
சென்னை,
தமிழக சட்டசபையில் பல்வேறு துறைகளின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று அவையில் உறுப்பினர்களின் கேள்விக்கு அமைச்சர்கள் பதிலளித்தனர். அப்போது அமைச்சர் துரைமுருகன் பேசியது அவையில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியது.அமைச்சர் துரைமுருகன் மற்றும் எம்.எல்.ஏ அன்பழகன் இடையே நடைபெற்ற விவாதம் வருமாறு:
கும்பகோணம் எம்.எல்.ஏ அன்பழகன் : எங்களது தொகுதியில் 3 அணைக்கட்டு கட்ட வேண்டும். ஒரு அணைக்கட்டாவது கட்ட வேண்டும்.
அமைச்சர் துரைமுருகன்: முன்பு கேட்ட கேள்வி. தற்போது உறுப்பினர் கேட்கும் கேள்வி வேறு. கேள்வி ஒரு பதிலை தயார் செய்ய வேண்டும் என்றால், உறுப்பினர் வேறு எந்த கேள்வி எல்லாம் கேட்டு உள்ளார் என்று கேட்டு அதற்கான பதிலை தயார் செய்து வருவோம். அப்போது தான் அவர் அதை மீறி போக முடியாது. இந்த மாதிரி நேரத்தில் தனிக் கேள்வி போட்டு இருக்க வேண்டும். அன்பழகனுக்கு ஒரு அணையாவது நான் கட்டி தருகிறேன்.
பேரவைத் தலைவர்: உங்களின் நீண்ட நெடிய நீர்வளத்துறை அனுபவம் மற்றும் ஞாபக சக்தியை பார்த்து பதில் கிடைக்கும் என்று நம்பி கேள்வி கேட்கிறார்கள்
துரைமுருகன் : தற்போது கூட ஒரு கேள்விக்கு பதில் தயார் செய்து 2 முதல் 3 மணி நேரத்தில் ஒத்திகை பார்த்து விட்டு தான் வருவேன். இவ்வளவு நம்பிக்கை வைத்து இருக்கும் போது நான் கூறுவது தவறாக இருக்க கூடாது என்ற பயமும் உள்ளது" இவ்வாறு அவர் கூறினார்.