கேரளாவுக்கு காரில் கடத்த முயன்ற ரூ.15.10 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்

22 hours ago 2

செங்கோட்டை: தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு காரில் கடத்த முயன்ற ரூ.15.10 லட்சம் ஹவாலா பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். தென்காசி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கும், கேரளாவில் இருந்து தமிழகத்திற்கும் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் கடத்தப்பட்டு வருகிறது. இதனை தடுக்கும் வகையில் தமிழக – கேரள எல்லை பகுதியான ஆரியங்காவு கலால் சோதனைச் சாவடியில் கேரள அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் அதிகாரிகள் நேற்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது தமிழகத்திலிருந்து கேரளா நோக்கி சென்ற தமிழக பதிவு எண் கொண்ட காரை சந்தேகத்தின் பேரில் மறித்து சோதனை செய்தனர். அப்போது, அந்த வாகனத்தில் இருந்த பேக் ஒன்றில் கட்டுக் கட்டாக 500 ரூபாய் நோட்டுகள் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து இது தொடர்பான ஆவணங்களை காரில் சென்ற நபரிடம் போலீசார் கேட்டுள்ளனர். ஆனால், எந்த விதமான ஆவணங்களும் காரில் சென்ற நபரிடம் இல்லை என தெரிகிறது. இதையடுத்து அந்த நபரையும், காரையும் தென்மலை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

போலீஸ் விசாரணையில், காரில் வந்தவர் விருதுநகரைச் சேர்ந்த ராமசாமி மகன் பாண்டியன் என்பதும், கேரள மாநிலம் எர்ணாகுளத்துக்கு பணத்தை கொண்டு செல்வதாகவும், ஆனால் யாரிடம் கொடுக்க வேண்டும் என்று எனக்கு தெரியாது எனவும் தெரிவித்தார். மேலும் தன்னை ஒரு நபர் தொடர்பு கொள்வார் என கூறிய நிலையில், தான் இந்த பணத்தை எடுத்து வந்ததாக போலீசாரிடம் தெரிவித்தனர்.

இதை தொடர்ந்து பாண்டியனை கைது செய்த கேரள போலீசார் அவரிடம் இருந்த ஹவாலா பணம் ரூ.15.10 லட்சத்தை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கேரளாவுக்கு காரில் கடத்த முயன்ற ரூ.15.10 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல் appeared first on Dinakaran.

Read Entire Article