கிரகங்களே தெய்வங்களாக
ஜோதிடத்தை தெய்வங்களோடும் கிரகங்களோடும் புவியில் உள்ள இடங்களோடும் ராசி மண்டலங்களோடும் இணைய வைத்து ஆராய்ச்சி செய்வது என்பது ஜோதிடத்தை நிகழ் கால வாழ்வோடு கொண்டு வருவதற்கு இணையானதாகும். அவ்வாறு, நிகழ்காலத்தோடு இணைக்கும் பொழுது பலன்கள் எளிமையாகின்றன நிகழ்வுகள் விரைவாகின்றன என்பது சூட்சுமம் உண்மை. கிருதா யுகத்தில் ரத்தின புரமாகவும் த்ரேதா யுகத்தில் வில்வ வனமாகவும் துவார யுகத்தில் செண்பக வனமாகவும் கலியுகத்தில் முல்லை வனமாகவும் விளங்குகிறது இந்த திருமுல்லைவாயல். இவ்விடத்தில் உள்ள மாசிலாமணீஸ்வரர் கோயில் அப்பர், சுந்தரர், திருநாவுகரசர் ஆகியோரால் பாடல் பெற்ற தலமாக உள்ளது. தொண்டை நாட்டின் வடதிசையில் முரடர்களாக இருந்த வாணன், ஓனான் என்ற குறுநில மன்னர்கள் ஏராளமான நிலங்களை பிடிப்பதற்கு அவதூறுகளை செய்து வந்தார்கள். இதை அறிந்த தொண்டைமான் காஞ்சியிலிருந்து படைகளோடு கிளம்பி திருமுல்லைவாயல் வந்த பொழுது மாலை நேரமாகி விட்டது. ஆகவே, அங்கேயே தங்கி மறுநாள் அவர்களின் தெய்வமான வைரவன் வரத்தின் உதவியால் தொண்டைமான் படைகள் விரட்டி அடிக்கப்பட்டன. இனி போர் செய்யலாகாது என காஞ்சிக்கு தொண்டைமான் திரும்பும் வழியில் யானையின் காலில் முல்லைக் கொடி பின்னிப் பிணைந்து யானை நகர முடியாமல் இருந்தது. யானையின் மேலிருந்த தொண்டைமான் தனது உடைவாளால் முல்லைக் கொடியை வெட்டவே ரத்தம் பீறிட்டு வந்தது. கிழே இறங்கி அவ்விடத்தை தொண்டைமான் பார்க்கவே அவ்விடத்தில் சுயம்புவாக லிங்கம் திருஉருவாக இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தான். பின் லிங்கத்தை வெட்டி விட்டேனே என மனம் வருந்தினான். அவ்வாறு வருந்திய மன்னன் தனது உடைவாளால் தனது கழுத்தை அறுத்துக் கொள்ள முயன்றான். அக்கணம் மன்னன் முன் இறைவன் தோன்றி…”மன்னனே வாளால் வெட்டுண்டாலும் மாசிலா மணியாக (குறையில்லா மணியாக) இருப்போம் வருந்தற்க நீ நந்தியின் துணையுடன் போர் செய்து வெற்றி பெறுவாயாக” எனக் கூறி மறைந்தார். இறைவன். பிறகு தொண்டைமான் நந்தியின் துணையோடு அவர்களை வென்று அவர்களின் அரண்மனைகளில் இருந்த வெள்ளருக்குத் தூண்களை எடுத்து வந்து திருமுல்லைவாயல் இறைவனுக்கு திருக்கோயில் கட்டினான். இன்றும் அந்த வெள்ளருக்குத் தூண்கள் மாசிலாமணீஸ்வரர் கருவறையில் வாயிலில் உள்ளது. இங்கு கொடியிடை நாயகி சமேத மாசிலாமணீஸ்வரர் திருஉருவிற்கு சூரியன், செவ்வாய், வியாழன் மற்றும் சனி கிரகங்களின் கூட்டாக நாமம் உள்ளது.
* பௌர்ணமி அன்று இத்தலத்திற்கு சென்று அங்குள்ள நீர்நிலையில் நீராடி சுவாமி தரிசனம் செய்து முல்லைக் கொடியில் மஞ்சள் கயிறு கட்டி வந்தால் திருமணம் நடந்தேறும்.
* நீதிமன்றத்தில் வழக்கு உள்ளவர்கள் ஏகாதசி திதி அன்று நந்தி பகவானை வேண்டி வெற்றிலை மாலை அணிவித்து வந்தால் வம்பு வழக்கிலிருந்து விரைவான முடிவுகள் உண்டாகும்.
*சதுர்த்தி திதி அன்று சுவாமிக்கு ஒரு வெற்றிலை மாலையும் நந்திக்கு 12 வெற்றிலை மாலையும் அணிவித்தால் வேலையாட்கள் அமையப் பெறுவார்கள் மேலும், பூர்விக சொத்துக்களில் பிரச்னை உள்ளவர்களுக்கு தீர்வுகள் உண்டாகும்.
* தீராத பிணி உள்ளவர்கள் பிரதோஷ வேளையில் செய்யும் அபிஷேக தீர்த்தத்தை பிணி உள்ளவர்களுக்கு கொடுத்தால் எப்பேர்பட்ட பிணியும் குணமாகும்.
* யாருக்காவது களத்திர பாவகம் ரிஷபமாக அமைந்து அதில் வியாழன், செவ்வாய் மற்றும் சனி தொடர்பு பெற்றிருந்தால் இத்தலத்திற்கு தொடர்ந்து ரோகிணி நட்சத்திரத்தன்று இக் கோயிலில் சென்று அர்ச்சனை செய்து வந்தால் திருமணப் பிராப்தி உண்டாகும்.
ஜோதிட ஆய்வாளர் திருநாவுக்கரசு
The post கொடியிடை நாயகி சமேத மாசிலாமணீஸ்வரர் appeared first on Dinakaran.