ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது பாஜவின் நீண்டகால திட்டங்களில் இதுவும் ஒன்றாகும். அதனால் தான் தேர்தல் வாக்குறுதியில் அறிவித்ததோடு மட்டுமல்லாது தனது கோஷமாகவே தொடர்ந்து முழங்கி வருகின்றது. தேர்தல் வெற்று கோஷமாக நின்றுவிடாமல் ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக ஆராய முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயர்மட்டக் குழுவையும் அமைத்து அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது. இக்குழுவானது அரசியல் கட்சிகள், அரசியல் வல்லுநர்கள், சமூக அமைப்புகளுடன் விரிவாக ஆலோசித்து 18,626 பக்கங்கள் கொண்ட அறிக்கையை குடியரசு தலைவரிடம் கடந்த மார்ச் மாதம் சமர்ப்பித்தது.
உயர் மட்டக்குழு அறிக்கையின் பரிந்துரைகளை பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அமைச்சரவை ஏற்றுக்கொண்டு நேற்று முன்தினம் ஒப்புதலும் அளித்துள்ளது. சட்ட மசோதாவிற்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பது என்பது அடுத்தகட்ட நகர்வுகளுக்கு பாஜ அரசு தயாராகிவிட்டது என்பதை உறுதி செய்துள்ளதோடு நடப்பு நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரிலேயே மசோதா தாக்கல் செய்யவும் முடிவு செய்துள்ளது.
ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது தேர்தல் சீர்திருத்தங்களுக்கான ஒரு பெரிய நடவடிக்கை என்று ஒன்றிய அரசு பொது வெளியில் கூறினாலும் இதன் பின்னணியில் தனக்கான ஒரு மிகப்பெரிய ஒரு திட்டத்தை முன்வைத்தே கொஞ்சம் கொஞ்சமாக காய்களை நகர்த்தி வருகின்றது. ஒரே மதம், ஒரே மொழி, ஒரே உணவு, ஒரே பண்பாடு, ஒரே தேர்வு, ஒரே வரி, ஒரே ரேஷன் கார்டு என்ற வரிசையில்தான் ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதும். ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக பல்வேறு சாதக, பாதக அம்சங்கள் கூறப்படாலும், இதை அமல்படுத்துவதில் பல சவால்கள் உள்ளன.
ஒரே நாடு ஒரே தேர்தல் சட்டத்தை அமல்படுத்த அரசியல் அமைப்பில் திருத்தம் கொண்டு வர வேண்டியது அவசியம். நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு மெஜாரிட்டி இருந்தால்தான் இதை நிறைவேற்ற முடியும். அது மட்டுமல்லாது நாட்டில் உள்ள மொத்த மாநிலங்களில் பாதிக்கும் மேற்பட்ட மாநிலங்கள் இதை ஏற்றுக்கொண்டு ஒப்புதல் அளிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் கூட்டணி கட்சிகளின் ஆதரவும், அதிமுக போன்ற மறைமுக கூட்டணி கொண்ட சில கட்சிகளின் ஆதரவும் மோடி அரசுக்கு நிச்சயம் இருக்கும்.
அதே வேளையில் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஒன்றிய அரசால் மாநில உரிமைகளுக்கு எப்போதெல்லாம் பாதிப்பு வருகிறதோ அப்போதெல்லாம் முதல் குரலாக ஒலிப்பது திமுகவின் குரல்தான். ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரத்திலும் ஆரம்பத்தில் இருந்தே மிகக்கடுமையாக எதிர்த்து வருகின்றது.
அந்த வகையில் திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் ஒரே நாடு தேர்தல் என்பது கொடுங்கோன்மைக்கு வழிவகுக்கும் என்றும், நடைமுறைக்கு ஒவ்வாத, மக்களாட்சிக்கு எதிரான இந்த நடவடிக்கை மாநிலங்களின் குரலை அழித்துவிடும் என்பதோடு கூட்டாட்சியியலைச் சிதைத்துவிடும் என்றும் காட்டமாக அறிக்கை வெளியிட்டுள்ளார். ‘‘இந்திய ஜனநாயகத்தின் மீதான இந்த தாக்குதலை நம் ஆற்றல் அனைத்தையும் ஒன்று திரட்டி எதிர்ப்போம். இந்தியாவே எழு’’ என்று அவர் சூளுரைத்திருப்பது பேரறிஞர் அண்ணாவின் வழியில் மாநில சுயாட்சி தத்துவத்தை நிலைநாட்ட மீண்டும் ஒரு போருக்கு திமுக தயாராகிவிட்டதை காட்டுகிறது.
The post கொடுங்கோன்மைக்கு வழி appeared first on Dinakaran.