டு கொண்டிருந்தபோது இந்த துயர சம்பவம் நடந்துள்ளது. இதுபற்றி எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இந்த சம்பவத்திற்கு முன்னாள் முதல்-மந்திரி நவீன் பட்நாயக் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். இதனை தொடர்ந்து, பிஜூ ஜனதா தள தொண்டர்கள் நேற்றிரவு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் பற்றி விசாரிக்கப்பட்டு வருகிறது. தொடர்புடைய நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என டி.சி.பி. பிரகாஷ் சந்திரா கூறினார்.
இந்நிலையில், இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்ட சாஹூ இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, நேற்று காலை 11.45 மணியளவில் மக்களின் குறைகளை நான் கேட்டு கொண்டிருந்தேன். அப்போது ஜீவன் என்ற நபருடன் 6 பேர் வந்தனர். அவர் என்னிடம் ஜக்கா பாயிடம் தவறாக நடந்து கொண்டீரா? என கேட்டார். அதற்கு, இல்லை என்றேன்.
ஆனால், திடீரென அவர்கள் கொடூர தாக்குதல் நடத்தினர். என்னை தரதரவென வெளியே இழுத்து சென்றனர். கடத்தவும் முயன்றனர். வாகனம் ஒன்றில் அழைத்து சென்றனர். மேயர் என்னை காப்பாற்ற வந்தார். இந்த வழக்கில் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு உள்ளது. சட்ட நடைமுறையின் மீது தனக்கு நம்பிக்கை உள்ளது என அவர் கூறியுள்ளார்.